Published : 26 May 2019 10:00 AM
Last Updated : 26 May 2019 10:00 AM
அந்தக் காலத்து மருத்துவச்சிகள் பிள்ளைப்பேறு பார்ப்பதிலும் சிறந்தவர்களாக இருந்தார்கள். கன்னிக்குடம் உடைந்து பிள்ளை வெளியே வரும்போது கும்பிட்ட கையோடு தலைதான் முதலில் வரும். சிலருக்குப் பிள்ளையின் தலை வராமல் கால்கள் மட்டும் முதலில் வந்துவிடும்.
அது சிக்கலான பிரசவம். மருத்துவம் பார்க்கிற வயதான பாட்டிகள் வலியோடு தவிக்கும் பெண்களுக்கு ஆறுதல் கூறியபடி பழைய கதைகளைச் சொல்லிக்கொண்டே தங்கள் கைகளில் விளக்கெண்ணெய்யைத் தடவியபடி குழந்தைப் பெறப்போகும் பெண்ணின் உடம்புக்குள் கையைவிட்டுக் குழந்தையின் கைகளை மெல்ல மெல்ல அசைத்து அதன் தலையோடு சேர்த்து மெல்ல வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.
அந்தக் காலத்தில் எங்குமே சிறு சிறு கிராமங்களாகத்தான் இருந்தன. அந்தந்தக் கிராமங்களில் இப்படிப் பிள்ளைப்பேறு பார்ப்பதற்கென்றே சிறந்த மருத்துவச்சிகள் இரண்டு பேர், மூன்று பேர் என்று இருந்தார்கள். சில நேரம் ‘மாலைசுற்றி’ அதாவது கொடிசுற்றி இருக்கும் பிள்ளைகளைக்கூட லாகவமாக உயிரோடு கொண்டு வந்துவிடுவார்கள்.
திலகத்துக்குத் தாய் இல்லை. அய்யாவும் தம்பியும் மட்டும் இருந்தார்கள். அய்யாவுக்கு ஆடு மேய்க்கும் வேலை. காலைக் கெடையிலிருந்து ஆடுகளை ஒதுக்குவதற்காக மகனைக் காலையிலேயே அனுப்பிவிட்டு இவர் வீட்டில் மற்ற வேலைகளைச் செய்வார். திலகத்துக்கு ஆண் குழந்தை பிறந்து மூன்று நாளாகியிருந்தது.
அய்யா முத்துதான் மகளுக்குச் சோறாக்கிக் குழம்பு வைத்துக் குளிப்பதற்கு அடுப்பில் வெந்நி போட்டு ‘அங்கனக் குழி’யில் இறக்கி வெந்நீரைப் பதமாக விளாவி வைத்துவிட்டுப் போவார். பக்கத்து வீட்டுப் பாட்டி வந்து இவள் பிள்ளையைப் குளிப்பாட்டி இவள் குளிப்பதற்கு கூடமாட இருந்து ஒத்தாசை செய்துவிட்டுப் போவார்.
திலகத்துக்கு வந்த சோதனை
அன்று இரண்டு ஆடுகள் குட்டி போட்டிருந்தன. இவள் அய்யா எல்லா வேலயவும் முடித்துவிட்டு அடுப்பில் வெந்நீரைச் சுடவைத்தவர், “தாயீ திலகம் அடுப்புல வெந்நி கிடக்கு. நானு கெடவரைக்கும் போயிட்டு வாரேன். நீ செத்தப் படுத்திரு” என்று சொல்லிவிட்டுப் போனார்.
கொஞ்ச நேரம்வரை அய்யாவை எதிர்பார்த்த திலகம், ‘நம்மதேன் உதறி எடுத்தாப்புல புள்ளய பெத்துட்டோமில்ல நம்ம உடம்பும் சிலேட்டமா இருக்கு. பாவம் அய்யாவுக்கு ஆயிரம் வேலை. இந்தா இருக்க வெந்நிய எறக்க அவர எதுக்கு எதிருப்பாத்துகிட்டு இருக்கணும். இந்தா இருக்கு அங்கனக் குழி.
நம்ம எறக்கிவச்சி பய்ய விளாவி குளிச்சிக்கிடுவோம்’ என்று நினைத்தவள் மெல்ல எழுந்து அடுப்பில் இருந்த பெரிய மொடாப் பானையை இறக்க முயன்றாள். அவ்வளவுதான். வயிற்றுக்குள்ளிருந்த கர்ப்பப்பை சடாரென்று கீழே இறங்கிவிட்டது.
அவ்வளவுதான். திலகத்தால் நகரவே முடியவில்லை. நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. வெந்நி பானை உடைந்து வீடெல்லாம் சுடுதண்ணி ஓடியதுதான் மிச்சம்.
பிள்ளை வேறு அழுது கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டிலிருந்த பாட்டியைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கத்தினாள். பிள்ளை அழும் சத்தத்தில் பாட்டிக்கு இவள் கூப்பிட்டது கேட்கவேயில்லை.
அரை மணி நேரத்துக்கு மேல் ஆன பிறகு திலகத்தின் அய்யா கெடையிலிருந்து வந்தார். வந்தவர் மகளின் நிலையை அறிந்ததும் முத்துப்பேச்சியைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தார்.
வயிற்றுக்குள் பொருந்திய கர்ப்பப்பை
முத்துப்பேச்சி வந்ததும் திலகத்தை வசவா வசவு வைத்தாள். “உனக்கென்ன கொள்ள போவுதுன்னு அப்படிப் போயி அம்புட்டுக் கனமான பானையைத் தூக்குன. புள்ள பெத்த ரெண்டு மாத்தைக்கு வவுத்துக்குள்ள இருக்க கருப்பையி இருந்தடெத்த விட்டு நவண்டுல்ல இருக்கும்” என்று சொன்னவள், “நீரு போயி நம்ம ஊர்ல வால்மிளகு நெல்லு யார் வீட்டுல இருக்குன்னு விசாரிச்சு ஒரு மரக்கா நெல்லு வாங்கிட்டு வாரும்” என்று அனுப்பிவைத்தாள்.
அழுகிற பச்சப் புள்ளயத் தூக்கி மற்றொரு பிள்ளைக்காரியிடம் கொடுத்துப் பால் கொடுக்கச் சொன்னாள். கிராமத்தில் இதெல்லாம் சகஜம். தன் பிள்ளைக்குப் பால் கொடுத்தாலும்கூட அடுத்த பிள்ளைக்கும் ஆத்திர அவசரத்துக்குப் பால் கொடுப்பார்கள்.
முத்துப்பேச்சி நல்ல சோளத்தட்டை ஒன்றை எடுத்து அதன் ஈக்கியைக் கிழித்தாள். தோலைக் கிழித்ததும் உள்ளே தெர்மாகோல் மாதிரி மென்மையான பல்பு இருக்கும். அதை எடுத்துக்கொண்டு வந்தாள். திலகத்தைக் காலை அகட்டியவாறு பனைநார் கட்டிலில் உட்காரவைத்து அவள் தலையைச் சாயும்படி வைக்கச் சொன்னாள்.
வெளியே வந்த கர்ப்பப்பையை நீளமான பல்பால் ரொம்பவும் மெல்ல உடம்புக்குள் தள்ளினாள். இப்படியே அணு அணுவாகத் தள்ளி கர்ப்பப்பையை அதன் இடத்தில் வைத்துவிட்டாள்.
வால்மிளகு நெல் கஞ்சி
இவ்வளவு நேரமும் பாதி குனிந்தும் பாதி நிமிர்ந்தும் கால்களை எடுத்துவைக்காமல் இருந்தும் கடுமையாக இம்சைப்பட்ட திலகத்துக்கு அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அவள் அய்யா வால் மிளகு நெல்லை வாங்கிக்கொண்டு வந்தார். அதை மற்றொருத்தி காயப்போட்டுக் குத்தி அரிசியாக்கிக் கொடுக்க, இன்னொருத்தி அதைத் திருவையிலிட்டு மாவாகத் திரித்தாள்.
அந்த மாவு இப்போதைய முக பவுடர் போல பொட்டாக இருக்கும். அந்த நெல்மாவில் என்ன சிறப்பு என்றால் அதைக் கூழாக்கிக் குடித்தால் வெறும் ஒண்ணுக்குத்தான் போகும். எடுத்துவைத்த கர்ப்பப்பை இருந்த இடத்தில் பொருந்துவதற்கு ஒரு மாதம் ஆகும் அதுவரையிலும் திலகம் இருந்த இடத்தைவிட்டு அசையவே கூடாது.
மூணு வேளைக்கும் அந்த வால்மிளகு நெல்லைக் குத்தி திரித்த மாவில் காய்ச்சிய கூழைத்தான் குடிக்க வேண்டும். தான் பெற்ற பிள்ளையைக் கண்ணால் பார்க்கலாமே தவிர தூக்கக் கூடாது; பால் கொடுக்கக் கூடாது. காலும் அகட்டியபடியேதான் இருக்க வேண்டும்.
உட்கார்ந்தவாறே தூங்கலாமே தவிர படுக்கக் கூடாது. இப்படி அவளுக்கு நிறைய கட்டளைகளைப் பிறப்பித்தாள் முத்துப்பேச்சி. இவளின் மூணு நாள் பிள்ளை மற்றவர்களின் பாலில் வளர்ந்துக்கொண்டிருந்தது, ஒரு மாதத்துக்கு அப்படித்தான் வளர வேண்டும். அந்தக் குழந்தைக்கு அது சரிதான்.
பால் கட்டுக்கு மருத்துவம்
ஆனால், திலகத்துக்குப் பால் கட்டிக்கொண்டதோடு வலி உயிர் போகிறதே. அதற்கும் முத்துப் பேச்சியே ஒரு வைத்தியம் செய்தாள். இரண்டு வெண்கலச் சொம்புகளில் சேலையையோ வேட்டியையோ (அந்தக் காலங்களில் நைலக்ஸ் பாலிஸ்டர் என்று எந்தத் துணியும் கிடையாது. பருத்தியாலான வேட்டியும் சேலையும்தான் இருந்தன) ஒரு கம்பில் தொங்கவிட்டு எரிப்பார்கள்.
துணி எரிந்த உடனே சட்டென்று பக்கத்தில் வைத்திருக்கும் சொம்புக்குள் போட்டு அந்தச் சொம்பை மார்பில் கவிழ்த்தினால் சிக்கென்று பிடித்துக்கொள்ளும். இந்தத் துணியின் புகைவாசனைக்கு மார்பில் இருக்கும் எல்லாப் பாலும் சொம்புக்குள் வந்துவிடும். இப்படியே செய்தால் நான்கு நாளில் பால் வற்றிவிடும்.
சொம்புக்குள் இருக்கும் பாலை மண்ணில் கொட்டக் கூடாது. ஏதாவது நீர் நிலையில் கொட்ட வேண்டும் என்பது ஐதிகம். வெறும் மண்ணில் கொட்டினால் மறுபடியும் அந்தத் தாய்க்குப் பிள்ளை உண்டானால் பால் சுரக்காது என்பார்கள்.
இந்த வைத்தியத்தில் திலகத்துக்கு மட்டுமில்லை; எந்தப் பெண்ணுக்குமே வலி என்பதே இருக்காது. அதோடு மீண்டும் தனக்குப் பால் சுரக்காதோ என்ற கவலை வேண்டாம். பிள்ளை வாய் வைத்துக் குடித்தால் பால் சுரந்துவிடும்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT