Published : 11 Mar 2018 12:00 PM
Last Updated : 11 Mar 2018 12:00 PM

வான் மண் பெண் 46: சூழலியல் கல்வியின் முன்னோடி!

ண்பதுகளில் கிராமத்துப் பெண்கள் அதிகமாக விரும்பிய பணிகளில் ஒன்று, ஆசிரியர் பணி. தங்கள் கிராமத்தில், தாங்கள் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பது அந்தக் காலப் பெண்களுக்குக் கனவாகவே இருந்தது. ஆசிரியராவதை விடுங்கள். பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்குக்கூட அன்று நிறையத் தடைகள் இருந்தன. இந்தியக் கிராமங்கள் பலவற்றின் நிலை அன்று இதுதான்!

அப்படியான காலகட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், அமெரிக்காவுக்குச் சென்றார். சூழலியல் தொடர்பான படிப்புகளைப் படித்தார்; ஆய்வு செய்தார்; முனைவர் பட்டம் பெற்றார். பிறகு, புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் சூழலியல் கல்வி கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவில் சூழலியல் கல்வியைக் கற்பித்த முன்னோடிப் பெண்களில் ஒருவரான அவர், பிரியா டேவிதார்.

11chnvk_priya3.JPGதந்தை போட்டுக்கொடுத்த பாதை

நீலகிரி மாவட்டத்தில் இ.ஆர்.சி.டேவிதாருக்கும் மார்கரெட்டுக்கும் 1952-ல் மூத்த மகளாகப் பிறந்தார் பிரியா. தந்தை, வழக்கறிஞர். தாய், மருத்துவர்.

“எங்க அப்பாவோட பூர்வீகம் திருச்சி. அப்பா வழித் தாத்தாவுக்கு காட்டுயிர்கள் மேல ரொம்பப் பிரியம்.

காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் எல்லாம் எதுவும் இல்லாத காலம் அது. காட்டுயிர்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் தாத்தாவுக்கு இருந்தது. அதனால மலைப்பாம்பு, புள்ளிமான், அலங்கு, சிறுத்தைக் குட்டின்னு வீட்டுல ஒரு குட்டி விலங்குக் காட்சி சாலையே இருந்தது. விலங்குகளை வேட்டையாடுவதிலும் தாத்தாவுக்கு ஆர்வம் இருந்துச்சு. இந்த ஆர்வம் என் அப்பாவுக்கும் வந்ததுல ஆச்சர்யம் இல்லை.

சென்னையில் ஒரு நிறுவனத்துல வக்கீலா வேலை பார்த்திட்டிருந்த எங்க அப்பாவுக்குப் பதவி உயர்வு கொடுத்து ஊட்டிக்கு அனுப்புனாங்க. அங்க இருந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுடன் அவருக்கு அறிமுகம் கிடைச்சுது. அதனால தன்னோட ஓய்வு நேரத்துல காட்டுக்குச் சென்று காட்டுயிர்களை வேட்டையாடும் வழக்கத்தை வெச்சிருந்தார்.

அப்படி ஒரு முறை அவர் காட்டில் தேடிக் கண்டடைந்த இடம்தான், இன்று நாங்கள் இருக்கிற வீடு!” என்பவர், காடு, இயற்கை சார்ந்து அவருடைய தந்தை எழுதிய எழுத்துகளை ‘விஸ்பர்ஸ் ஃப்ரம் தி வைல்ட்’ எனும் தலைப்பில் புத்தகமாகத் தொகுத்துள்ளார்.

இவருடைய தந்தைதான், நீலகிரி வரையாடுகள் குறித்து முதன்முதலில் கணக்கெடுப்பு நடத்தியவர். அவரது முயற்சியால்தான் நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள வருவாய்க் காடுகள் எல்லாம், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக மாற்றப்பட்டன. தன் காலத்துக்குப் பிறகு, தான் வாங்கிய வனப் பகுதியைத் தன் பிள்ளைகள் பங்கு பிரித்துக்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில், ‘சிகூர் நேச்சர் டிரஸ்ட்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி அந்த வனப் பகுதிகளை அந்த அமைப்புக்கு எழுதி வைத்தார்.

ஆனால், அவர் பயப்பட்டது போல ஒன்றும் நடக்கவில்லை. அவரது காலத்துக்குப் பிறகு அவருடைய பிள்ளைகளின் முயற்சியால் அந்த வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இந்தியாவில் உள்ள யானை வழித்தடங்களில், இவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள வழித்தடம்தான் தனியாரால் பாதுகாக்கப்படும் ஒரே வழித்தடம்.

சாதி ரீதியான சவால்கள்

“தான் வாங்கிய அந்த இடத்துக்கு ‘சீத்தல் வாக்’னு பெயர் வெச்சார் எங்க அப்பா. அப்ப, அடிக்கடி எங்க வீட்டைச் சுற்றி யானைக் கூட்டங்கள் வருவதும் போவதுமா இருக்கும். அதைப் பார்த்துத்தான் நானும் என் தம்பிகளும் வளர்ந்தோம். தவிர, விடுமுறை காலத்துல குடும்பத்தோட ட்ரெக்கிங் எல்லாம் போவோம். இதனால எங்க மூணு பேருக்குமே இயற்கை மேல ஈடுபாடு வந்தது” என்பவர், குன்னூரில் உள்ள புராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் இளநிலைத் தாவரவியல் படித்தார்.

பின்னர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பை முடித்தவர், மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக’த்தில் பறவையியலாளர் சாலிம் அலியின் மாணவியாக, பறவைகளால் நிகழும் மகரந்தச் சேர்க்கை குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அதை முடித்துவிட்டு, 80-களின் இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் நிறுவனத்தில் சிறிது காலம் ஆய்வாளராக இருந்தார்.

11chnvk_priya5.JPG பிரியா டேவிடார் right

“இப்படி நான் படிச்சதெல்லாம் இயற்கைப் பாதுகாப்பு தொடர்பானதாகவே இருந்துச்சு. ஒரு கட்டத்துல, இந்தப் படிப்பு மூலமா நமக்கு வேலை கிடைக்குமான்னு சந்தேகம் வர ஆரம்பிச்சுது. அதனால நான் பொது சுகாதாரத்தில் மேற்படிப்பு படிச்சேன். அப்ப என்னோட நண்பர் ஒருவர் மூலமா, புதுவைப் பல்கலைக்கழகத்துல சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை தொடங்கப்பட்டிருப்பதா கேள்விப்பட்டேன். இந்தியாவுல அப்படி ஒரு துறை அங்கதான் முதன்முதலா தொடங்கப்பட்டுச்சு” என்றவர் 1987 முதல் அங்கு பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி 2017-ல் ஓய்வுபெற்றார்.

பணி நாட்களில் சாதிரீதியாகவும் பாலின வேறுபாடு காரணமாகவும் பல இன்னல்களை பிரியா எதிர்கொண்டார். “ஆரம்பத்துல அந்தப் பிரச்சினைகள் என்னை ரொம்பவும் பயமுறுத்திச்சு. ஒரு கட்டத்துல அவற்றை எதிர்க்கப் பழகிட்டேன். சின்ன வயசுல இருந்தே காடுகள்ல சுற்றித் திரிஞ்சதால எனக்குக் கள ஆய்வுகள் செய்யுறதுல ஒரு பிரச்சினையும் இல்லை.

ஆனா, சாதிரீதியான விஷயங்களை நான் அப்போதான் முதன்முறையா எதிர்கொண்டேன்” என்பவர், சூழலியல் தொடர்பான பல்வேறு ஆய்விதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் எப்படி நமது மண்ணை மாசுபடுத்துகிறது என்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை முக்கியமானது. அந்தக் கட்டுரைக்குப் பிறகுதான், இந்தியாவில் பி.டி.கத்தரிக்காய் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரித்தது.

கத்தரி நம்முடையது

“அந்த ஆய்வைத் தமிழகம் மற்றும் கர்நாடகப் பகுதிகளில் மேற்கொண்டோம். கத்தரிக்காய் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது என்று மான்சாண்டோ சொல்லுது. ஆனா, அது பொய். அது ஆசியப் பகுதிகளில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. பி.டி.கத்தரிக்காயை இங்க சாகுபடி பண்ண ஆரம்பிச்சா, அது நம்மோட நிலத்தைச் சீரழிச்சிடும். தவிர, நம் நாட்டுல இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கத்தரிக்காய்களின் மரபணுவில் பி.டி. கத்தரிக்காயின் மரபணு கலந்துவிடும். அப்போ அந்த இயற்கைக் கத்தரிக்காய், ஒன்றுக்கும் உதவாத ‘களை’ ஆகிடும்.

உலகத்துல எங்கெல்லாம் இப்படி இயற்கையா கத்தரிக்காய் விளையுதோ, அங்கெல்லாம் பி.டி. கத்தரிக்காயைச் சாகுபடி பண்றதுக்குத் தடை இருக்கு. ஆனா, இந்தியாவுல அதைப் பத்தின விழிப்புணர்வு அவ்வளவா இல்லை” என்றவர், தொடக்கத்தில் ‘நியூட்ரினோ’ ஆய்வகம் நீலகிரியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தபோது, அதை எதிர்த்தும் குரல் கொடுத்திருக்கிறார்.

“நல்லவேளை, அங்க அமையவிருந்த ஆய்வகத்தை அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் தடுத்து நிறுத்தினார். அது வந்தா, அங்கிருக்கும் யானைகளின் கதி என்ன ஆகும்னு யாருமே யோசிக்கலை. ஆனா, அந்தத் திட்டத்துக்கு ஆதரவா சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறேன்னு சொல்ற சில தொண்டு நிறுவனங்களும் தனிநபர்கள் சிலரும் உடந்தையா இருந்தாங்க” என்கிறார். காடுகளைப் பற்றி ஆராய்வது இவருக்கு விருப்பமானது.

இந்தியா போன்ற வெப்ப மண்டலக் காடுகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘வெப்ப மண்டல உயிரியல் பாதுகாப்புக் கழக’த்தின் தலைவராக பிரியா இருந்துள்ளார். அப்போது அவர் மேற்கொண்ட முயற்சியால்தான் அந்தக் கழகத்தின் ஆசியக் கிளை சீனாவில் தொடங்கப்பட்டது. இவர் ஒரு எழுத்தாளரும்கூட. தன்னுடைய கணவர் ழான் பிலிப் உடன் இணைந்து (அவரும் ஒரு சூழலியல் ஆய்வாளர்) யானைகளைப் பற்றி ‘ஜெயண்ட் ஹார்ட்ஸ்’ எனும் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x