Published : 12 May 2019 11:42 AM
Last Updated : 12 May 2019 11:42 AM
அழகிய ரயில் பாதைகள் பல உலகில் இருக்கலாம். அப்படிப்பட்ட ரயில் பாதைகளில் ஒன்று தமிழகத்திலும் இருக்கிறது, அது ‘செங்கோட்டை- கொல்லம்’ ரயில் பாதை. பசுமை செழித்து பச்சையாகப் பூத்துக்கிடக்கும் காட்டைக் கிழித்தபடி மலையின் மீது, ஒரு மலைப்பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்லும் அந்த ரயில் பாதை அழகின் ஊற்று; உற்சாகத்தின் மறுவடிவம். அதேநேரம், மகிழ்ச்சிக்கும் பிரமிப்புக்கும் இணையாகத் திகிலையும் மிரட்சியையும் தரக்கூடியது அந்தப் பாதை. புளியரை கிராமத்துக்கு அடுத்து வரும் ‘எஸ்’ வளைவுக்கு அருகிலிருக்கும் ஆரியங்காவு மலைக்குகையே இந்த ரயில் பாதையின் தனிச்சிறப்பு.
நேரமும் வாய்ப்பும் கூடிவந்த ஒரு நாளில், செங்கோட்டைக்குப் பொதிகை ரயிலில் ஏறினேன். ரயில் முழுவதும் நெல்லைத் தமிழ் நிரம்பி வழிந்தது. பெரியவர்களின் அதட்டலையும் மீறிச் சிறுவர்கள் உற்சாகத்தோடு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, ஆரியங்காவுக்கு இப்போது ரயில் இல்லை என்றார்கள். தாமதிக்காமல், ஆரியங்காவுக்கான பேருந்தில் ஏறினேன். கனமழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்தது. பாதையெங்கும் இருந்த ஏரிகளும் குளங்களும் நிரம்பித் தளும்பின. குளுமையும் பசுமையும் ஒன்றுகூடியிருந்தன.
ஆரியங்காவைச் சட்டெனப் பேருந்து அடைந்துவிட்டதுபோலத் தோன்றியது. மழையின் அடர்த்தியும் சற்று அதிகமாகவே இருந்தது. பேருந்து நிலையம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சாலையின் ஓரத்தில் இருந்த நான்கு கடைகள் மட்டுமே, அது பேருந்து நிற்கும் இடம் என்பதை உணர்த்தின.
தேநீர்க் கடையிலிருந்து வந்த நேந்திரம் பழம்பொரியின் (பஜ்ஜி) வாசனை மூக்கைத் துளைத்தது. செங்கோட்டை ரயிலின் நேரத்தைத் தெரிந்துகொள்ள ரயில் நிலையத்துக்குச் சென்றேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும் எனச் சொன்னார்கள். சில நிமிடங்களில் ரயிலின் தடதடக்கும் ஓசை கேட்டது. கையில் இருந்த கேமராவைப் பத்திரமாகப் பிடித்தபடி, அந்த ரயிலில் ஏறினேன்.
ஆரியங்காவு குகை வந்தது. முன்பைப் போல் இப்போது அது இருளில் மூழ்கியிருக்கவில்லை. மின்விளக்குகள் சீராக ஒளியைப் பாய்ச்சி இருளை அகற்றியிருந்தன. செங்கோட்டையை அடையும் முன்பே இருளும் சூரிய ஒளியை விழுங்கி இருந்தது. செங்கோட்டை பழைய செங்கோட்டையாகவே இருந்தது. நகரமய மாக்கலின் பாதிப்புகள் பெரிதாக அதைத் தீண்டவில்லை. மலையாளம் கலந்த தமிழில் பேசும் அந்த மக்களின் மொழி இன்றும் கலப்படமற்றதாக இருக்கிறது. ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் மட்டுமல்லாமல்; அவற்றில் இருந்த பெரும்பாலான கடைகளின் அமைப்பும்கூட மாறாமல் இருந்தது. மழைக் காலத்தில் சூடாகத் தேநீர் அருந்துவது சுகமான அனுபவம். தேநீரைத் துளித்துளியாகக் குடித்தபடி, பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ஏதோவொரு கடையிலிருந்து வந்த பரோட்டா - சால்னாவின் வாசம், `பார்டர் பரோட்டா ஸ்டால்'களை நினைவூட்டியது. திருநெல்வேலி அல்வாவுக்கு இணையாக `பார்டர் பரோட்டா'வும் தமிழகம் எங்கும் பிரசித்திபெற்றது. குற்றாலம் வருபவர் களும் கேரளத்துக்குச் செல்லும் லாரி ஓட்டுநர்களும், அங்கு பரோட்டா சாப்பிடாமல் போக மாட்டார்கள். ‘கண் சிவந்து இருப்பவர்களுக்கு’ ஒரு சால்னா, மற்றவர்களுக்கு வேறு சால்னா என இரண்டு வகை சால்னாக்களை பரோட்டாவுக்கு ஊற்றும் வழக்கம் அங்குள்ள கடைகளில் உண்டு.
புளியரை ‘எஸ்’ வளைவிலிருந்து ஆரியங்காவு குகைக்குள் நடந்து செல்ல முடியும் என்பதால், மறுநாள் அந்த ‘எஸ்' வளைவுக்கு ஆட்டோவில் சென்றேன். வழியெங்கும் வெள்ளக்காடாக இருந்தது. ஏரிகளும் குளங்களும் அருகிலிருந்த விளைநிலங்களிலும் குடியிருப்புகளிலும் புகத் தொடங்கியிருந்தன.
பகல் 10 மணிக்குப் புளியரை ‘எஸ்’ வளைவை அடைந்தேன். ‘எஸ்’ வளைவில் மழைநீர் வெள்ளமாகப் பாய்ந்தோடியது. அருகில் இருந்த கடையில் சுடச்சுட மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார்கள். விதவிதமான ஊறுகாய்களும் உப்பில் ஊறவைத்த நெல்லிக்காய்களும் கண்ணாடிக் குடுவைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்தவுடனே நாவூறியது. ஒரு நெல்லிக்காயை வாங்கி வாயில் போட்டவுடன், புளிப்பும் துவர்ப்பும் நிறைந்த, அதன் சுவையில் உடலின் ரோமங்கள் சிலிர்த்தன.
சாலையின் அருகில் இருந்த மேட்டின் மீதேறி சாலைக்கு இணையாகச் செல்லும் தண்டவாளத்தை அடைந்தேன். நடுத்தர வயதிலிருந்த கண்ணன் தன்னுடைய மகனுடன் ஆரியங்காவுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுவதாகவும் தன்னுடைய மகன் ஜெய் ஷிவ்வுக்கு ஆரியங்காவு குகையைக் காட்ட அழைத்து வந்ததாகவும் சொன்னார். தண்டவாளத்தில் நடந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் மரியாதையுடன் அவரிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஆசிரியருக்கு மரியாதை!
காய்கறிக் கூடையைத் தலையில் சுமந்தபடி எதிரில் சென்ற தம்பதி, ‘மழையில் எங்கே செல்கிறீர்கள்?’ என்று அக்கறையுடன் கேட்டபடி கடந்தனர். அவர்கள் அங்கிருக்கும் ரப்பர் எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்கள் என்றார் கண்ணன். மேலும், ‘எஸ்’ வளைவுக்கு அந்தப் பக்கம் இருக்கும் மலைமேட்டில் அவர்களுடைய வீடு உள்ளது என்றும், தினமும் நடந்தே ஆரியங்காவுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ரப்பர் எஸ்டேட்டுக்கு அவர்கள் சென்று திரும்புவார்கள் என்றும் கூறினார்.
மழையில் குளித்த தண்டவாளத்தில் நத்தைகள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. மழையினூடே அந்தப் பகுதி மக்களும் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு ரயில் தேவையில்லை, தண்டவாளம் மட்டும் போதும் என்றே தோன்றியது.
தண்டவாளத்திலிருந்து சாலையில் இறங்குவதற்கு முன்னர், காற்றோடு சுழன்றடித்த மழை உடம்பை ஈட்டியாகத் துளைக்கவே, தண்டவாளத்தை ஒட்டியிருந்த தகர வீட்டின் அருகில் ஒதுங்கினேன். மலையடிவாரத்தில் பசுமையான சூழலுக்கு மத்தியில் இருந்த அந்த வீடு அடர் மழையில் அழகாகத் தோன்றியது. அந்த வீட்டினுள் இருந்த தம்பதி, மழையைக் கடுமையாகச் சபித்தபடியே, எங்களை உள்ளே வருமாறு அழைத்தனர். அழகான இந்த மழையை ஏன் சபிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘அழகா சோறு போடும்?’ என்று கேட்டபடி அங்கிருந்த பெண் அடுப்பை ஊதினார். புகையும் இருளும் கண்ணை உறுத்த, கண்ணைச் சுருக்கியபடி ஜன்னல்வழி வெளியே பார்த்தேன். ஏதோ ஒரு பறவை உற்சாகமாகப் பாடியபடி பறந்து சென்றது. தொழுவத்தில் சுகமாக அசைபோட்டுக்கொண்டிருந்த மாட்டின் மடியை முட்டி முட்டி அதன் கன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. இயற்கை தனது மொத்த அழகையும் மழையாய்ப் பொழிந்துகொண்டிருந்தது. இருப்பே பெரும் போராட்டம் என்ற நிலையில் இருப்பவர்களின் வாழ்வில் ரசிப்பதற்கு ஏது நேரம்?
படங்கள்: முகமது ஹுசைன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT