Published : 18 Mar 2018 10:50 AM
Last Updated : 18 Mar 2018 10:50 AM
எந்தவொரு சமூகக் குற்றத்தையும் வன்முறையையும் திசைதிருப்பவோ மடைமாற்றவோ அதன் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யவோ நாம் பழகியிருக்கிறோம். சமீபத்தில் நடந்த சம்பவங்கள் அவற்றை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தஞ்சாவூரைச் சேர்ந்த உஷா, போக்குவரத்துக் காவலரின் அலட்சியச் செயல்பாட்டால் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு எதிராகக் குரல்கொடுத்த பலரும் உஷா கர்ப்பிணி இல்லை என்று மருத்துவ அறிக்கை வெளியானதுமே அவர் கர்ப்பமாக இல்லாதது பெருங்குற்றம் போலவும் தங்களது கோபத்தைத் தேவையில்லாமல் செலவழித்துவிட்டது போலவும் புலம்பினர்.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினியின் கொலைக்கும் பலர் இதே ரீதியில்தான் எதிர்வினையாற்றினர். அஸ்வினியைக் கொன்றவர் அவரது படிப்புக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்திருப்பதாகச் செய்தி வெளியானதுமே பலரது மனங்களில் உறங்கிக்கிடந்த ‘சமூக அறம்’ விழித்துக்கொண்டது. ‘பணத்தை வாங்கிட்டு ஏமாத்தினா இப்படித்தான் கொல்லுவாங்க’ என்றும் ‘இந்தப் பொண்ணோட கொலை, ஆண்களை ஏமாத்த நினைக்கிற பொண்ணுங்களுக்குப் பாடமா இருக்கும்’ என்றும் பலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து முத்துக்களை உதிர்த்தவண்ணம் இருந்தனர்.
அவர்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் இருந்தது அதிர்ச்சி. தங்களையும் அறியாமல் தங்களிடம் குடிகொண்டிருக்கும் ஆணாதிக்கம் குறித்த உணர்வுகூட இல்லாமல் பல பெண்கள் மோசமாக எதிர்வினையாற்றியிருந்தனர். பெண்ணுக்குப் பெண்ணே எதிர்நிலையில் நின்று செயல்படுவது எதனால்? காலங்காலமாகப் பெண்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் கற்பிதங்கள்தான் இப்படி வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.
பறிக்கப்பட்ட தலைமை
ஆதியில் பெண்ணின் தலையை அலங்கரித்திருந்த தலைமைக் கிரீடம் அவளிடம் இருந்து பறிக்கப்பட்டு, இல்லத்தரசி எனும் புதிய கிரீடம் சூட்டப்பட்டது. ஒரு குழுவுக்கே தலைமையேற்றுச் சகலவிதங்களிலும் அவர்களை வழிநடத்தும் வல்லமை பெற்ற பெண், ஆணை அண்டிவாழ்கிறவளாக மெல்ல மெல்ல மாற்றப்பட்டாள். அவள் கையில் இருந்து வீரவாள் பிடுங்கப்பட்டு கரண்டியோடு சமையலறைக்குள் தள்ளப்பட்டாள். ஆணின் கரம் ஓங்கியதும் பெண்ணின் குரல் ஒடுக்கப்பட்டதும் இப்படித்தான். அதன் பிறகு பெண்ணுக்கான இலக்கணங்கள் வகுக்கப்பட்டன. குறிப்பாகக் குடும்பப் பெண்ணுக்கான வரையறைகள்.
பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலான குணங்களோடு பெய் எனச் சொன்னால் மழை பெய்ய வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். மண்ணை அள்ளிப் பானை வனைய வேண்டும். பாதிக் கிணற்றில் குடத்தை விட்டுவிட்டு ஓடிவந்தால் கயிறு அந்தரத்தில் தொங்க வேண்டும். உண்டி சுருக்க வேண்டும். குழந்தையை ஈன்று புறந்தந்துவிட்டு, மகனின் வளர்ச்சியைப் பார்த்து ‘என்ன பேறு பெற்றேனோ’ எனப் பேருவகை கொள்ள வேண்டும்.
இப்படி இன்னும் ஆயிரமாயிரம் வரையறைகள் பெண்ணுக்கென உருவாக்கப்பட்டன. புறத்தோற்றம் குறித்துப் பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்கள் இவற்றைவிடக் கொடுமையானவை. ஆனால், இவையாவும் கற்பிதங்களே என்ற புரிதல் பெண்களுக்கு ஏற்பட்டுவிடாத வகையில் அவர்களை இருட்டுக்குள் வைத்திருந்தது ஆணாதிக்கச் சமூகம். அதனால் இப்படியான கட்டுப்பாடுகள் அனைத்தையும் விரும்பியோ விரும்பாமலோ பெண்கள் ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் அவற்றுக்குப் பழகியும் விட்டனர்.
பெண்ணுக்குள் இருக்கும் ஆண் மனம்
பெண்களைப் பிணைத்திருக்கும் இதுபோன்ற தளைகளை எதிர்த்து ஒவ்வொரு காலத்திலும் எதிர்க்குரல்கள் எழுந்தன. ஆனால், ஆணாதிக்கத்தின் பேரொலியில் அவை அமுக்கப்பட்டன. பிறகு பெண்ணிய இயக்கங்கள் தோன்றின; பெண்ணுக்கான விடுதலையைப் போராடிப் பெற்றுத்தந்தன. பெண்களுக்குப் பெயரளவுக்கு உரிமைகள் கிடைத்தனவே தவிரப் பெண்கள் தற்சார்புடன் இருப்பதை நம் சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும் அனுமதிக்கவில்லை.
ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு பெண்ணைப் போட்டியாளராகவே கருதும் போக்கு இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஆணுக்கு அடங்கி நடக்கிற, விருப்பு வெறுப்புகள் ஏதுமற்ற பண்டமாகவே பெண்கள் கருதப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதால் பெரும்பாலான பெண்களும் அதற்குப் பழகிவிடுகிறார்கள். எப்போதும் யாருடைய கட்டளைக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட பாதையில் கடிவாளம் பூட்டப்பட்டு நடக்கிறார்கள். அப்படி நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு எனப் பெருமிதப்பட்டுக்கொள்கிறார்கள்.
அதனால்தான் தன்னுடன் பயணிக்கும் சக பெண்கள், பெண்ணுரிமை குறித்துப் பேசும்போதும் தன்னைப் பிணைத்திருக்கும் தளைகளை அறுத்தெறியும்போதும் இவர்களுக்குக் கோபம் வருகிறது. பெண்ணினத்துக்கே கேடு விளைவித்துவிட்டதாக அந்தப் பெண்களை எரிச்சலுடன் அணுகுகின்றனர். பெண்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்படத் தடையாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.
காத்திருக்கும் சவால்
ஆண்கள் உயர்ந்தவர்கள், அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் நாம் என்ற சிந்தனையில் இருந்து முதலில் பெண்கள் வெளிவர வேண்டும். தவிர, நாம் அடைய வேண்டிய உயரம், ஆண்கள் இப்போது இருக்கும் உயரம் அல்ல என்பதையும் உணர வேண்டும். குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணுக்கு இருக்கிற அத்தனை உரிமையும் தனக்கும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரரீதியாக ஆண்களைச் சார்ந்திருக்கும் பெண்களிடம் தற்சார்பு குறித்தும் சுயமரியாதை குறித்தும் பேசுவது எந்த அளவுக்குப் பலனளிக்கும் எனத் தெரியாது.
ஆனால், பொருளாதார சார்பு அடிமைத்தனமல்ல என்ற புரிதலை அவர்களிடம் நம்மால் ஏற்படுத்த முடியும். பெண்கள் எக்காரணம் கொண்டும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அளவுக்குச் செயல்படும் ஆணாதிக்கத்தின் நுட்பம் குறித்த புரிதலோடுதான் நாம் இதை அணுக வேண்டும். ஆணாதிக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவதைவிட, நமக்கு நாமே பூட்டிக்கொண்டிருக்கிற கட்டுக்களை உடைக்க வேண்டிய கட்டாயம் குறித்துப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நமக்கு விரும்பியதைச் சாப்பிடுவது, படிப்பது, வேலைக்குச் செல்வது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது, பொருந்தாத வாழ்க்கையைவிட்டு விலகுவது போன்றவற்றைச் செய்வதால் ஒரு பெண்ணின் கண்ணியம் எந்த விதத்திலும் குறைந்துவிடாது என்பதையும் உரக்கச் சொல்ல வேண்டும். அனைத்துக்கும் மேலாகப் பெண்களுக்கு எதிராகப் பேசுகிற பெண்களை எதிரியாகப் பாவிக்காமல் அவர்களிடம் இருக்கிற அறியாமையைக் களைவதுதான் நம் முன்னே இருக்கும் மிகப் பெரிய சவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT