Published : 15 Sep 2014 01:00 PM
Last Updated : 15 Sep 2014 01:00 PM
செப்டம்பர் 07 அன்று வெளியான பெண் இன்று இணைப்பில் ‘ஆண்கள் சமைக்கக்கூடாதா?’ என்று எழுதியிருந்த வாசகரின் கேள்விக்குப் பலதரப்பட்ட பதில்கள் வந்து குவிந்துவிட்டன.
பலர் அந்தக் கேள்வியின் அடிநாதத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் வாசகர் குறிப்பிட்டிருந்த விளம்பரம் குறித்தும் அதன் காட்சியமைப்பு குறித்தும் விவாதித்திருந்தனர். பலர் இதுபோன்ற விளம்பரங்களை வைத்து மக்களின் மனநிலையை முடிவுசெய்துவிட முடியாது என்றும் வாதிட்டு இருந்தார்கள். அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
மனைவியைவிட என் சமையல் சிறந்தது
பெரிய பெரிய உணவகங்களிலும் சுப நிகழ்வுகளிலும் ஆண்களே சமைக்கிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்களில் எத்தனை சதவீதத்தினருக்குச் சமையல் தெரியும்? எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் தம்பதி, அனைத்து வேலைகளையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள்.
காலையில் கணவர் காபியுடன் மனைவியை எழுப்புவார். இருவரும் சேர்ந்து சமைத்துமுடித்துவிட்டுப் பள்ளிக்குக் கிளம்புவார்கள். வீடு திரும்பிய பிறகும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இதுதானே மகிழ்ச்சியான இல்லறம்? நானும் என் வீட்டில் சமையல் வேலைகளைப் பகிர்ந்து கொள்வேன். சொல்லப்போனால் சில உணவுகளை என் மனைவியைவிட நான் நன்றாகச் சமைப்பேன்.
- ஏ.சி. ராஜன்,
பெத்தானியாபுரம், மதுரை.
ஆணாதிக்கத்தைக் குறைசொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த மன உறுத்தலும் இல்லாமல்தான் இதைச் சொல்கிறேன். ஆண்கள் சமைக்க வேண்டும், அதில் தவறேதும் இல்லை. கணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மனைவி எப்படியெல்லாம் கவனித்துக் கொள்கிறாள். அதே அன்பும் அக்கறையும் கணவனுக்கு மனைவியிடம் இருப்பதுதானே நியாயம்? சமையலில் மனைவிக்கு உதவுவதுடன் ஆணே சமைக்கும்போது அங்கே அன்னியோன்யம் அதிகரிக்கும். அன்பு தழைக்கும், மகிழ்ச்சி பொங்கும், நோய் வராது.
- பர்வதம் கணேசன், பெரம்பலூர்.
பெண்களே காரணம்
சமையல் பெண்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று எந்த ஆண்மகனும் சொல்லவில்லை. பெண்கள்தான் சொல்கிறோம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இருவரும் இணைந்தே வீட்டுப் பணிகளைச் செய்கிறார்கள். முந்தைய தலைமுறை ஆண்கள்தான் அம்மா, சகோதரிகளின் கேலிக்குப் பயந்து வீட்டு வேலைகளைத் தவிர்த்தனர்.
‘பெண்டாட்டிக்கு கூஜா தூக்குகிறான்’, ‘பெண்டாட்டிதாசன்’ போன்ற பட்டங்களை ஏற்றுக்கொள்ள நேரிடுமோ என்ற மனோபாவமே அதற்குக் காரணம். ஆணாதிக்கச் சிந்தனை என்று இதை நாம் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அந்தச் சிந்தனையை வளர்ப்பதே பெண்கள்தானே?
- ச. சாய்சுதா, நெய்வேலி.
புரிதல் அதிகரிக்கும்
சமையல் என்பது விரும்பிச் செய்ய வேண்டிய வேலை. பெண்களால் எதையுமே பொறுப்பில்லாமல் செய்ய முடியாது. ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் ஏதோ தாங்கள் சாதனை செய்துவிட்டதாக நினைத்து, அவர்களுக்கு எதையுமே கற்றுத் தருவதில்லை. சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள்.
ஒரு ஆண் தனக்குத் தேவையானதை தானே செய்யப் பழகுவது பின்னாளில் அவன் குடும்பம், வயிறு, மனதுக்கு நிறைவைத் தரும் என்று சொல்லி வளர்க்கப்படுவதில்லை. ஆண்கள் சமைப்பது குற்றமில்லை என்று சின்னத்திரை சமையல் நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. மனைவி, கணவனுக்கு அனைத்து வகையிலும் உதவும்போது கணவனும் மனைவிக்கு சமையலில் உதவலாமே. இது தம்பதிக்குள் புரிதலை அதிகப்படுத்தும்.
வசந்தி, மதுரை.
காதலின் வெளிப்பாடு
கணவனுக்குப் பிடித்த உணவை மனைவி சமைக்கும்போது அது வேலையாகத் தெரியாது. அதில் அளவற்ற அன்பும் காதலுமே வெளிப்படும். என் கணவர் டாக்டர் யோகநாதனை நான் யோகா என்றுதான் கூப்பிடுவேன்.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, எங்காவது வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தாலோ முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்தான் சமைத்து அசத்துவார். இதை என் உறவினர்கள் என்னிடமே கேலியாகச் சொல்வார்கள். நான் இதை அவரிடம் சொல்லி வருத்தப்பட்டால், ‘தன் கணவர் இப்படி இல்லையே என்ற பொறாமையால்தான் இப்படிப் பேசுகிறார்கள்.
நாம் நமக்காக வாழ்கிறோம். அந்த வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். சமையலை சுமையாக நினைத்தால் சுகம் பறிபோய்விடும்’ என்று சொல்வார். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த விளம்பரத்தைக் கூர்ந்து கவனித்தால் அதில் மனைவியின் அன்பும் காதலும் புலப்படும். மஞ்சள் காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சள் நிறத்தில்தான் தெரியும்.
- ஷாந்தி யோகா, திருச்சி.
சலிப்பு வந்துவிடும்
விசேஷம், விருந்துக்குச் சமைப்பது ஆண்கள், வீட்டில் சமைப்பது பெண்கள் என்ற கருத்து எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. கால மாற்றத்தில் பெண்கள் படித்து, வேலைக்குச் சென்று கணவரின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணுக்குக் கணவன் செய்யும் பிரதி உபகாரம் என்ன? அவளை மேலும் மேலும் கஷ்டப்படுத்துவதுதான். பெண்ணின் மனநிலை, உடல்நிலை, அலுவலகப் பணி அனைத்தையும் உணர்ந்து அவளுக்கு அனுசரனையாக இருந்தால்தானே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்? மயிலிறகுதானே என அதிகமாக ஏற்றப்பட்ட வண்டியும் அச்சு முறிந்துவிடும் என்று வள்ளுவர் சொன்னதுபோல தினம் தினம் பெண்களே சமைக்கும்போது அவர்களுக்கும் அலுப்பும் சலிப்பும் வந்துவிடும்.
ஆண் என்கிற அகந்தையும், பிறர் கேலி பேசுவார்களோ என்ற தயக்கமும் இல்லாமல் ஆண்களும் சமைக்க வேண்டும்.
- கஜலட்சுமி சுப்ரமணி, திருச்சி.
பெண் என்பவள் போதைப் பொருளாகவும் போகப் பொருளாகவும்தான் தெரிகிறாள். செண்ட் அடித்தால் வியர்வை நாற்றம் போகும் என்று சொல்ல வேண்டிய விளம்பரத்தில் பெண்கள் ஆணின் பின் செல்வது போல் விளம்பரப் படுத்துகிறார்கள்.
வளரும் இளம் தலைமுறையினர் இந்த மாதிரி விளம்பரங்களைப் பார்க்கும்போது எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் சமைப்பது பெண்களுடைய வேலை என்று அவர்கள் மனதில் எளிதாகப் பதிந்துவிடும். பெண்கள் பற்றிய சித்திரிப்புகளை மாற்றி அமைத்திட வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
- தங்க. புஷ்பலதா, கும்பகோணம் .
சமையலில் வேண்டும் சமத்துவம்
ஆண்கள் சமைத்தால் பெருங்குற்றம் என்பது போல் பேசுவது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு. ஒரு ஆண் சமையலையே தொழிலாகச் செய்வதைப் பாராட்டிப் புகழும் உலகம் வீட்டில் மனைவிக்கு ஒத்தாசையாக சமையல் செய்தால் பண்டாரி (சமையல்காரர்), பொண்டாட்டிதாசன் எனக் கூறுவது பெண்ணை அடிமையாக்கும் முயற்சியின் வெளிப்பாடே.
பெண் குழந்தைகளைப் போல் ஆண் குழந்தைகளுக்கும் சமையலைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்தால் அம்மாவுக்கு உதவி செய்வதைப் போல் பின்னாளில் மனைவிக்கும் உதவுவான். இன்று பல ஆண்களுக்குத் தலை வலித்தால் டீ போட்டுக் குடிக்கக்கூடத் தெரியாததற்கு காரணம் இதுவே.
ஒரு காலத்தில் பெண் வீட்டு வேலையை மட்டும் பார்த்தாள். ஆண் வேலைக்குச் சென்றான். சமையல் அவர்களுக்குச் சுமையாகத் தெரிந்ததில்லை. ஆனால் இன்றோ கணவன், மணைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது சமையல் வேலையில் ஆண் ஒத்துழைக்கவில்லை என்றால் அதிகாலையிலேயே முணுமுணுப்புகளும் சண்டைகளும் உருவாகிவிடும்.
அன்றைப் பொழுது அமைதியற்றதாகவே கழியும். எனவே ஆண் சாப்பிட மட்டும்தான் செய்வான் என்ற உலுத்துப் போன சித்தாந்தத்தைப் பிடித்துத் தொங்காமல் அதனை உதறிவிட்டு ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுவோம் என்ற சமத்துவ சிந்தனைக்கு மாறுவோமேயானால் அந்த சமையல் அமுதமாக மாறுவது உறுதி.
-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கற்றுக்கொள்ள வேண்டிய கலை
காலையிலேயே கணவன், மனைவி இருவரும் பணியின் நிமித்தம் வெவ்வேறு பாதையில் பிரிந்து சென்று விடுகிறார்கள். அப்போது சமையலறையில் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பதே கணவன்தான். அதைத்தான் ஒவ்வொரு இல்லத்தரசியும் விரும்பி எதிர்பார்க்கிறாள் .
அந்த நேரத்தில் சில அலுவல்கள், தேவைகள் பற்றிப் பேசி முடிவெடுப்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்கிறது. தவிர, ‘சமையல் என்றால் கிலோ என்ன விலை ?’ என்று கேட்கிற கற்றுக்குட்டிக் கணவர்கள் சமையல் கற்றுக்கொள்ளவும் முடியும். அப்பொழுது , மாலையில் தாமதமாக அலுப்புடன் கூட்டுக்குத் திரும்புகிற குருவிகள் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்காமல் , நேரடியாக சாப்பாட்டு மேஜைக்கே சென்றுவிடலாம். எனக்கு ஒரு மேல்நாட்டுப் பழமொழி நினைவுக்கு வருகிறது.
‘எவன் தன் மனைவியை கைநீட்டி அடிக்கிறானோ , அவன் அவளுக்கு மூன்று விடுமுறை நாட்களையும் தனக்குத் தானே மூன்று உபவாச நாட்களையும் கொடுத்துக் கொள்கிறான்’. இந்த நிலை வராமலிருக்க , ஒவ்வொரு ஆணும் சமையல் என்கிற அரிய கலையையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
- சந்திரா மனோகரன் , ஈரோடு .
இன்றைய இளைய தலைமுறையில் ஆண்கள் தங்களால் ஆன உதவிகளை வேலைக்குச் செல்லும் தம் மனைவிக்குச் செய்கின்றனர். சமையலறைப் பக்கமே வராமல் இருப்பதில்லை. தன் குடும்பத்தோடு இருக்கும்போது செய்யும் உதவிகளைத் தன் அம்மா மற்றும் உறவினர் வரும்போது செய்யத் தயங்குகின்றனர்.
அவர்கள் தவறாக எண்ணிவிட வாய்ப்பு உள்ளதாலா?புரியவில்லை. தன் வீடு, தன் மனைவி, குடும்பம் என எண்ணி புரிதலோடு சமையலைச் செய்ய முயலும்போது அன்பான குடும்பம் உருவாகிறது. விரைவில் இந்த மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.
- நேஹா யாழினி, சேலம்.
பெண்களின் சாம்ராஜ்யம்
நடுத்தர இல்லங்களில் ஆண்கள் சமைப்பது அப்படியொன்றும் அதிசயம் கிடையாது. ஓரிரு இடங்களில் வேண்டுமானால் வாசகர் கூறுவதைப்போல ஆணாதிக்கங்கள் இருக்கலாம் முழுவதுமாக அதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரேயடியாக எல்லா இடங்களிலும் ஆண்கள் சமையலறைக்கே போவதில்லை என்பதும் உண்மையானதல்ல.
சமையல் என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதும் அந்த இடத்தை அவர்கள் வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை என்பதும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கும் இதுதான் பிடிக்கும் அதையும் நான்தான் செய்வேன் என்ற எண்ணம்தான் ஆண்களைச் சமையலறைப் பக்கம் விடுவதில்லை. பெரும்பாலான மாமியார் மருமகள் கருத்து வேறுபாடுகளின் ஆரம்பம் சமையலறையிலிருந்தான் தொடங்குகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் என் மகள், “அப்பா நீங்கள் இன்றைக்கு வெஜ்பிரியாணி செய்து கொடுங்கள்” என்று கேட்கும்போது அன்றைக்கு கிச்சன் எனது கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். ஆனாலும் பிரியாணி, குருமா, தயிர் வெங்காயம் என்று என் சமையலை நான் முடிப்பதற்குள் என் அம்மா மற்றும் மனைவி இருவரின் தலையீடு பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை மாதிரி வந்து வந்து போகும்.
சமையல் முடிந்ததும் பிரியாணி சூப்பர் என்றும் பேசாம நாளையிலிருந்து நீங்களே சமையலை பண்ணியிருங்களேன் என்பார்கள். ஆனால் மறுநாள் கிச்சனுக்குள் நுழைவே எனக்கு அனுமதி கிடைக்காது. பெண்கள் என்றும் பெண்கள்தான்!
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி
பெண்மையின் அடையாளம்
தாய்மை எனும் ஈடில்லாச் சிறப்பைப் பெண்கள் விட்டுக்கொடுத்து விடுவார்களா? அதேபோல்தான் மனைவி என்பவள் எவ்வளவோ பெரிய பதவியில் இருந்தாலும் அன்பு, கருணை, காதலுடன் அவள் சமைக்கும் உணவுகளுக்கு இருக்கும் மகத்துவமே தனிதான் .
மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டாலும் கிடைக்காத மனநிறைவும் வயிறு நிறைவும் வீட்டில் மனைவி அல்லது அம்மா கையால் சமைத்த உணவில் மட்டுமே கிடைக்கிறது என்பதை எந்த ஆணும் மறுப்பதில்லை. இதுதான் பெண்களின் சமையல் திறமைக்குக் கிடைத்த வெற்றியும் அங்கீகாரமும்.
அதற்காக ஆண்களை சமைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய ஆண்களில் பெரும்பாலோர் நன்றாகச் சமைக்கிறார்கள். ஆகவே சம உரிமையை சமையலில் காட்டாமல் சபையினில் பெண்கள் காட்டினால் அதுவே உண்மையான பெண் சுதந்திரம் .
- சுபா தியாகராஜன், சேலம்.
மனைவியை நேசிக்கும் ஆண்கள் நிச்சயமாகச் சமைப்பதைத் தவறென்று சொல்லமாட்டார்கள். ஆண்களுக்கு இணையாக எல்லா வேலையையும் பெண்கள் செய்யும்போது வீட்டில் சமைப்பது மட்டும் பெண்களின் வேலையா? பெண்கள் பிறக்கும்போதே கரண்டியைக் கையில் பிடித்துக் கொண்டா பிறந்தார்கள்? சம்பளத்துக்காக ஆண்கள் உள்நாடு,வெளிநாடெல்லாம் போய் சமைக்கும்போது அவரவர் மனைவிக்காக ஏன் சமைக்கக் கூடாது ?
- ராஜபுஷ்பா, கும்பகோணம்
அடிப்படை சமையல் அவசியம்
பல வருடங்களுக்கு முன் என் அம்மா வழிப் பாட்டி இறந்து விட, தாத்தா 5, 3, 1 என்ற வயதுடைய மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம். அவர் மறுமணம் செய்துகொள்ளவில்லை. போஸ்ட் மாஸ்டராக இருந்த என் தாத்தா, அவரே சமையல் செய்து தன் மூன்று குழந்தைகளையும் அருமையாக வளர்த்தார்.
எங்கள் வீட்டில் 4 ஆண், 2 பெண் பிள்ளைகள். அதில் என் இரண்டாவது அண்ணன் அருமையாகச் சமைப்பார். சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர், சிறு வயதில் சமையலறையில் உதவியதை என்னால் மறக்கவே முடியாது. திதி அன்று அதிரசம், வடை இவற்றுக்கான மாவு வகைகளைத் தயார் செய்ய அந்தக் காலத்தில் மிக்ஸியோ கிரைண்டரோ கிடையாது.
என் அண்ணன் குளித்து, ஈர டவலுடன் சமையல் அறையில் வந்து உரலில் அமர்ந்து அதிரச மாவு இடித்து பிறகு கல்லுரலில் வடைக்கு அரைப்பார். இன்றும் அவர் ஊறுகாய்க்கு மாங்காய், அவரைக்காய், உருளை, கொத்தவரங்காய் இவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கித் தருவார்.
விருந்து சமைக்கத் தெரியாவிட்டாலும் அடிப்படை உணவான சாதம், ரசம், பொரியல் செய்யவும் காபி, டீ போடவும் நிச்சயம் ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முதுமைக் காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். 64 கலைகளுள் சமைப்பதும் ஒரு கலைதான். எனவே ஆண்களும் கண்டிப்பாக சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- உஷாமுத்துராமன், திருநகர்.
கணவனும் மனைவியும் வாழ்வதெல்லாம் அவரவர் சூழலையும், புரிந்துகொள்ளும் மனநிலையையும் அடிப்படையாகக் கொண்டது. இதில் பொதுவான நியதிகள் சரிவராது. என்னதான் பழமையாகத் தோன்றினாலும் சில உணர்வுகள் அழகானவையே. அந்தப் புரிதல்களே வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
- மோனிகா மாறன், வேலூர்.
கற்பு சார் பிண்டங்களா பெண்கள்?
நம் சமூகத்தின் மனம் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமூகத்தின் மனம் என்பது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பதில்தான் சிக்கல் எழுகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாகச் சமூக மனம் என்பது ஆண்களுடைய மனதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் சமூகத்தில் பெண்களைக் கற்புசார் பிண்டங்களாக மட்டும் பார்க்கிறோம். இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் எல்லாமுமே மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் வாழும் சமூகமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
என்றாலும், பெண்களின் கடமைகளும், உரிமைகளும் தொடர்பான விவாதங்கள் மட்டும் தொடர்ந்தபடி இருக்கின்றன.
சமைப்பது யாருடைய பொறுப்பு என்றால் அது பெண்ணுடையது எனச் சொல்லவே இப்போதும் நம் குழந்தைகளைப் பழக்கப்படுத்துகிறோம். அப்படியானால் ஆண்கள் சமைப்பதே இல்லையா எனக் கேட்பீர்கள்.
பெண்களைக் கவர விரும்பும் சில ஆண்கள் சமையலில் ஒத்துழைக்கின்றனர். அவர்களும்கூட மனைவியின் வேலையில்தான் பங்கெடுத்துக் கொண்டதாகப் பெருமிதம் கொள்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் சமையல் பெண்களுக்கானதாகவே இருக்கிறது. நவீன உலகில் ஒரு ஆண் மனம் பெண்ணைப் புரிந்துகொண்டிருந்தாலும்
அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. பல்லாண்டுகளாக ஆதிக்கத்தைச் செலுத்தியே பழக்கப்பட்டுவிட்ட அம்மனதுக்கு உண்மையை ஒத்துக்கொள்வதில் பெருந்தயக்கம் இருக்கிறது. இருந்தாலும், இருவரும் வேலைக்குப்போகிற குடும்பங்களில் பெண்ணுடன் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அவனுக்கு நேர்கிறது.
அந்தக் கட்டாயத்தின் அடிப்படையிலேயே அவன் சமையல் செய்கிறான். கூடுதலாகச் சில பணிகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறான். மற்றபடி, எப்போதும் ஆண் மனதின் முகமாகவே காட்சிதரும் சமூகத்தில் பெண்களுக்கான வடிவம் இன்றும் குடும்ப குத்துவிளக்காகவே இருக்கிறது.
- முருகவேலன், படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT