Last Updated : 16 Jun, 2019 08:58 AM

 

Published : 16 Jun 2019 08:58 AM
Last Updated : 16 Jun 2019 08:58 AM

அஞ்சலி: எழுதப்படாத வரலாறு

அன்புமாணவப் பருவத்திலேயே நாட்டின் சுதந்திரத்துக்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர் கமலா ராமசாமி 93 வயதில் திருச்சியில் காலமானார்.

இந்தியச் சுதந்திரத்துக்காகச் சிறைகளில் வதைபட்ட, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான பெண்கள் அநேகர். ஆனால், சுதந்திரப் போரில் ஈடுப்பட்ட பெண்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்துவது அரிதாகவே நடைபெற்றுள்ளது. அதேபோல்தான் கமலா ராமசாமியின் வாழ்க்கையும் வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

மாணவப் போராளி

சுதந்திரப் போராட்ட வீரரான டி.எஸ்.எஸ்.ராஜனின் பேரன் ராமசாமியை மணந்து கொண்டார் கமலா. அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இது குறித்து அவருடைய மகன் விஜயன் கூறுகையில், “ஸ்ரீரங்கத்தில் வசித்துவந்த என்னுடைய அம்மா தீவிரமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர்.

இதனால் மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். குறிப்பாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்துக்காக மாணவர்கள் அறிவித்த கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நான்கு பெண்களில் அம்மாவும் ஒருவர். துணிச்சல் மிக்க விடுதலைப் போராட்ட வீராங்கனை என் அம்மா. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார்.

எங்கே போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அம்மாவும் அப்பாவும் சென்றுவிடுவார்கள். பல முறை சிறைக்குச் சென்றுள்ளனர். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு பெரிய அளவில் அம்மா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அம்மாவின் அரசியல் செயல்பாடு 1940-50 காலகட்டத்திலேயே முடிந்துவிட்டது.

குடும்பச் சூழ்நிலைதான் அதற்கு முக்கியக் காரணம். மூன்று குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவே அவருக்கு அப்போது நேரம் சரியாக இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக இரண்டு கட்சித் தோழர்களிடமும் தொடர்பில் இருந்தார். மூத்த தோழர்கள் பி.சி.ஜோஷி, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், என்.சங்கரய்யா, கல்யாணசுந்தரம், கேரள கம்யூனிஸ்ட் பெண் தோழர் கே.ஆர். கௌரி அம்மா, பார்வதி கிருஷ்ணன் ஆகியோரோடு நெருக்கமான தொடர்பில் இருந்தார். அம்மா அரசியல் நடவடிக்கையில் இல்லாவிட்டாலும் எங்கள் வீடு எப்போதும் தோழர்களால் நிரம்பியிருந்தது” என்றார்.

anjali-2jpgகமலா ராமசாமி

சிறை சென்ற முதல் பெண்

மக்கள் நலனுக்காகவே செயல்பட்டுவந்த கமலா ராமசாமி 1946-ல் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் சுதந்திரம் பெற்ற பிறகு 1947-ல் ராணுவப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அவர் கருவுற்று இருந்தார். இதனால், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதன் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். “இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முதல் பெண் என் அம்மாதான்” என்கிறார் விஜயன்.

கமலா, அவருடைய கணவர் ராமசாமி இருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திருச்சி மாவட்டத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்துள்ளனர். “திருச்சியில் தற்போது மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் கமலா ராமசாமியின் குடும்பத்துச் சொந்தமானது.

நான் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளராக இருந்தபோது மாவட்ட நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்க கமலா ராமசாமியை அழைத்திருந்தோம். அப்போதுதான் வீரம் செறிந்த அவரது சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன்” என்கிறார் திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x