Published : 05 May 2019 09:53 AM
Last Updated : 05 May 2019 09:53 AM
‘சாதிக்கப் பிறந்தவர்கள்’ சமூக அமைப்பின் ‘சிகரம் தொட்ட திருநங்கை விருது’ வழங்கும் விழா 7-ம் ஆண்டாக சென்னை ராணி சீதை அரங்கில் அண்மையில் நடந்தது.
எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் பொதுப் புத்தியிலிருந்து விலகி, திருநங்கைகளுக்கு உதவுவதோடு பொதுச் சமூகத்திலும் எளியோருக்குத் தங்களாலான உதவிகளைச் செய்துவரும் தெலங்கானாவின் மீரா சங்கமித்ரா, இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதிவுசெய்த சத்யஸ்ரீ ஷர்மிளா, வழக்கறிஞர் விஜி, முன்னுதாரணத் தம்பதி இலக்கியா - மூர்த்தி எனப் பலருக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் மூத்த திருநங்கைகள் மோகனா அம்மா, மதுரை நூரி அம்மா, கங்கா அம்மா, சுந்தரி அம்மா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தகுதி இருந்தும் காவலர் பணிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தேனியைச் சேர்ந்த ஆராதனா, திருநர் தம்பதிகளான பிரித்திஷா - பிரேம், நர்ஸிங் படித்துவரும் தமிழ்ச்செல்வி, நடனக் கலைஞர் நபிஷா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்துவரும் இளம் திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. மூத்த திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கான உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
திருநங்கைகள் விழா என்றாலே ஆட்டம், பாட்டம் என்று தூள் பறக்கும். இந்த விழாவிலும் அப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி எல்லோரின் மனத்தையும் கவர்ந்தது காமாட்சி, மீனாட்சி, கருமாரி, விசாலாட்சி என அரங்கம் முழுவதும் அம்மன் வேடமிட்டுத் திருநங்கைகள் மேடையில் வலம் வந்தது.
முத்தாய்ப்பாக அர்த்தநாரி உருவிலும் தோன்றிக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்ல; வழிபாட்டுக்கும் உரியவர்கள் திருநங்கைகள் எனும் கருத்தைப் பதியவைத்த ஸ்வேதாவையும் அவருடைய நண்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT