Published : 18 Mar 2018 10:50 AM
Last Updated : 18 Mar 2018 10:50 AM

எசப்பாட்டு 27: விஞ்ஞானம் பெண்ணுக்கு இல்லையா?

ரலாறு, புவியியல், அறிவியல் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் நுழைகிற பெண்கள் தமக்கான வழியைத் தாமே உருவாக்கி முன்னேற வேண்டிய சமூகச் சூழல் நிலவுகிறது.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்து உலகம் அதுவரை நம்பியிருந்த ‘படைப்புக் கோட்பாட்டை’ உடைத்தெறிந்த சார்லஸ் டார்வினின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. ஆனால், பெண்கள் என்று வரும்போது அவரும் அவர் வாழ்ந்த காலத்தின் சூழலால் பாதிக்கப்பட்டவராகவே தன் ஊகங்களை முன்வைத்தார். 1859-ல் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்த அவர், 1871-ல் பாலியல் தேர்வு மற்றும் பாகுபாடுகள் பற்றி விளக்கிய Descent of Man நூலை வெளியிட்டார்.

அதில், ‘பெண் இனம் முழுமையாகப் பரிணாம வளர்ச்சி அடையாத இனம்’ என்றே குறிப்பிட்டார். அவர் காலத்தில் அவர் வாழ்ந்த சமூகத்தில், உலகத்தில் கண்ணால் கண்ட ஆண் - பெண் பேதத்தை விளக்க/புரிந்துகொள்ள இப்படியான ஓர் ‘இயற்கை உண்மை’ யைக்கொண்டு சமாதானமடைந்தார்.

பிறப்பிலேயே சிக்கல்?

அவர் மட்டுமல்ல, அவர் காலத்து விஞ்ஞானிகள் பலரும் இவ்விதமான கருத்தையே கொண்டிருந்தனர். ஏனெனில், அக்காலத்தில் பெண் விஞ்ஞானி என யாரும் இருக்கவில்லை. பெண் அரசியல் தலைவர்களோ ஆளுமைகளோகூடக் கண்ணில் தட்டுப்படவில்லை. அப்போ, பெண் பிறப்பிலேயே ஏதோ பிரச்சினை இருக்க வேண்டும் எனப் பின்னோக்கிப் பயணித்திருக்க வேண்டும்.

இன்னும் சில அறிஞர்கள் பெண்ணுக்கு மூளையின் அளவு மிகவும் சிறியது, ஆகவே அவர்களால் அறிவுசார் நடவடிக்கைகளில் ஆணைப் போல ஈடுபட முடியாது என்று கருதினர். இன்னும் சிலர் பெண்கள் விஞ்ஞானச் செயல்பாடுகளில் அதீதமாக மூளையைச் செலவழித்தால் அவர்களின் குழந்தைப்பேற்றுத் தகுதியும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும் என்று கருத்து வெளியிட்டனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆதி காலத்திலிருந்தே வேட்டைக்குச் சென்ற அனுபவம் இருந்ததால் ஒன்றைப் பின்தொடர்ந்து சென்று கண்டுபிடிக்கும் ஆற்றல் இயல்பிலேயே இருக்கிறது, பெண்களுக்கு அது இருக்காதல்லவா என்று வாதிட்டனர்.

எட்டாக் கனியா அறிவியல்?

ஆண்-பெண் பேதமும் ஏற்றத்தாழ்வும் நிலவுகிறது என்றால் அதற்கு ஆயிரம் சமூக, வரலாற்றுக் காரணங்கள் உண்டு. உயிரியல்ரீதியான காரணம் ஏதும் இருக்க முடியாது என்பது இன்று நிரூபிக்கப்பட்டாலும் அன்று டார்வின் சொன்ன கருத்து இன்றுவரை நம் சமூக உளவியலில் தாக்கம் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் அறிவியல் துறையில் நுழைய வாய்ப்பு மறுக்கப்பட்டதை இந்த (டார்வின் உள்ளிட்ட) விஞ்ஞானிகள் பார்க்க மறுத்தனர் அல்லது மறந்தனர்.

1920 வரையிலும்கூட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் புலத்தில் பெண்களுக்கு முழு உறுப்பினர் தகுதி வழங்கத் தடை இருந்தது. இரண்டு நோபல் பரிசு (இயற்பியலில் ஒன்று, வேதியலில் ஒன்று) பெற்றிருந்த மேரி க்யூரி 1911-ல் பிரான்ஸ் நாட்டின் அறிவியல் கழகத்தில் (France’s Academy of Sciences) உறுப்பினராக முடியாமல் போனது.

பெண்கள் எப்படி நம் அகாடமியில் உறுப்பினராக முடியும் என்ற கேள்வியை முன்வைத்தே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் அந்தப் பொறுப்புக்குப் போட்டியிட்டதை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் கண்டித்து எழுதின.

போராடிப் பெற்ற அங்கீகாரம்

ஐரோப்பாவில் பெண் விஞ்ஞானிகளுக்கு இந்த நிலைமை என்றால், இந்தியாவின் நிலை குறித்துச் சொல்லத் தேவையில்லை. ஒருசோற்றுப் பதமாக உயிர் வேதியியல் அறிஞரான கமலா சோஹோனியின் (1912-1998) கதையைப் பார்க்கலாம்.

அவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்புக்காக பெங்களூரில் இயங்கும் இந்திய அறிவியல் நிறுவனத்துக்கு (Indian Institute of Science) விண்ணப்பித்தார். அப்போது அந்நிறுவனத்தின் பொறுப்பிலிருந்த நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார். பெண்கள் எப்படி அறிவியல் உயர்கல்வி நிலையங்களில் சேரமுடியும் என்ற நேரடியான கேள்வியை அவர் வெளிப்படையாக முன்வைத்தார்.

shutterstock_508870957

ஆனால், கமலா சோஹோனி மனம் தளரவில்லை. 1930-களின் நடப்பாக இருந்த சத்தியாக்கிரகத்தைக் கையில் எடுத்தார். சர்.சி.வி.ராமனின் வீட்டு வாசலில் உட்கார்ந்துவிட்டார். பிரச்சினை பெரிதாகவே, சர்.சி.வி.ராமன் அவருக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று. இது குறித்துப் பின்னர் கருத்து சொன்ன கமலா, “ராமன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அவர் குறுகிய மனம் படைத்தவராக இருந்தார். பெண் என்பதற்காக என்னை அவர் நடத்திய விதத்தை மறக்கவே முடியாது. அதன் பிறகும் என்னை அவர் எல்லோரையும்போன்ற ஒரு ரெகுலர் மாணவியாகக் கல்லூரியில் சேர்க்கவில்லை. அதை மிகப் பெரிய அவமதிப்பாக உணர்ந்தேன். சக ஆண் மாணவர்களோடு பேச எனக்குத் தடை விதித்தார்.

ஆண்களின் கவனத்தைப் பெண்ணாகிய நான் திசை திருப்பிவிடுவேனாம். இதைவிடப் பெரிய அவமானம் எனக்கிருக்க முடியுமா? பின்னிரவு நேரங்களிலும் நான் இருந்து பணி செய்ய வேண்டும் என்ற விதியையும் சொன்னார். எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டே அந்நிறுவனத்தில் சேரும் முதல் பெண்ணாக நான் வகுப்புக்குச் சென்றேன்.

அந்த நாட்களில் பெண்கள் மீதான புறக்கணிப்பும் தாழ்வான பார்வையும் உச்சத்தில் இருந்தன. நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க ஆளுமையே இப்படி நடந்துகொண்டால் பிறரிடம் ஒரு பெண் என்னதான் எதிர்பார்க்க முடியும்?” எனச் சொல்லியிருக்கிறார்.

மாற்றம் எப்போது?

இப்போது அறிவியலாளர்களாகப் பெண்கள் வரத்தொடங்கியுள்ளனர். ஆனாலும் புறக்கணிப்புகளும் அவமதிப்புகளும் தொடர்கின்றன என்று பெண் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் பாடம் எடுத்துப் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நர்சிங், ஆயுர்வேதத்தையும் சேர்த்துக்கொண்டால் மருத்துவம், உயிரியல் படிப்பில் பெண்களின் எண்ணிக்கை 80.4 சதவீதமாக இருக்கிறது. அறிவியல், பொறியியலில் 65 சதவீதம். அறிவியல் பட்டமேற்படிப்பில் 42.5 சதவீதம். அறிவியல் முனைவர் பட்டத்தில் 37.2 சதவீதம். ஆனால், பெண் விஞ்ஞானிகளாகப் பணியில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் ஏமாற்றமே.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் 21 சதவீதம். பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பணியில் 10 சதவீதம், புகழ்பெற்ற பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியர்களாக 7 சதவீதம், இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் 4 சதவீதம் என்று கீழ் நோக்கியே போகிறது.

பணிபுரியும் இந்த விஞ்ஞானிகளும் சமத்துவமாக நடத்தப்படுகிறார்களா? சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா? சர்.சி.வி.ராமனைப் போல பெண்கள் பற்றிக் கருத்து சொன்ன நோபல் அறிஞர்கள் இப்போதும் இல்லையா? இன்னும் என்னவெல்லாம் இந்தப் பெண் விஞ்ஞானிகளின் உள்ளக் குமுறல்களாக உள்ளன?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு : tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x