Last Updated : 11 Mar, 2018 11:14 AM

 

Published : 11 Mar 2018 11:14 AM
Last Updated : 11 Mar 2018 11:14 AM

கண்ணீரும் புன்னகையும்: மாதவிடாய் ஆரோக்கியப் பிரச்சாரம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு #YesIBleed பிரச்சாரத்தை மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை தொடங்கியுள்ளது. மாத விடாய் ஆரோக்கியம் குறித்த ஒட்டுமொத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தப் பிரச்சாரத்துக்குத் தேசிய மகளிர் ஆணையம் உதவுகிறது. மாதவிடாய் ஆரோக்கிய விழிப்புணர்வை ஐ.நா. சபை, உலகளாவிய பொதுநலப் பிரச்சினையாகவும் மனித உரிமையாகவும் கருதி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பெண்களே தங்களுக்குள் பேசக் கூச்சப்படும் அம்சமாக மாதவிடாய் உள்ளது. ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் நிலையில் 12 சதவீதப் பெண்களே இந்தியாவில் உள்ளதாகக் கருத்துக்கணிப்பு சொல்கிறது. இச்சூழ்நிலையில் மாதவிடாய் ஆரோக்கியத்துக்கான #YesIBleed பிரச்சாரத்தை ஃபேஸ்புக், யூடியூப் தளங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

27D-Busrightபேருந்தில் பெண்களுக்கான அபாய பட்டன்கள்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் ஐந்து அரசுப் பொதுப் பேருந்துகளில் அபாய பட்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயல்பவர்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக ஒலி எழுப்புவதற்கான பட்டன்கள் இவை. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பட்டன்கள் அனைத்துப் பேருந்துகளிலும் நிறுவப்படும். டெல்லி பேருந்துகளில் இதற்கு முன்னரே பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களைத் தடுக்கும் பேருந்து மார்ஷல்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 200 பொதுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. மூன்றாவது நடவடிக்கையாகப் பெண்களைப் பாதுகாக்கும்வண்ணம் இந்த அபாய பட்டன்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அபாய எச்சரிக்கை ஒலி நாற்பது நொடிகள் ஒலிக்கும்.

ஓட்டுநர் வண்டியை நிறுத்தி, எந்த பட்டன் அழுத்தப்பட்டது என்பதை அறிந்து அத்துமீறுபவர்கள் மீதான நடவடிக்கையை எடுக்கலாம். இந்த எச்சரிக்கை பட்டன், பேருந்தின் ஜிபிஎஸ் இடம்காட்டியுடனும் இணைக்கப்பட்டுள்ளதால் பேருந்துப் பணிமனை நிர்வாகியும் நடவடிக்கை எடுக்க உதவும்.

 

குடியரசுத் தலைவர் விருது

11CHBRI_NARI_SHAKTI

ஏழை மற்றும் விளிம்புநிலைப் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உழைத்த 30 பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். பெண்கள் மேம்பாட்டுக்குப் பங்களித்த ஒன்பது நிறுவனங்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 1991 முதல் வழங்கப்படும் இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்டது.

 

12 பெண்களின் கதைகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூகுள் டூடுலில் 12 நாடுகளைச் சேர்ந்த, வெவ்வேறு பின்னணிகொண்ட 12 கலைஞர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் வாழும் பெண்களின் அன்றாட அம்சங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் 12 கலைஞர்களின் கதைகள் சித்திரங்களாக வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெங்களூருவைச் சேர்ந்த சுயாதீன காமிக்ஸ் ஓவியரான காவேரி பாலகிருஷ்ணனின் சித்திரமும் இதில் இடம்பெற்றுள்ளது. தன் வீட்டுக்கூரையின் மீது அமர்ந்து புத்தகம் வாசிக்கும் சிறுமி, ஒவ்வொரு பக்கத்தைக் கடக்கும்போதும் அவளுக்குச் சிறகு வளர்வதாக அந்தச் சித்திரம் உள்ளது. கடைசியில் அவள் பறக்கத் தொடங்குகிறாள்.

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை

தஞ்சாவூர் அருகே பாபநாசத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை உஷா, திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் கருவுற்றிருந்தார். குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்துக்குக் கடந்த புதன்கிழமை, கணவர் ராஜாவுடன் திருச்சிக்கு பைக்கில் சென்றார். திருமணத்துக்காக கிரைண்டர் ஒன்றைப் பரிசாக வாங்கி, உஷா தனது மடியில் வைத்தபடி பயணிக்க, திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஹெல்மட் சோதனைக்காகக் காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். கொஞ்சம் ஒதுங்குவதற்காக சற்றுத் தள்ளி ராஜா பைக்கை நிறுத்தியபோது தவறாகப் புரிந்துகொண்ட காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவிடம் தகராறு செய்துள்ளார். அடுத்து இன்னொரு வண்டியைப் பிடிப்பதற்காக அவர் நகர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிரச்சினை முடிந்துவிட்டதாகத் தவறாக கருதி ராஜா மீண்டும் பைக்கை முடுக்கிச் சென்றார். தன்னிடமிருந்து ராஜா - உஷா தம்பதியினர் தப்பிப்பதாகப் புரிந்துகொண்ட காவல் ஆய்வாளர் பைக்கில் அவர்களைத் துரத்தி, ராஜாவின் பைக்கைக் காலால் எட்டி உதைக்க வண்டி கீழே விழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சம்பவ இடத்திலேயே உஷா பலியானார். ஒரு குழந்தையின் வரவுக்காக மகிழ்ச்சியோடு இருந்த உஷா ஒரு காவல் அதிகாரியின் வீண் கோபத்தில் பலியான சம்பவம் ஊடகங்கள் வழியாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x