Published : 25 Mar 2018 03:59 PM
Last Updated : 25 Mar 2018 03:59 PM

எசப்பாட்டு 28: எதற்கெடுத்தாலும் பெண்கள் அழுவார்களா?

ர்.சி.வி. ராமன் 1888-ல் பிறந்த, முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஆளுமை. அதனால் அவருடைய மாணவிகள் அறிவியல் புலத்தில் சேர்வதற்கு எதிரான கருத்துடன் இருந்தார் என்று விட்டுவிடலாம். ஆனால், இந்தத் தலைமுறையும் அதே மனநிலையோடு இருப்பதை என்னவென்று சொல்வது?

2001-ல் உடலியல்/மருத்துவம் பிரிவில் நோபல் பரிசை விஞ்ஞானி பால் நர்சுடன் இணைந்து பெற்றவர் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிம் ஹன்ட். அவர் 2015-ல் கொரிய நாட்டின் சியோல் நகரில் உலக அறிவியல் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசியபோது, “பெண்கள் நம்மோடு ஆய்வகத்தில் இருக்கும்போது மூன்று விஷயங்கள் நடந்துவிடுகின்றன.

ஒன்று நீங்கள் அவர்கள் மீது காதல் கொண்டுவிடுவீர்கள் அல்லது அவர்கள் உங்கள் மேல் காதலாகிவிடுவார்கள். மூன்றாவதாக, அவர்களை நீங்கள் விமர்சித்தால் ஆய்வகத்திலேயே அழுதுவிடுவார்கள். ஆகவே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சோதனைச்சாலைகள் அமைப்பது அறிவியலுக்கு நல்லது”என்று குறிப்பிட்டார்.

மாறாத ஆணாதிக்கச் சிந்தனை

1930-களில் சர்.சி.வி.ராமன் சொன்னதற்கும் நோபல் பரிசு பெற்ற இன்றைய விஞ்ஞானி சொன்னதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்களின் கவனத்தைப் பெண்கள் ஈர்த்துவிடுவார்கள் என்பதுதான் இருவரின் வாதமும். விஞ்ஞானியாகப் பார்க்காமல் பெண்ணாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கச் சிந்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் மாற்றம் இன்றித் தொடர்வதையே இது காட்டுகிறது.

ஹன்ட்டின் பேச்சுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய பிறகு அவரோடு இணைந்து நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட விஞ்ஞானி பால் நர்ஸ் சொன்னது முக்கியமானது: “மனிதநேயமும் அறிவியலும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. அறிவியலுக்கு உள்ளேயும் புற உலகம் குறித்த புரிதலும் பார்வையும் விசாலப்பட வேண்டியுள்ளது. அறிவியல் துறையில் இருப்பவர்கள் தங்கள் உலகத்துக்குள்ளேயே கவனத்தைக் குவித்துக் குவித்து ஒருவிதமான உள்முகச் சிந்தனை ஓட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.”

இன்று தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகப் பெண்நிலைப் பார்வை ஒன்று உலக அளவில் உறுதியாக நிலைபெற்றுள்ளது. அதனால் அந்தப் பார்வைக்கு எதிராக அதிகாரபூர்வமாக வெளிப்படையாகப் பேசவோ இயங்கவோ முடியாத சர்வதேச நிலை உருவாகியுள்ளது. 30-களில் சத்தியாகிரகம் இருந்து அவமானத்தைத் தாங்கியபடி தன் இருப்பை மட்டும் உத்தரவாதப்படுத்திக்கொண்ட பெண் விஞ்ஞானிகளைப் போல ஒடுங்கிப்போகும் நிலை இன்று இல்லை.

தான் வகித்த பொறுப்புகளிலிருந்து அவரே விலகும் அளவுக்கு ஹன்ட்டுக்குச் சமூக நெருக்கடிகளை உருவாக்க முடிந்துள்ளது. ஆனாலும் அவரை ஆதரித்து, புகழ்பெற்ற விஞ்ஞானிகளிடமிருந்தும்கூட வலுவான குரல் வந்ததைக் கவலையுடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

எது நகைச்சுவை?

இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு அத்தியாயமும் உள்ளது. ஹன்ட், “நான் அதை நகைச்சுவையாகத்தான் சொன்னேன்” என்று திரும்பத் திரும்பக் கூறினார். “நகைச்சுவையாகச் சொன்னதை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்கள்?” என்கிறார் அவர். சீரியஸான ஒன்றை நகைச்சுவையாக்க முயல்வது எவ்வளவு பெரிய அராஜகம் என்பதை அவரைப் போன்றோருக்கு உணர்த்த வேண்டியுள்ளது.

வார இதழ்கள் சிலவற்றில் ஆண்கள் சமைப்பது, துணியைத் துவைப்பது போன்றவையெல்லாம் சிரிப்புக் காட்சிகளாகக் கேலிச்சித்திரங்களாக வரையப்பட்ட காலம் ஒன்றிருந்தது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களை அடி முட்டாள்களாகச் சித்தரித்துச் சிரிப்புக் காட்டுவது அன்றைக்கும் இன்றைக்கும் நம் திரைப்படங்களில் தொடரும் அராஜகம்தான். இவை சிரிப்பூட்டும் விஷயங்களல்ல. படிந்துபோன நிலவுடைமைச் சமூகத்தின் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடுகள்.

அந்த நிலையில்தான் ஒரு நவீன காலத்தின் நோபல் விஞ்ஞானியும் இருக்கிறார் என்பதை ஒருசோற்றுப் பதமாகக் கொண்டால் பெண் விஞ்ஞானிகள் எத்தகைய பகைச் சூழலுக்குள் (குறைந்தபட்சம் எதிரான சூழலுக்குள்) தங்கள் பணிகளை ஆற்றிவருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என 12-ம் நூற்றாண்டு கணிதவியல் அறிஞர் பாஸ்கராச்சார்யாவின் மகள் லீலாவதியைக் குறிப்பிடுவார்கள். கணித மேதையாக வாழ்ந்த அவர் எல்லாப் பெண்களையும்போல இயல்பான மண வாழ்க்கை வாழவில்லை. அதைப் பற்றிய சொல்கதை ஒன்றுண்டு.

பாஸ்கராச்சார்யா தன் ஒரே மகளான லீலாவதியைச் செல்லமாகவும் அறிவாளியாகவும் வளர்த்தார். சதா கேள்விகள் கேட்டுக்கொண்டே கணிதம் குறித்த அறிவை அவள் வளர்த்துக்கொண்டிருந்தாள். உரிய வயது வந்ததும் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். அதற்காக அவருடைய ஜாதகத்தை எடுத்துப் பார்த்த பாஸ்கரா அதிர்ச்சியடைந்தார். மகளுடைய திருமணம் ஒரு குறிப்பிட்ட சுபவேளையில் நடைபெற்றாக வேண்டும்.

அந்த வேளை தப்பிவிட்டால் அவளுக்கு மண வாழ்க்கை கிடையாது என்பதை அறிந்துகொண்டார். அதை மகளிடம் சொல்லவில்லை. அந்தக் குறிப்பிட்ட வேளையைத் தவறவிடக் கூடாதே என்பதற்காக ஒரு கருவியை/உபாயத்தை அவர் உருவாக்கினார். ஒரு குவளையின் அடியில் சின்னஞ் சிறிய துளையைப் போட்டு நீர் நிரம்பிய பாத்திரத்தில் அதை மிதக்க விட்டார். துவாரத்தின் வழியாக அக்குவளைக்குள் தண்ணீர் சென்று குவளை மூழ்கத் தொடங்கும் நிமிடம்தான் தன் மகளுக்கான சுபவேளை எனத் துல்லியமாகக் கணக்கிட்டார்.

இது கதை மட்டுமல்ல

மகளை அழைத்து அந்தக் குவளைப்பக்கம் மட்டும் போய்விடாதே என்று சொன்னார். மகளுக்கோ அது என்ன என்று பார்க்கும் துறுதுறுப்பு. அப்பா வெளியே போன நேரம் பார்த்து லீலாவதி அந்தப் பாத்திரத்தின் பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் மூக்குத்தியிலிருந்து ஒரு முத்து உதிர்ந்து பாத்திரத்தின் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது.

அதனால் பாஸ்கரா உருவாக்கியிருந்த துல்லியக் கணக்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதை அறியாத பாஸ்கரா குவளை மூழ்கிய நிமிடத்தில் மகளுக்கு மணம் முடித்துவைத்தார். ஆனால், ஓரிரு தினங்களில் லீலாவதியின் கணவன் இறந்துவிட்டான். கணிதத்தின் மீது அவளுடைய கவனத்தைத் திருப்பினார் பாஸ்கரா.

இந்தக் கதை உண்மையா பொய்யா எனத் தெரியாது. ஆனால், அறிவியல் ஆராய்ச்சிக்கு வரும் பெண்கள் குடும்ப வாழ்க்கையை இழக்க வேண்டும் என்பதைச் சொல்லும் குறியீடாக இந்தக் கதையை நாம் பார்க்கலாம். கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போல, குறிப்பிட்ட தருணத்தில் வாய்ப்பை இழந்தால் பெண்கள் விஞ்ஞானிகளாக ஆகவே முடியாது என்பதன் குறியீடாகவும் இக்கதையை வாசிக்கலாம்.

இது வெறும் கதையில் வரும் சம்பவம் மட்டுமல்ல. ‘Lilavathi’s Daughters’ (லீலாவதியின் புத்திரிகள்) என்ற நூலில் 98 இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாழ்க்கைக் குறிப்புகள் லீலாவதியின் கதை இன்றும் தொடரும் உண்மை எனக் காட்டுகின்றன.

அந்த விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு : tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x