Published : 02 Jun 2019 10:17 AM
Last Updated : 02 Jun 2019 10:17 AM
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய சீரழிவாக சிரியா உள்நாட்டுப் போர் பார்க்கப்படுகிறது. எட்டு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் போரில் சுமார் ஐந்தரை லட்சம் பேர்வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளாகியிருக்கின்றனர். அகதிகளாகச் சென்றவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டும்.
உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011-க்குப் பிறகு சிரியாவில் பிறந்த குழந்தைகளுக்குப் போரைத் தவிர வேறெதுவும் தெரியாது. சிரியக் குழந்தைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான ஆண்டாக 2016 அமைந்தது என யுனிசெஃப் அறிவித்தது. ஒரு தலைமுறையைச் சேர்ந்த சிரியக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. சீரான பாடத்திட்டமும் அடிப்படைக் கட்டமைப்புகளும் இல்லாத பள்ளிக்கூடத்தில் தகுதியில்லாத ஆசிரியர்களின் மூலம் படிப்பைத் தொடரும் அவல நிலையும் நிலவுகிறது. சுகாதாரம் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. இவை எல்லாம் அவ்வளவு எளிதில் சீர்படுத்த முடியாத பிரச்சினைகள்.
இரு வேறு உலகங்கள்
போர் பாதித்த சிரியாவைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லைச் சேர்ந்த ஓவியர் உகுர் கேலென்குஸ் (Ugur Gallenkus) ஒரு கொலாஜ் ஒளிப்படத் தொடரைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார்.
ஒளிப்படத்தின் ஒரே சட்டகத்தில் ஒரு பக்கம் முற்றிலும் தரைமட்டமான கட்டிடங்கள், பெரும் கூட்டமாக இடம்பெயரும் மக்கள், துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டிருக்கும் கிளர்ச்சியாளர்கள் எனப் போரின் தடங்களையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் சொல்கிறது. இன்னொரு பகுதியோ செழுமை, அதிகப்படியான நுகர்வு, பாதுகாப்பு, ஆடம்பரமான வாழ்வு என மத்தியக் கிழக்கை விடவும் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கும் மேற்குலக நாடுகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. இரு வேறு உலகங்களை ஒன்றிணைத்து வெளியிடப்படும் இந்த ஒளிப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
போரால் சிரியாவில் இருந்து வெளியேறி ஐரோப்பாவுக்குப் படகில் செல்லும்போது மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த அகதிகளின் மோசமான நிலை தன்னை மிகவும் பாதித்தது என்றும், இதன் விளைவாகவே இரு வேறு அரசியல் சூழல் கொண்ட நிலத்தில் வாழ்கிறவர்களை வேறுபடுத்திக் காட்டும் ஒளிப்படத் தொடரை உருவாக்கியதாகவும் உகுர் கூறுகிறார்.
“சொற்களால் உருவாக்க முடியாத தாக்கத்தை மொழிகளைக் கடந்த ஒளிப்படங்கள் ஏற்படுத்துகின்றன. அவை பிரச்சினைகளைத் தீர்க்காது. ஆனால், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தித் தீர்வை நோக்கிச் சமூகத்தை நகர்த்தும்” என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT