Last Updated : 04 Mar, 2018 12:53 PM

 

Published : 04 Mar 2018 12:53 PM
Last Updated : 04 Mar 2018 12:53 PM

கண்ணீரும் புன்னகையும்: கண்டுகொள்ளப்படாத பெண்களின் குரல்

இந்தியாவில் விவசாயத் தொழிலில் நலிவுற்று, கடன் சுமையால் தற்கொலை செய்யும் விவசாயிக்குப் பின்னால் காலம் முழுக்கத் துயரப்படும் அவர்களது விதவை மனைவிகளின் நிலையை முதன்முறையாக ‘விடோஸ் ஆஃப் விதர்பா’ புத்தகத்தில் கோட்டா நீலிமா பேசியுள்ளார். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மரணத்துக்குப் பிறகு குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றப் போராடும் 18 பெண்களின் வறுமைக் கதைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

இவை, விவசாயிகளின் தற்கொலைக்குப் பின்னால் பேசாப் பொருளாகக் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் விதவைப் பெண்களின் கதை என்கிறார் நீலிமா.

இந்திய வேளாண்மைத் துறையில் கிட்டத்தட்ட 10 கோடிப் பெண்கள் ஈடுபட்டும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நில உடைமையாளர்களாக இல்லாததால் அரசுக் கொள்கைகளை உருவாக்குபவர்கள் அவர்களை விவசாயிகளாக கருதுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில் விவசாயிகளின் தற்கொலைப் பிரச்சினையைச் சுற்றி நடக்கும் விவாதங்களிலும் பெண்களின் இடம் பொருட்படுத்தப்படுவதேயில்லை என்பதை இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. கணவர் இறந்த துயரத்தைத் தாண்டியும் அரசு தரும் சொற்ப இழப்பீடுகளைப் பெறுவதற்குப் பெண்கள் நடையாய் நடக்கும் நிலையையும் அதிகாரிகளின் இரக்கமற்ற விசாரணைகளையும் இந்நூல் பதிவுசெய்துள்ளது.

04chsrs_thennai(1)rightமரத்தில் ஏறி சம்பாதிக்கும் பெண்கள்

பெண்கள், இயந்திரத்தின் உதவியுடன் மரத்திலேறித் தேங்காய் பறிப்பதற்குக் கேரளம் வழிகாட்டியுள்ளது. பாரம்பரியமாக மரம் ஏறும் ஆண் தொழிலாளர்கள் கூலி அதிகம் கிடைக்கும் என மாற்றுத் தொழிலுக்குச் செல்வதால், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் தென்னை மரமேறப் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காகப் பெண்களைச் சேர்த்து அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

மரமேறும் இயந்திரத்தின் மூலம் தினசரி ஐம்பது மரங்களில் ஏறுவதாக இந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஜா சொல்கிறார். ஒரு மரமேறிப் பறிப்பதற்கு வாங்கும் கூலி 100 ரூபாய். தொலைபேசியில் அழைத்தால் போதும், இந்த அமைப்பிலிருந்து மரமேறுவதற்கு வீடு தேடி தொழிலாளர்கள் வருவார்கள்.

இயந்திரம் மூலம் மரமேறும் பயிற்சியைப் பெண் தொழிலாளர்கள் நான்கே நாட்களில் கற்றுக்கொள்கின்றனர். குறைந்த நேர உழைப்பு, நல்ல கூலி, நிறைய ஓய்வு என்று வாழ்க்கை இனிமையாகச் செல்கிறது என்று சொல்கிறார் மரமேறும் தொழிலில் ஈடுபட்டுவரும் அம்மணி.

அதிகரிக்கும் பெண் கதாபாத்திரங்கள்

பெண்களை மையமாகக்கொண்டு பாலிவுட்டிலும் தமிழிலும் வரும் சினிமாக்களும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன. சிம்ரன், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, தும்ஹாரி சூலு, சீக்ரெட் சூப்பர் ஸ்டார், மகளிர் மட்டும், அறம் போன்ற படங்கள் வரத்தொடங்கியுள்ளதை நம்பிக்கையான தொடக்கமாகக் கருதலாம்.

இப்படிச் சொன்னாங்க

நான் கவுரவமாக வயோதிகத்தை அடைய அனுமதிப்பீர்களா?

நான் களைப்பாக உள்ளேன், எனது எடை கூடியுள்ளது என்பதைப் பற்றியெல்லாம் கருத்து சொல்லாமல் வயோதிகத்தை என்னை அடைய அனுமதிப்பீர்களா? என் கண்களின் கீழே இருக்கும் கருவளையங்களையோ கண்ணாடித் தடங்களையோ பற்றிப் பேசாமல் இருப்பீர்களா?

04CHLRD_AMALA

என் கூந்தலில் சாயமிடுவதை நிறுத்த என்னை அனுமதிப்பீர்களா, குட்டையாக முடிவெட்டிக்கொள்வதை அனுமதித்து எனது 19 வயது கூந்தலோடு ஒப்பிடாமலும் இருப்பீர்களா?

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, தோல்வி போன்ற பைத்தியக்காரத்தனத்திலிருந்து என்னை சுதந்திரமாக இருக்கவிடுவீர்களா? டிஆர்பி மோதல்கள், பேஜ் 3 செய்திகள், லைக்குகள், கமெண்ட்களிலிருந்து சுதந்திரமாக என்னை விடுதலை செய்வீர்களா?

என் வாழ்க்கைக்கு, கொஞ்சம் தனிமைக்கு என்னை அனுமதியுங்கள். மனிதர்களுடனும் பிரபஞ்சத்துடனும் உண்மையோடும் நேசத்தோடும் தொடர்புகொள்ள எனக்கு அகத்தேவை இருக்கிறது. அத்துடன் இப்போதெல்லாம் காணாமல் போய்விட்ட என் மீதான மரியாதையையும் திரும்பக் கேட்கிறேன்.

- நடிகை அமலா அக்கினேனி தனது முகநூலில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x