Published : 11 Mar 2018 12:00 PM
Last Updated : 11 Mar 2018 12:00 PM
ஏ
ழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைச் சிகரங்களிலும் ஏழு எரிமலைச் சிகரங்களிலும் கால் பதித்த ஒரே பெண் கேட்டி சாரா! ஆனால், தன்னுடைய சாதனையாக அவர் கருதுவது எதைத் தெரியுமா?
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் சாராவுக்கு, சாகசப் பயணங்களின் மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு. படிப்பு, திருமணம், அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் என்று வாழ்க்கை சென்றாலும் அதனூடே அந்த ஈர்ப்பும் செழித்து வளர்ந்து அவரது கனவையும் லட்சியத்தையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது.
சாகசப் பயணம் செல்பவருக்கு உடல் தகுதி மிக முக்கியம் என்பதால் தன் உடலை உணவாலும் உடற்பயிற்சிகளாலும் ஆரோக்கியமாக வைத்திருந்தார். குழந்தைகள் வளர வளர இவரது லட்சியத்துக்கான தூரமும் குறைந்துகொண்டே வந்தது. குழந்தைகள் பதின்ம வயதை அடைந்து தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ள ஆரம்பித்தவுடன், அவர்கள் சாராவின் லட்சியத்தைத் தொடரச் செய்தனர்.
மலையேறும் குழுக்களில் தன்னை இணைந்துகொண்டு தினமும் இரண்டு மணி நேரம் அதற்கான உடற்பயிற்சிகளில் சாரா ஈடுப்பட்டார். இவரது ஆர்வமும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் சக மலையேற்ற வீரர்களை மலைக்கவைக்கும் அளவு இருந்தன.
தோல்வியில் கற்ற பாடம்
‘மலையேற்றம் என்பது சாதாரண விஷயமல்ல. உடலும் மனமும் காலமும் பருவமும் ஒருசேர ஒத்துழைக்க வேண்டும். ஷூ, ஆடை, கையுறை, டார்ச் எல்லாம் தரமாக இருக்க வேண்டும். இவற்றில் ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் நம் பயணம் சாத்தியப்படாது. இரவில் கூடாரத்துக்குள் தலையில் டார்ச் விளக்கோடு உறங்க வேண்டும். இருளில் கூடாரத்தை விட்டு வெளியே வந்தால் விழுந்து அடிபடக்கூடும். என்ன காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது’ என்பதை சாராவுக்குக் கற்றுக் கொடுத்தது அவரது முதல் மலையேறும் முயற்சியின் தோல்விதான்.
ஆம், அது 2007. ஆசியாவின் உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தன் குழுவினருடன் சாரா ஏறினார். இன்னும் 400 மீட்டர் ஏறினால் சிகரத்தை அடைந்துவிடலாம். மனம் உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்தது. ஆனால், போதாத வேளை சட்டென்று வழுக்கி விழுந்தார். தோள்பட்டை உடைந்துவிட்டது. வலியில் துடித்த அவரால் அதற்கு மேல் போக முடியவில்லை.
கண்களுக்கு எட்டியது கால்களுக்கு எட்டாமல் போனது வருத்தமளித்தாலும், மீண்டும் வந்து அதன் உச்சியை அடைவேன் என்று சபதமிட்டுக் கீழே இறங்கினார். “இந்தத் தோல்வி கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் அதற்குப் பிறகான எல்லாப் பயணங்களிலும் மிகக் கவனமாகக் கையாண்டேன்” என்று சாரா சொல்கிறார்.
சிகரத்தை விரும்பிய கால்கள்
காயம் குணமடைய நீண்ட காலம் ஆனது. முழுவதும் குணமடையும்வரை பொறுமையாகக் காத்திருந்தார். அதற்குப்பின் பயிற்சியை ஆரம்பித்தார். 2008-ல் மீண்டும் தன் சாகசப் பயணத்தை அண்டார்டிகாவின் வின்சன் மலையில் தொடங்கினார். எவரெஸ்ட் மலையேற்றத்தில் நீளமும் கடினமான பாதையும் சவாலானவை என்றால் வின்சன் மலையேற்றத்தில் கடுங்குளிர் மிகப் பெரிய சவால்.
கொஞ்சம் கவனம் குறைந்தாலும் திரும்பிவர முடியாது. ஆனாலும், மிகுந்த நம்பிக்கையோடும் தைரியத்தோடும் மலையேறினார். ஏற்கெனவே கிடைத்த அனுபவத்தால் ஒவ்வோர் அடியையும் நன்கு திட்டமிட்டு நிதானத்தோடு வைத்தார். இதனால், இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பினார்.
2008-ல் முதல் வெற்றியை ருசித்தவுடன் அவரது கால்கள் பெரும் சிகரங்களை மீண்டும் விரும்பின. 2010-ல் ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களில் உள்ள மலைகளிலும் ஏறி முடித்தார். ஒரே ஆண்டில் மூன்று மலையேற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அசாத்திய உடல் வலிமையும் மன வலிமையும் தேவை. சாராவுக்கு அவை அளவுக்கு அதிகமாகவே இருந்தன.
இதனால், 2012-ல் தென் அமெரிக்காவிலும் 2013-ல் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள உயர்ந்த மலை உச்சிகளில் கால் பதித்தார். இதன் மூலம் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான மலைச் சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அதுவும் அந்தச் சாதனையை ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்தினார். இருந்தாலும், இன்றும் தனக்குத் தோல்வியைப் பரிசளித்த எவரெஸ்ட் பயணத்தையே தனது முக்கியமான வெற்றியாக சாரா கருதுகிறார்.
வயது தடையல்ல
உயரமான மலைச் சிகரங்களில் எல்லாம் கால் பதித்தாயிற்று. அடுத்து என்ன என்று யோசித்தவர், உயரமான எரிமலைச் சிகரங்களைத் தொடலாம் என்று முடிவெடுத்தார். பின் முழுமுயற்சியுடன் தொடர்ந்து ஈடுபட்டு அதிலும் வெற்றி அடைந்தார்.
“மலையேற்றத்தில் வெற்றி பெறுவதற்குக் குழுவினரின் பங்கும் முக்கியமானது. ஒவ்வொரு பயணத்திலும் எனக்குச் சிறந்த நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்காக நம்முடைய சுமையை அவர்கள் தூக்குவார்கள் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அவர்கள் என்னை ஒரு பெண்ணாக நினைத்து ஒதுங்கி நிற்கவில்லை. மேலும், இந்த வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா என்றெல்லாம் நினைக்காமல் என்னால் எதையும் செய்ய முடியும் என்று ஊக்கப்படுத்தினார்கள்.
என்னைவிட இளையவர்களாக இருந்தாலும் அவர்களுக்குச் சமமாக என் திறமையை மதித்தார்கள். பாலினப் பேதத்தை நான் ஒரு நொடிகூட அவர்களிடம் உணர்ந்ததில்லை. இவை எனக்கு மன உறுதியையும் அமைதியையும் அளித்தன. இலக்கை நோக்கிச் செல்வதற்கு அவைதானே மிக முக்கியம்” என்கிறார் சாரா.
“மலையேற்றம் என்று எளிதாகச் சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு பயணமும் ஆபத்தானது. சில நேரம் ஆபத்தான விலங்குகள் குறுக்கிடும். சில நேரம் பனிப் புயல் வீசும். பனிப் பாறைகள் உடைந்து விழும். உயிர் பிழைத்துத்திரும்புவோமா என்ற அச்சம்கூடச் சில நேரம் தோன்றும். சுற்றிலும் பனிப் பிரதேசத்தையே நாள் கணக்கில் பார்த்துக்கொண்டிருப்பது வெறுமையாக இருக்கும். சில இடங்களில் குழுவினர்களில் சிலரை இழக்கவும் நேரிடும். இவற்றையெல்லாம் கடந்துதான் இந்தச் சாதனைகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்” என்று தன் நினைவலைகளில் மூழ்குகிறார் சாரா
உலகிலேயே முதல் பெண்
2018 ஜனவரி 14-ல் அண்டார்டிகாவின் சிட்லே எரிமலையில் ஏறி, ஏழாவது எரிமலையேற்றத்தை சாரா முடித்தார். அண்டார்டிகாவில் மலையேற்றத்தை ஆரம்பித்தவர் அண்டார்டிகாவிலேயே முடித்தார்.
“நான் மலையேற்றத்தை ஆரம்பித்தபோது என் குழந்தைகள் பதின்ம வயதில் இருந்தனர். அம்மா என்றால் குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்பவர் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. அம்மாவுக்கும் தனிப்பட்ட ஆர்வம், திறமை எல்லாம் இருக்கும். அவற்றை மதிக்க வேண்டும், நம்மால் முடிந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தார்கள். ஒவ்வொரு மலையேற்றத்தின் போதும் உற்சாகமாக வாழ்த்தி அனுப்புவார்கள். தங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வார்கள்.
என்னுடைய ஒவ்வொரு சாதனையையும் பெரிய விஷயமாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் என் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்கிறேனே என்ற குற்றவுணர்வு எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என் குழந்தைகளின் இந்தப் புரிதலைத்தான் நான் மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். என் சாதனைகளுக்கு ஊக்கமளிப்பதும் அந்தப் புரிதல்தான்” என்று சொல்லும் கேட்டி சாரா, அடுத்த ஆண்டு தன் 50-வது பிறந்தநாளுக்காக உலகின் 8-வது உயரமான மலைச் சிகரமான இமயமலையின் மனஸ்லுவில் ஏறும் திட்டத்தில் இருக்கிறார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT