Published : 12 Jun 2019 02:16 PM
Last Updated : 12 Jun 2019 02:16 PM
தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் மறக்கவியலாத படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் ‘வசந்த மாளிகை’ (1972). வணிகரீதியில் மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கட்டிய வசந்த மாளிகையும் இதன் பாடல்களும் நாயகி வாணிஸ்ரீயின் கொண்டையும் ரசிகர்கள் நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்பவை. ஆனால், இவற்றையெல்லாம்விட முதன்மையான அம்சம் வாணிஸ்ரீ ஏற்று நடித்த நாயகி கதாபாத்திரமான லதாவின் தன்மானம்.
எந்தச் சூழலிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத லதாவின் பாத்திரச் சித்தரிப்பு சிறப்புக் கவனம் கொள்ளத்தக்கது. நமது ஆழ்ந்த மறதியின் அடியாழத்தில் மறைந்துகிடக்கும் அந்தச் சுயமரியாதைச் சுடரை இந்த வாரம் சந்திக்கலாம்.
‘வசந்த மாளிகை’ திரைப்படத்தின் கதை: அரெகபூடி (கோடூரி) கௌசல்யா தேவி, வசனம்: பாலமுருகன். இயக்கம்: கே.எஸ்.பிரகாஷ் ராவ். லதா ஏழைக் குடும்பத்துப் பெண். ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவுக்கு முன்னரே குடும்பத்தின் பாரத்தைச் சுமந்துகொண்டவர். ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் தந்தை, தாய், கல்யாண வயதுத் தங்கை, படிக்கும் வயதில் தம்பி, தறுதலை அண்ணன், ஊதாரி அண்ணி ஆகியோரைக் கொண்ட அந்தக் குடும்பத்தைத் தனது வருமானத்தில் போஷித்துவருகிறார் லதா.
எதிரும் புதிரும்
இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் நிலைதடுமாறும் விமானத்துக்குள் தள்ளாடியபடியே பாடியாடும் விஜய் ஆனந்தை விமானப் பணிப்பெண்ணான லதா சந்திக்கிறார். அழகாபுரி ஜமீன் குடும்பம் ஒன்றின் இளைய மகன் விஜய் ஆனந்த். யாரையும் பார்த்தவுடன் நினைவில் கொள்ளும் வகையிலான மனிதரல்ல அவர்.
எப்போதும் தன்னை மதுவின் பிடியில் ஒப்படைத்துவிட்டு அதன் கதகதப்பிலேயே வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்க முயலும் வாலிபர். குடும்பப் பொறுப்போ வாழ்க்கை லட்சியமோ இல்லாதவர். லதாவோ இதற்கு நேரெதிரான குணம் கொண்டவர். மிகவும் பொறுப்பானவர். இவர்களிடையே காதல் ஏற்பட ஒரு தமிழ்ப் படத்துக்கு இந்த முரண் போதாதா?
ஆகாயத்தில் பறக்கும் ஆபத்து நிறைந்த வேலையை விட்டுவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தவே வேறு வேலை தேடும் நிர்பந்தத்துக்கு ஆளாகிறார் லதா. ஹோட்டல் ஒன்றில் வரவேற்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு வருகிறார். வந்த இடத்தில் மேலாளர் லதாவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முனைகிறார். நாயகியால் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?
நாயகிக்கோர் ஆபத்து எனும்போது நாயகன் வந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் திரைப்படத்தின் எழுதப்படாத விதியாயிற்றே. நாயகியின் மானத்தை நாயகன் தனது வீரத்தால் காப்பாற்ற வேண்டுமே. நிற்கவே இயலாத அளவுக்கு மூக்குமுட்ட குடித்துவிட்டுத் தள்ளாடும் ஆனந்த் வருகிறார். மேலாளரைப் புரட்டியெடுத்து லதாவைக் காப்பாற்றுகிறார். தனது ஓவர்கோட்டையும் அதிலிருந்த பணக் கட்டையும் விட்டுவிட்டு அப்படியே சென்றுவிடுகிறார். அவற்றை ஒப்படைப்பதற்காக மீண்டும் ஆனந்தைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது லதாவுக்கு.
இப்போது தனது மனங்கவர்ந்த மங்கையருடன் நீச்சல்குளத்தில் தண்ணியில் மிதக்கிறார் ஆனந்த். அங்கே வரும் லதா, ஹோட்டலில் நடந்தவற்றை விளக்குகிறார். லதாவின் நிலைமையை உணர்ந்த ஆனந்த் தனது தனிச் செயலராக லதாவைப் பணியாற்றக் கோருகிறார். ஆனந்தின் நடவடிக்கைகளைச் சில சம்பவங்களால் அறிந்துகொண்ட லதா, தனது சுயமரியாதைக்குப் பங்கம் வராதவரை தன்னால் பணியாற்ற முடியும் என்று நிபந்தனை விதிக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்டு லதாவைச் செயலராகப் பணியில் ஆனந்த் சேர்த்துக்கொள்கிறார்.
அதிகாரமும் அகம்பாவமும்
அழகாபுரி ஜமீனுக்கு வரும் லதா, மது, மாது என அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் கண்டு திடுக்கிடுகிறார், தன்னால் அங்கே தொடர்ந்து பணியாற்ற முடியுமா எனப் பயப்படுகிறார். ஆனால், ஆனந்தின் பிரியத்துக்குரிய பணியாள் பொன்னையா, லதாவிடம் ‘ஆனந்த் கெட்டுப்போயிட்டாரே தவிர கெட்டவரில்லை’ எனச் சொல்கிறார்.
அதை லதாவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இதுவே லதா போன்ற ஒரு பெண்ணுக்கு ஆனந்திடம் இருப்பது போன்ற பழக்கவழக்கங்கள் இருந்தால், ‘லதா கெட்டவரில்லை கெட்டுப்போயிட்டார்’ என்று சொல்லியிருப்பாரா? ‘கெட்டுப்போயிட்டார்’ என்ற சொல்லிலேயே சமூகம் எவ்வளவு அழுக்கை ஏற்றிவைத்திருக்கிறது?
ஆனந்துக்கும் அவருடைய அண்ணன் விஜய குமாருக்கும் பாகப்பிரிவினை செய்துவைக்க மகாராணி முடிவுசெய்யும்போது அதில் பாசம் என்னும் பெயரில் மோசம் இழைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து அதைத் தடுக்க உதவுகிறார் லதா. தான் ஏழை என்பதற்காகவோ தனது வேலை போய்விடும் என்பதற்காகவோ பயந்துகொண்டு அதிகாரத்துக்கு ஒத்தூதும் வேலையை அவர் செய்யவில்லை. தனது பொறுப்பைத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றிய லதாவை அரண்மனைவாசிகள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அதிலும் பெரிய குடும்பத்துப் பெண்ணான ஆனந்தின் அண்ணி லதாவின் மீது வன்மம் கொள்கிறார்.
அரண்மனையில் லதாவுக்கான முதல் சிக்கல் ஜமீனின் பணியாள் வடிவில் வருகிறது. குடிப்பதற்குப் பணம் கேட்கும் அவனது நடவடிக்கை பிடிக்காமல் பணம் தர மறுக்கிறார் லதா. அந்தத் தருணத்தில் லதாவிடம் கடுமையாக நடந்துகொள்கிறார் ஆனந்த். அவள் வெறும் வேலைக்காரப் பெண் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட உடனடியாகத் தன் வேலையை ராஜினாமா செய்கிறார் லதா.
பணக்கட்டுகளுடனும் ராஜினாமா கடிதத்துடனும் வந்து நிற்கும் லதாவிடம் ஆனந்த், “ஒண்ணு என்னோட அதிகாரம் இன்னொண்ணு உன்னோட அகம்பாவம் அப்படித்தானே” என்கிறார். பெண்ணிடம் வெளிப்படும் தன்மானத்தை அகம்பாவமாகவும் ஆணவமாகவுமே இந்தச் சமூகம் புரிந்துவைத்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு இந்த வசனம். ஆணின் சுயமரியாதையை விதந்தோதும் சமூகம் பெண்ணின் சுயமரியாதையைக் கீழாகப் பார்க்கும் அவலம் இன்றுவரை தொடரத்தானே செய்கிறது?
மாளிகையும் பழியும்
ஆனந்தின் குடிப்பழக்கம் குடும்பத்தில் அவருக்குக் கெட்ட பெயரை வாங்கித்தருவதை உணர்ந்து, அதிலிருந்தும் அவரை விடுவிக்கிறார். குடியை நிறுத்தி, தங்கள் நிலத்தில் விவசாயம் பார்க்கும் மனிதர்களுக்கும் நல்லது செய்யும் நிலைமைக்கு வந்துவிடுகிறார் ஆனந்த். பொறுப்பானவராக ஆனந்த் மாறியவுடன் அவருக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என மகாராணி விரும்புகிறார். ஆனால், ஆனந்த் லதாவைக் காதலிக்கிறார்.
அவருக்காகவே ஒரு வசந்த மாளிகையைக் கட்டி அதிலுள்ள கண்ணாடி அறையில் வைத்துத் தனது காதலை லதாவிடம் வெளிப்படுத்துகிறார். லதாவால் எப்படி மறுக்க முடியும்? இருவரும் டூயட் பாடுகிறார்கள்.
என்னதான் குணக்குன்றாக இருந்தாலும் ஏழைப் பெண் ஒருவரை எப்படி அரண்மனை ஏற்றுக்கொள்ளும்? அதன் அந்தஸ்து என்னவாகும்? லதா மீது திருட்டுப் பழி சுமத்துகிறார்கள். அதை ஆனந்தும் நம்பும்படியாக அந்த நாடகத்தை நடத்துகிறார்கள். ஆனந்தே, ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என லதாவிடம் கேட்டுவிடுகிறார். தான் நிரபராதி என்பதில் தனக்கிருக்கும் நம்பிக்கை ஆனந்துக்கு இல்லாததைக் கண்டு லதா துடித்துப்போகிறார். தனக்காக வசந்த மாளிகை கட்டியவர் ஆனந்த் என்பதை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, அந்த அரண்மனையிலிருந்து வெளியேறித் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்கிறார்.
எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணம் லதா. வசந்த மாளிகை ஒரு கேளிக்கைப் படம்தான், என்றபோதும் லதாவை நம்மால் மறக்க இயலாது.
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT