Published : 26 May 2019 09:59 AM
Last Updated : 26 May 2019 09:59 AM
பயணம் செய்வது வாழ்க்கை ஓட்டத்தின் ஓர் அங்கம். அதை அனுபவித்துவிடும் முடிவோடு நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை பைக் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்தேன். பறக்கையில் தொடங்கியது பயணம். ‘இருக்கப் பறக்கை' எனக் காலம் காலமாகப் புகழப்பட்டுவரும் ஊர்.
கோயில், குளம் என ரம்மியம் சூழ்ந்து இருப்பதால் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இங்கு ரச வடையும் ஏகப் பிரசித்தம். பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நேர்ந்துகொண்டு ‘அமிர்தக்கலசம்' எனும் பிரசாதத்தைப் படைப்பார்கள். அடுப்பில்லாமல் செய்யப்படும் இந்தப் பிரசாதம் இங்கு மட்டுமே உண்டு.
நாஞ்சில் மண்ணில் இருந்து காலை ஏழு மணிக்குக் கிளம்பினேன். அந்தக் காலை நேரத்தில் நாகர்கோவிலில் துப்புரவுப் பணியாளர்கள் வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். “அள்ளுறது குப் பையினாலும் இது தொழிலு மக்கா. அதுக்கு மரியாதை கொடுக்கணுமே. அதான் குளிச்சு, சுத்தமா வருவோம்” என்கிறார் பார்வதிபுரத்தில் குப்பை அள்ளிக்கொண்டிருந்த மாரியம்மாள்.
வாழ்க்கை எனும் ஓட்டம்
பார்வதிபுரம் தாண்டி சுங்கான்கடை பகுதிக்கு வந்துவிட்டதைச் சாலையின் இருபுறங்களிலும் வரிசைகட்டி நிற்கும் மட்பாண்டங்கள் உணர்த்துகின்றன. சுங்கான் கடை, மட்பாண்டத் தொழிலாளர்கள் நிறைந்த ஊர். இங்கு மட்பாண்டக் கலைஞர்களுக்கான கூட்டுறவுச் சங்கமும் உண்டு.
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் பொங்கல் பானைகள் இங்கிருந்து செல்கின்றன. அந்தக் காலை நேரத்தை இன்னும் அழகாக்கிக்கொண்டிருந்தது விவசாயிகளின் பயணம். எதிர்ப்பட்ட விவசாயியிடம் பேசிவிட்டு நகர்ந்தால் வில்லுக்குறி பாலத்தைக் கடந்தது பைக்.
பாலம் மேலே தண்ணீர்
வில்லுக்குறிப் பாலத்தின் விசேஷம் என்ன தெரியுமா? பொதுவாக, சாலையினூடே செல்லும் பாலத்தின் மீது வாகனங்கள் போகும். ஆனால், வில்லுக்குறியில் பாலத்தில் தண்ணீர் ஓடும். பாலத்தின் கீழ்ப் பகுதியில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை. பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் இதன் பெயர் பத்மநாபபுரம்-புத்தனாறு கால்வாய்!
மார்த்தாண்டத்தில் தேசிய நெடுஞ் சாலையில் பயணிக்கையில் தேன் விற்பனையகங்கள் பல தென்பட்டன. தமிழகத்திலேயே இங்குதான் அதிக அளவு தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனாலேயே மார்த்தாண்டத்தை ‘தேன் கிண்ணம்' என்கின்றனர். ஆனால், இப்போது போக்குவரத்து நெருக்கடி, பால பணிகளுக்கு மத்தியில் மார்த்தாண்டமே வாகன ஓட்டிகளுக்குத் திகட்டுகிறது.
மார்த்தாண்டத்தைக் கடந்ததும் வெட்டு மணி. ‘டமால்…டமால்’ எனச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் இங்குள்ள சாஸ்தா கோயிலில் வெடி வழிபாடு நடப்பதுதான். வாசலிலேயே வெடிக்கடை இருக்கிறது. பக்தர்கள் நேர்ந்துகொண்டு வெடிவைத்து வணங்குகின்றனர்.
அதைத் தொடர்ந்து வரும் தாமிரபரணி ஆற்றைக் கடந்தால் குழித்துறை. இன்னும் முழுதாகக் கேரளத்துக்குள் நுழைந்து விடவில்லை. ஆனாலும், கடைகளிலும் விளம்பரப் பலகைகளிலும் தமிழும் மலையாளமும் சேர்ந்தே உறவாடின.
களியக்காவிளைதான் தமிழக எல்லைப் பகுதி. தமிழகத்தின் நன்றியும், கேரளத்தின் வரவேற்பும் ஒருசேர காணக்கிடைக்கின்றன. களியக்காவிளை சோதனைச் சாவடியைத் தாண்டி பயணிக்கிறது பைக். காரில் முந்திச் செல்பவர்கள் எல்லாம் சீட் பெல்ட் போடுகிறார்கள். டூவீலர் ஓட்டிகள் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள் கிறார்கள். நிமிர்ந்து பார்த்தால் ‘வெல்கம் டூ கேரளா' என போர்டு பளபளக்கிறது.
குலுக்கி சர்பத்தும் சிவானந்தும்
இந்த நாகர்கோவில்-திருவனந்தபுரம் பயணத்தின் ஊடே சுவையான பெருங்கதை ஒன்றும் இருக்கிறது. சுங்கான்கடை பகுதியில் சாலையோரத்தில் கிடைக்கும் ‘நுங்கு சர்பத்’ ரொம்பப் பிரபலம். சர்பத்தில் நுங்கைப் போட்டு கொடுப்பார்கள்.
கேரளத்துக்குள் நுழைந்ததும் வாழைப்பழத்தில் போடப்படும் பழ பஜ்ஜியின் வாசம் வீதியெங்கும் வீசுகிறது. பாலராமபுரம் பேமஸ் நாட்டுக்கோழிப் பிரட்டுக்கு ஆசைப்பட்டு, நாகர்கோவிலில் இருந்து பயணிப்பவர்களும் உண்டு. அனைத்திலும் கவனத்தை ஈர்த்தது கேரளத்தின் குலுக்கி சர்பத்.
அது என்ன குலுக்கி சர்பத் எனத் தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு குறுங்கதை. பாறசாலை தாண்டி திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்தப் பையனைச் சந்தித்தேன். நல்ல குண்டான உடல். லேசான மீசை, தாடி. பார்க்கவே ‘அமுல் பேபி'யாகவும் பட்டென்று நெஞ்சோடு ஒட்டிக்கொள்ளும் சிரித்த முகமாகவும் இருந்தான்.
வலது கையையும் இடது கையையும் சேர்த்து, இடையில் இரு கண்ணாடி டம்பளர்களை ஒன்றின் மேல் மற்றொன்று வைத்து சாலையில் நின்று குலுக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் முழுவதும் அதற்கு ஏற்ப குலுங்க, சிரித்த முகத்தோடு இருந்தான். அவன் தந்த பிரமிப்பும் அந்தச் சிரித்த முகமும்தான் வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் கொண்டுசேர்த்தது.
ஒரு கப்பில் எலுமிச்சையைப் பிழிந்து ஊற்றினான். தொடர்ந்து உப்பு, இஞ்சிச் சாறு, ஒரு பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டான். தொடர்ந்து சர்பத்தின் அன்னாசிப்பழ ஃபிளேவரைக் கலந்தான். இத்துடன் கேரளத்தில் ‘கஸ் கஸ்' என்னும் பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒரு வகை மூலிகையைப் போட்டு சிறிது நீர் சேர்த்து, அதன் மேல் இன்னொரு கப் வைத்து மூடி குலுக்கு குலுக்கு எனக் குலுக்கினால் ‘குலுக்கி சர்பத்’ ரெடி.
அத்தனையையும் படம் எடுத்துவிட்டு, “பெயர் என்ன?” என்றேன். “சிவானந்த், வயது 29 ஆகிறது” என்றான். பர்ஸைத் திறந்து மனைவியின் ஒளிப்படத்தைக் காட்டினான். தினமும் 500 ரூபாய்வரை இந்தத் தொழிலில் கிடைக்கிறது என்றவன் தொடர்ந்து சொன்ன விஷயம் இந்தப் பயணத்தையே வியக்கவைக்கும் சம்பவமாக மாற்றிவிடும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
கிளம்ப எத்தனிக்கையில், என்னிடம் “நீங்க ஜூஸ் குடிக்க வந்த பத்து நிமிஷத்துல இவ்வளவு நட்பா பழகிட்டீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா?” என்றான். சரி என்றதும், “நான் பேஸிக்கா பையன் இல்ல; பொண்ணு. பிறப்பால பொண்ணா இருந்தாலும் என்னை நான் பையனாத்தான் நினைச்சுகிட்டேன். எனக்குள்ள எப்போ இந்த மாற்றம் வந்துச்சுன்னுகூட ஞாபகம் இல்ல.
என்னைப் பையன்னு நினைச்சுத்தான் ஒரு பொண்ணு லவ் பண்ணுச்சு. அவளுக்காகத்தான் பெங்களூருக்குப் போய் ஐந்தரை லட்சம் ரூபாய் செலவு செஞ்சு, முழுசா ஆணா மாறுனேன். அந்தப் பொண்ணையே திருமணமும் செஞ்சுகிட்டேன். நான் திருநம்பின்னு சொல்லிக்கிறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
என்ன, ஜூஸ் குடிக்க வர்றவங்களுக்குத் தெரிஞ்சா, கேலி பேசுவாங்க. ஆனா அதைத் தாண்டி எங்க வலியை, வாழ்க்கையை நானும் என் மனைவியுமா சேர்ந்தே உங்ககிட்ட பேசணும்னு நினைக்குறேன். இன்னொரு நாள் வீட்டுக்கு வர முடியுமா?” என்று சொல்லிக்கொண்டே, வேலைகளைக் கவனித்தான். இப்படியாக இந்தப் பயணத்தின் மறக்க முடியாத மனிதராகிப் போனார் சிவானந்த். பயணங்கள் வெறும் இடம்பெயர்தல் மட்டும் அல்லவே!
படங்கள்: ராஜேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT