Published : 16 Jun 2019 08:58 AM
Last Updated : 16 Jun 2019 08:58 AM
சிலரின் லட்சியங்கள் உயர்வாக இருக்கும். ஆனால் உதயகீர்த்திகாவின் லட்சியமே உயரே செல்வதுதான். விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதே இவரது இலக்கு. ஆனால், கிராமத்து வளர்ப்பு, வீழ்ந்தே கிடக்கும் குடும்பப் பொருளாதாரம், வழிகாட்டல் இல்லாத தடுமாற்றம் என்று அணிவகுத்து நின்ற தடைகள் அனைத்தையும் தகர்ந்தெறிந்து முன்னேறியபடி இருக்கிறார் உதயகீர்த்திகா. விண்வெளி செல்வதற்கான பயிற்சியைப் பெற போலந்தில் உள்ள பயிற்சி மையத்தால் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பேரில் இந்தியா சார்பில் செல்லக்கூடிய ஒரே நபர் இவர் என்பதே உதயகீர்த்திகாவின் பெருமைக்குச் சான்று. இந்திய விஞ்ஞான உலகத்தின் பார்வையைத் தனது சொந்த ஊரான தேனி அல்லிநகரத்தின் பக்கம் திருப்பியிருக்கிறார் இவர்.
தாமோதரன்-அமுதா தம்பதியின் மகளான உதயகீர்த்திகாவுக்குச் சிறு வயதிலேயே நிலாவையும் விண்வெளியையும் பிடிக்கும். விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்றுகூட அடம்பிடித்திருக்கிறார். வளர வளர அது மறையத் தொடங்கியது. தேனி பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தபோது உள்ளுக்குள் பொதிந்துகிடந்த அறிவியல் ஆர்வம் மெல்ல எட்டிப் பார்த்தது.
பத்தாவது படித்தபோது, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளியின் பங்கு’ என்ற தலைப்பில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. அதில் உதயகீர்த்திகா மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதற்காக இஸ்ரோவுக்குக் குடும்பத்துடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
“அதுவரை படமாகவும் தொலைக்காட்சியிலும் பார்த்த செயற்கைக்கோள் பாகங்களை நேரில் பார்த்தபோது ஆச்சரிய மாக இருந்தது. அங்கே சென்றது என் வாழ்க்கையின் முக்கிய மான தருணம். அப்போதுதான் விண்வெளி வீராங்கனை கனவு ஆழமாக வேரூன்றியது” என்கிறார் உதயகீர்த்திகா.
பன்னிரண்டாம் வகுப்பிலும் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றிபெற வேண்டும் என்று உத்வேகம் ஏற்பட்டது. கணினி பயன்படுத்துவதற்கான சூழல் இல்லாத நிலையில் புத்தகங்களின் பக்கம் அவரது பார்வை திரும்பியது. விண்வெளி தொடர்பான புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கினார்.
“சில புத்தகங்களை வாங்குற அளவுக்கு எங்ககிட்ட வசதியில்லை. மதுரையில் குறைவான சம்பளத்தில் வேலைசெய்துக்கிட்டு இருந்த எங்க அப்பா நிறைய நாள் காலைல சாப்பிடாம, அந்தப் பணத்துல தான் அந்தப் புத்தகங்களை வாங்கித்தந்தார்” என்று சொல்லும் போது உதயகீர்த்திகாவின் குரல் கம்முகிறது. அதனாலேயே எப்படியும் போட்டியில் வென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.
அந்த உறுதி அவருக்கு மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுத்தந்தது; இஸ்ரோவுக்குச் சென்றார். அங்கே சந்தித்த விஞ்ஞானிகள் பலர் உதயகீர்த்திகாவின் இரண்டாம் சாதனையைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். ஜிஎஸ்எல்வி.எம்கே.3 விண்கல மாடலில் பரிசும் சான்றிதழும் வழங்கினார்கள். மேலும், இவரின் அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வழிகாட்டினார்கள்.
புதிய பயணம்
ஆனால், அந்தத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதாக இல்லை. தமிழ்வழிக் கல்வி, கிராமத்துப் பின்னணி, பொருளாதாரம் என்று பலவும் இவரை அச்சுறுத்தின. உயர் தொழில்நுட்பப் படிப்புக்குப் பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை என்பதுடன் சிபிஎஸ்இ படிப்பு அடிப்படைத் தகுதி என்பதும் இவரது மனத்தைச் சஞ்சலப்படுத்தின.
இருப்பினும், உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர்போர்ஸ் யுனிவர்சிட்டியில் ‘ஸ்பெஷலிஸ்ட் டெக்னீசியன் ஆஃப் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ்’ படிப்புக்கு விண்ணப்பித்தார்; இடமும் கிடைத்தது. கல்வி பயில பல இடங்களில் நிதியுதவி கேட்டுப் போராடினார்கள். ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் இவரின் நிலை அறிந்து நிதியுதவி கிடைக்கத் தொடங்கியது. ரூ.500 முதல் பல ஆயிரம்வரை கிடைத்ததை எல்லாம் ஒன்று சேர்த்து உக்ரைனுக்குச் சென்றார்.
கோயம்புத்தூரில் இருந்து முதல் வான்வெளிப் பயணம் தொடங்கியது. “முதன்முதலா விமானத்தில் ஏறியது சிலிர்ப்பா இருந்தது. விமானம் மேலே உயர்ந்தபோது லேசாகப் பதற்றப்பட்டேன். ஆனால், விண்வெளி வீராங்கனை விமானப் பயணத்துக்கெல்லாம் பதற்றப்படக் கூடாதுன்னு தோணுச்சு. ராக்கெட்டில் செல்ல வேண்டியவள் நான். இதைவிடப் பலமடங்கு வேகம். செங்குத்தான பயணம் என்று அதைக் கற்பனை செய்துபார்த்தேன். இயல்புக்கு வந்தேன்.
உக்ரைனில் ஆங்கிலத்தை மிக மிகக் குறைவாகவே பேசுகிறார்கள். ரஷ்ய மொழிதான் அதிகம். ஆரம்பத்தில் சைகை காட்டிப் பேசி சமாளித்தேன். பிறகு தொடர்புகொள்ளும் அளவுக்கு ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்டேன். மொழி மட்டுமல்ல; உணவு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்துமே புதிதாக இருந்தன. அங்குள்ளவர்கள் அதிகம் இனிப்பு நிறைந்த உணவு வகைகளைத்தான் உண்கின்றனர்.
காரத்தை அவ்வளவாகச் சேர்த்துக்கொள்வதில்லை. அதனால வருஷத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும்போது பொடி வகைகளை இங்கிருந்து எடுத்துட்டுப் போவேன். சொந்தச் சமையல்தான். அங்கே ஒரு தேங்காய் 300 ரூபாய். புளி கிடைக்கவே கிடைக்காது.
உக்ரைனில் வாழ்ந்துவிட்டால் உலகில் எங்கு வேண்டு மானாலும் வாழ்ந்துவிடலாம். அந்த அளவுக்கு மோசமான பருவநிலை. மைனஸ் 29 டிகிரிக்குப் பனி இருக்கும். அது ஆறு மாதம் நீடிக்கும். அதேபோல் வெயிலின் தாக்கமும் அதிகம்” என்று சொல்லும் உதயகீர்த்திகா, படிப்பை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்ததால் ஊர் சுற்றுவதில் ஆர்வம் இருந்ததில்லை என்கிறார்.
கடுமையான பயிற்சி
நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி என விண்வெளி செல்வதற்கான உடல்வாகைப் பேண ஆரம்பித்தார். முகம் தெரியாத பலரின் உதவியால் நான்கு ஆண்டு படிப்பை முடித்தார். அதில் 92.5 சதவீத மதிப்பெண் பெற்றார். தற்போது போலந்து நாட்டில் உள்ள ‘அனலாக் விண்வெளி பயிற்சி மைய’த்தில் பயிற்சி பெறத் தேர்வு பெற்றிருக்கிறார்.
அங்கே உலக அளவில் 15 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். கடுமையான உடல் திறன் சோதனை, மனவலிமையைச் சோதிக்கும் பயிற்சிகள் போன்றவற்றை முடித்து இதில் தேர்வாகியிருக்கிறார் உதயகீர்த்திகா.
ஜூலை - ஆகஸ்ட்டில் பயிற்சிகள் தொடங்கும். போலந்து மட்டுமல்லாது நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல இடங்களில் பயிற்சி அளிக்கப்படும். செவ்வாய் போன்ற கோள்களில் இருப்பதுபோல் புவியீர்ப்பு விசை இல்லாமல் இருத்தல், 14 நாட்கள் தனிமையில் செயல்திட்டத்தில் ஈடுபடுவது, ராக்கெட் செல்லும் வேகத்துக்கு உடல் அழுத்தத்தைத் தயார்செய்தல், குமிழில் அமர்ந்து அதிவேகச் சுழற்சியை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற ராணுவத்தைவிடக் கடுமையான பயிற்சி இதில் இருக்கும்.
“ரஷ்யா மூலம் விண்வெளிக்குச் சென்ற விண்வெளி வீரர் ஸ்விஸ்கி தனது பயண அனுபவத்தையும் விண்வெளியில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்தும் பயிற்சி அளிப்பார். மேலும், ராக்கெட் உருவாக்கம், உலோகங்களின் செயல்பாடு, இயங்கும்விதம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் இதில் அளிக்கப்படும்” என்று கண்கள் மின்ன சொல்லிக்கொண்டே போகிறார்.
இந்திய விண்வெளி வீரர்கள் ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட பலரும் நாசாவில் இருந்துதான் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். தற்போது ககன்யான் மிஷன் திட்டத்தில் 2021-ல் இஸ்ரோ மூலம் மனிதர்கள் விண்வெளிக்குச் செல்லவிருக்கின்றனர். இதில் இடம்பெற வேண்டும் என்பதே இவரின் லட்சியம். இதற்காகப் பல்வேறு பயிற்சிகளையும் படிப்புகளையும் முடித்துத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.
தனியாகப் பயணம் செய்யவே தயங்குகிறவர்களுக்கு மத்தியில் பல ஆயிரம் மைல் தனியே சென்று மாறுபட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு வென்று காட்டியிருக்கும் உதயகீர்த்திகாவின் சாதனை பலரையும் வியக்கவைத்திருக்கிறது. இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க இன்னொரு பெண் சக்தி தயாராகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT