Published : 18 Mar 2018 10:51 AM
Last Updated : 18 Mar 2018 10:51 AM
சுப்ரியா எனும் பெண்ணைத் தேடி கடந்த மாதம் இறுதியில் ஐஸ்வர்யா சர்மா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நிலைத் தகவல் தற்போது வைரலாகி உள்ளது.
‘நேற்று என் நண்பருடன் அந்தேரியில் இருக்கும் பப்புக்குச் சென்றிருந்தேன். அப்போது என் பின்னால் இருந்த மேஜையில் அமர்ந்திருந்த அமன் என்பவர் தன் நண்பரிடம் பேசியதை நான் கேட்க நேரிட்டது. நான் ஒட்டுக் கேட்கவில்லை. ஏனென்றால், அவர்கள் அந்த அளவு சத்தமாகப் பேசினார்கள். நேற்றிரவு அமன், தன் தோழி சுப்ரியாவுக்குத் தெரியாமல் நிதி என்ற பெண்ணுடன் சுற்றியதையும் அவருடன் வெளியில் தங்கியதையும் பற்றிப் பெருமையாகச் சொன்னான்.
அதற்கு அமனின் நண்பன், வெறுமனே ஆமாம் என்று சொல்லாமல், அதை சுப்ரியாவால் கண்டுபிடிக்கவே முடியாது என்று ஆணவத்துடன் சொன்னான். பின் இருவரும் சத்தமாகச் சிரித்தார்கள். அமன் தொடர்ந்து அந்த அனுபவத்தைப் பற்றி வெட்கமில்லாமல் விவரித்ததோடு அந்தப் பெண்களின் புறத்தோற்றத்தையும் ஓப்பீடு செய்து பேசினான். அமனின் கேவலமான செயலும் அவருடைய நண்பனின் ஆணவச் சிரிப்பும் அருவருப்பாக இருந்தன.
ஹலோ சுப்ரியா, உன் ஆண் தோழனின் பெயர் அமன் என்றால் அவனுடன் நீ புதன்கிழமை இரவு பார்ட்டிக்குச் செல்வதாக இருந்திருந்தால், அவன் உன்னை ஏமாற்றிவிட்டான் என்று புரிந்துகொள். அவன் ஒரு அயோக்கியன். அவன் கறுப்பு நிற பிரேம் கொண்ட கண்ணாடி அணிந்திருப்பான். அவன் பிடிக்கும் சிகரெட்டைவிட ஒல்லியாக இருப்பான். நீ சீக்கிரமாக அந்த அயோக்கியனைத் தொடர்புகொண்டு அவன் முகத்தில் அடிப்பதுபோல அவன் நட்பை முறித்துக்கொள்.
நண்பர்களே, இங்கு ஒவ்வொருவருக்காகவும் நாம் இருக்கிறோம். எனவே, இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்த எல்லா சுப்ரியாவுக்கும் டேக் செய்யுங்கள்’
- இந்த நிலைத் தகவல் #savesupriya என்ற ஹேஷ்டேகில் வெளியானது. தற்போது மும்பையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சுப்ரியாவுக்கான தேடல் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT