Published : 18 Mar 2018 10:50 AM
Last Updated : 18 Mar 2018 10:50 AM
மங்களூரு மது விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களை ஸ்ரீராம் சேனை அமைப்பினர் 2009-ல் தாக்கியதை நாடு அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. இந்த சம்பவம் சார்ந்து ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் தேசியக் கவனம் பெற்றார். காதலர் தினத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் திரண்டதும் இந்தச் சம்பவத்தையடுத்தே நடந்தது. இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு ஆதாரமாக வீடியோக்கள் இருந்தும் அவை முறையாகச் சமர்பிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரும் மங்களூரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தப் புகார் தொடர்பான புலனாய்வு அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லையென்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான தாக்குதலை ஊடகங்களில் பகிரங்கமாக நியாயப்படுத்திய பிரமோத் முத்தலிக், விடுதலைத் தீர்ப்பை நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆஷா தேவி, இந்தத் தீர்ப்பு குறித்துச் சொல்லியிருக்கும் கருத்து விநோமானது. “பீர் விடுதித் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்கூட புகார் கொடுக்க முன்வரவில்லை. அவர்களின் கடமையைச் செய்வதைத் தடுத்தது எது? குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தண்டனை பெற்றிருந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்வதற்கு அந்தத் தீர்ப்பு தடையாக இருந்திருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.
சரிதான் என்கின்றனர் கால் பங்கு ஆண்கள்
பணியிடப் பாலியல் தொந்தரவு தொடர்பாக சர்வதேசத் தொண்டு அமைப்பான ‘கேர்’ 9,400 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பு நடத்தியது. ஆஸ்திரேலியா, ஈக்வடார், எகிப்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 32 சதவீதப் பெண்களும் 21 சதவீத ஆண்களும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்த ஆண்களில் 23 சதவீதம் பேர், உயரதிகாரியோ முதலாளியோ பணிபுரிபவரிடம் பாலியல் அனுகூலத்தை எதிர்பார்ப்பது சரியே என்று கூறியுள்ளனர். இந்தியாவில் கருத்துக் கணிப்பில் பங்குபெற்ற ஆண்களில் மூவரில் ஒருவர் இந்தத் தொந்தரவை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிறார்.
பெண்களே சிறந்த ஓட்டுநர்கள்
டெல்லியில் பெண் கார் ஓட்டுநர்கள்தாம் விதிகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று டெல்லி மாநகரக் காவல் துறைப் பதிவு ஒன்று தெரிவிக்கிறது. 2017-ல் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஒரு பெண் மீதுகூட புகார் பதிவாகவில்லை. அதிவேகமாக காரை ஓட்டியதற்காகப் பிடிக்கப்பட்ட 1 லட்சத்து 39 ஆயிரத்து 471 ஓட்டுநர்களில் 517 பேர் மட்டுமே பெண்கள். போக்குவரத்து சிக்னலை மீறியதற்காகத் தண்டிக்கப்பட்ட 1 லட்சத்து 67 ஆயிரத்து 867 பேரில் 44 பேர் பெண்கள். மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநர்களில் 2 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். டெல்லி போக்குவரத்துக் காவல் துறை நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
இப்படிச் சொன்னாங்க
(மகாராஷ்டிரத்தில் நடந்த விவசாயிகளின் பேரணி குறித்து)
நான் அந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் முன் என் முகத்தில் ‘சன்ஸ்கிரீன்’ தடவிக்கொண்டேன். வெயிலில் நடக்கும்போது தலைவலி வந்துவிடாமல் இருப்பதற்காக உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைக்கும் திரவத்தை ஒரு பாட்டிலில் என்அம்மா நிரப்பிக் கொடுத்திருந்தார். நான் தலையையும் முகத்தையும் துணியால் மூடியிருந்தேன். ஓடும்போது அணிந்துகொள்ளும் நைக் ஷூ என் கால்களில் இருந்தது.
தன் ஒரு மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுத் தன் கிராமத்தினருடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருக்கும் உஜ்வாலாவோடு சேர்ந்து நடந்தபோது, நகர்ப்புறத்தில் மிகுந்த பாதுகாப்புடன் யாருக்கும் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
அவளது தலையில் வியர்வை வழிந்தோடியபோது நான் அவளுக்கு என்னிடம் இருந்த பாட்டிலைக் கொடுத்தேன். அவள் சிரித்துக்கொண்டே, மராத்தி மொழியில், “நன்றி அக்கா! எங்களுக்குப் பழகி விட்டது. உங்களுக்குத் தேவைப்படலாம்” என்று சொன்னாள்.
விவசாயிகளின் துயரக் கதைகள், விவசாயிகளின் தற்கொலைகள் என்று பத்திரிகைகளின் முக்கியத்துவமற்ற மூலைகளில் வெளியிடப்பட்டுவந்த செய்திகள் இப்போது அனைவராலும் பேசப்படுபவையாக மாறிவிட்டன. நாடு அதன் ஆன்மாவை இழந்துவிடவில்லை என்பதற்கு மிகவும் தேவையான உறுதியை அளிப்பதாக இந்தப் பேரணி அமைந்துவிட்டது.
- ராணா அயூப், பத்திரிகையாளர், ‘குஜராத் கோப்புகள்’ நூலின் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT