Published : 25 Mar 2018 04:02 PM
Last Updated : 25 Mar 2018 04:02 PM
பெ
ண்களில் பலருக்கு மனம்போல் மணவாழ்க்கை அமைவதில்லை. பலர் ஆசைகளைத் தம்முள் புதைத்துக்கொண்டு, ஏதேனும் அதிசயம் நிகழாதா என்ற நப்பாசையில் வாழ்ந்து முடிக்கிறார்கள். ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பாமாரா கிராமத்துக்கு வாக்கப்பட்டு வந்த பெண்ணுக்கு நடந்தது அப்படியான அதிசயங்களில் ஒன்று.
பாமாரா கிராமத்தைச் சேர்ந்த 28 வயது வாசுதேவ் டபூவுக்கும் தெப்திஹி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் மார்ச் 4 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி ஆறு நாட்கள் கடந்த நிலையில் டபூவின் மனைவியைப் பார்க்க மூன்று உறவினர்கள் வந்தனர். வந்தவர்களில் இருவர் கிராமத்தைச் சுற்றி பார்க்க டபூவோடு சென்றுவிட ஒருவர் மட்டும் வீட்டிலேயே இருந்துவிட்டார்.
டபூவின் மனைவியோடு அந்நிய நபர் ஒருவர் இருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டினர் அந்த நபரைத் தாக்கியுள்ளனர். அப்போது டபூவின் மனைவி, தாங்கள் இருவரும் காதலர்கள் எனவும் பெற்றோர் இல்லாத நிலையில் உறவினர்களின் வற்புறுத்தலாலேயே டபூவைத் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த டபூ, தன் மனைவி அவளுடைய காதலனை மணப்பதே சரி என முடிவெடுத்துள்ளார். தன் மனைவியின் அண்ணன், அக்கா, காதலனின் பெற்றோர் ஆகியோரையும் தன் முடிவுக்கு டபூ சம்மதிக்கவைத்தார். டபூவின் இந்த முடிவைக் கேள்விப்பட்டதும் அந்தச் சூழ்நிலைக்கு அதுதான் மிகவும் சரியான முடிவு என அந்தக் கிராமத் தலைவர் கஜேந்திர பாக் உணர்ந்தார். இதனால், அந்தக் கிராமமே மகிழ்ச்சிடன் பங்கேற்று, தங்கள் சமூக வழக்கப்படி அந்தத் திருமணத்தை நடத்திவைத்தனர்.
தான் மட்டும் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால் தங்கள் மூன்று பேரின் வாழ்வே அழிந்திருக்கும் எனவும் இந்த முடிவால் தற்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டபூ சொல்கிறார். டபூவின் இந்தப் பெருந்தன்மையான முடிவைத் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்கிறார் டபூவின் முன்னாள் மனைவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT