Published : 26 May 2019 10:00 AM
Last Updated : 26 May 2019 10:00 AM

தேர்தல் களம்: காத்திருக்கும் கடமைகள்

நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் வாக்களித்த பெண்களின் எண்ணிக்கையும் தேர்தலில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தகுந்தவை. தேசிய, மாநில கட்சிகளின் சார்பில் மட்டுமல்லாது சுயேச்சையாகவும் சில பெண்கள் போட்டியிட்டனர்.

போட்டியிட்ட பெண்கள் அனைவருமே வாகைசூடவில்லை என்பதற்காக, அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் இல்லையென்றாலும்கூட குறிப்பிட்ட சதவீதத்திலாவது பெண்களை வேட்பாளர்களாகக் களம் இறக்கிய கட்சிகளின் செயல் நல்ல முன்னகர்வு.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் 78 பெண்கள்  நாடாளுமன்றத்தில் நம் பிரதிநிதி களாக அமரவிருக்கின்றனர். அவர்களில் மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது.

ஆட்சி அதிகாரத்திலும் ஆண்களின் கரங்களே வலுப்பெற்றிருப்பதால்தான் பெண்களும் குழந்தைகளும் பொதுப்பட்டியலில் வராமல் பின்தங்கவைக்கப்படு கின்றனர். எந்தவொரு பிரச்சினையும் பெண்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும்போது அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச குறைந்த எண்ணிக்கையிலாவது பெண்கள் வேண்டும்தானே. அந்த நம்பிக்கையில்தான் பெண் வேட்பாளர்களை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

வரலாற்று வெற்றி

இந்தத் தேர்தலில் வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான இடங்களை வென்றிருக்கும் நிலையில் தமிழத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. இந்தப் பின்புலத்திலிருந்து பார்க்கும்போது தமிழகத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று பெண்களின் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

தூத்துக்குடி தொகுதியில் வென்ற கனிமொழி, கரூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோதிமணி, முதல் முறையாகக் களம்கண்டு தென்சென்னையில் வெற்றிபெற்றிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவருமே அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்றபோதும் வழக்கமான அரசியலோடு நின்றுவிடக் கூடியவர்கள் அல்ல.

மூவருமே எழுத்தில் ஆர்வம் கொண்டவர்கள். கனிமொழியும் ஜோதிமணியும் மக்கள் நலன் சார்ந்த அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை ஏற்கெனவே பலமுறை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் நலன் சார்ந்தும் இயங்குவார்கள் என்பதற்காகவும்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை இவர்கள் நுண்ணுணர்வோடு அணுகுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருக்கிறது. ஆனால், கணவனைத் தொழுது எழுவது மட்டுமே பெண்களின் முழுநேர வேலை என நினைக்கும் பலர் நிறைந்திருக்கும்  சபையில் இவர்களின் குரல் உரத்து ஒலிக்குமா? ஒலித்துத்தான் ஆக வேண்டும் என்பதையே சூழல் சுட்டிக்காட்டுகிறது. காரணம், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் ஆகியோர் சந்தித்த அவலங்கள் அப்படிப்பட்டவை.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. குறிப்பிட்டிருந்தது.

ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலிலும் அந்தக் கட்சி வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் பெண் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில்கூடக் கொடுத்த வாக்கை அந்தக் கட்சி நிறைவேற்றவில்லை.

பெண்களும் குழந்தை களும் இரண்டாம்பட்சமாக நடத்தப்படும் நாட்டில் அவர்களின் நலனுக்காக உருவாக்கப்படும் திட்டங்களும் ஒதுக்கப்படும் நிதியும் மிகக் குறைவு. முதலாவதாக, பெண் களையும் குழந்தைகளையும் ஒரே பிரிவின்கீழ் வைத்திருப்பதே தவறு.

இரண்டுமே மிகப் பெரிய துறைகள்; தனிக் கவனம் கோருபவையும்கூட. இவர்களின் நலனுக்காகக் கடந்த ஆட்சியில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டது. உலக அளவில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவில்தான் அதிகம் என்பதிலேயே தெரிந்துவிடுகிறது பெண்களின் நலன் குறித்த அரசின் அக்கறை.

ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன்தான் பெரும்பாலான இந்தியப் பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதற்கான அடிப்படை அம்சங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பது அரசின் கடமைக்குள் வராதா? பெண் குழந்தைப் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத வகையில் குறைந்திருக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளே இருக்கின்றனர். பாலினப் பாகுபாட்டின் முக்கியமான விளைவு இது. 

2015-2016-ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி 21 சதவீத நகர்ப்புறப் பெண்களுக்கு மட்டுமே பேறுகாலத்துக்கு முந்தைய மருத்துவ உதவி கிடைக்கிறது. கிராமங்களில் இந்த எண்ணிக்கை 17 சதவீதமாகச் சரிந்திருக்கிறது. பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு மோசமான நிலையில் இருக்கிறது.

பெண்கள் எளிதில் அணுக முடியாத நிலையில் மருத்துவமனைகள் இருக்கின்றன. குறிப்பாகத் தலித் பெண்களை நடத்துவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவமனைகளில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது. ‘வலிமையான பாரதம்' என்ற முழக்கம் வலிமையான பெண்களையும் உள்ளடக்கியது தானே?

கண்துடைப்புத் திட்டங்கள்?

இந்தியத் தாய்மார்களின், சகோதரிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காகவும் அவர்கள் சுகாதாரத்துடன் வாழ்வதற்காகவும்தான் உஜ்வலா திட்டமும் (இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம்) தூய்மை இந்தியா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டங்கள் பெயரளவுக்குப் போடப்பட்டவை என்பதைத்தான் அவை செயல்படுத்தப்பட்ட விதம் உணர்த்துகிறது. திரும்பிய திசையெங்கும் நம் கண்களை நிறைத்த உஜ்வலா திட்ட விளம்பரங்கள், விறகடுப்பின் புகையிலிருந்து கிராமப்புறப் பெண்கள் மீண்டுவிட்டார்கள் என்ற நினைப்பை நமக்குள் உருவாக்கவே செய்தன.

ஆனால், முதல் சிலிண்டருக்கு மட்டுமே மானியம்; அடுத்து வாங்க வேண்டியவற்றுக்கு மானியம் இல்லை என்கிறபோது எத்தனை பேரால் அந்தத் தொகையைக் கொடுத்து சிலிண்டர் வாங்க முடியும்? வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிற, ஒரு நாளுக்கு 32 ரூபாய் ஊதியம் பெறுகிறவர்கள் எப்படி 700 ரூபாய் கொடுத்து சிலிண்டரை வாங்குவார்கள்? ஊழலும் சுரண்டலும் நமக்குப் புதிதல்ல என்றாலும் குறிப்பிட்ட சதவீத மக்களையாவது இதுபோன்ற நலத் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்க வேண்டாமா?

பெண் குழந்தைப் பாதுகாப்பு?

‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தை களுக்குக் கற்பிப்போம்’ என்ற முழக்கம் ஒலித்தபடி இருக்க, சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கும் வல்லுறவுக்கும் ஆள்கடத்தலுக்கும் ஆளாவதையோ கொல்லப்படுவதையோ குறிப்பிட்ட அளவுக்குக்கூடத் தடுக்க முடியவில்லை.

சிதைக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரவோ கொடுமைகள் நிகழாத வண்ணம் காப்பாற்றவோ அரசு என்ன செய்தது என்ற கேள்விக்கு விடையில்லை.

இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா? நாடறிந்த வழக்கு களிலேயே இந்த நிலை என்றால் ஊரார் என்ன சொல்வார்களோ என்று பயந்து மறைக்கப்பட்ட குற்றங்களைப் பற்றித் தனியாகச் சொல்லத் தேவையில்லை.

குறையாத வன்முறை

குடும்ப வன்முறைகள், பணியிடப் பாலியல் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவையும் கடந்த ஆட்சியில் அதிகரித்தே இருந்தன. 2018-ல் ‘தாம்சன் ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பும் அதை உறுதிசெய்தது.

பெண்கள் வாழ அச்சுறுத்தல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கும் அதேநேரம், வீடுதான் பெண்களுக்கு மிக அச்சுறுத்தல் நிறைந்த இடமாகவும் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்தது.

பெண்களை மதிப்புடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என அரசும் ஆட்சியாளர்களும் நினைக்கிற நாட்டில்தான் மக்களும் அதேவழியில் நடப்பார்கள். பெண்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை; இது போன்ற ஒடுக்குதல்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டியவர்கள்தாம் என்ற நினைப்பு கொண்டவர்கள் நம்மை ஆளும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எதிர் தரப்பில் உட்காரவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது.

அதுவும் குற்ற வழக்கில் தொடர்புடைய, பெண்களைப் பற்றிய பிற்போக்குக் கருத்துகளைத் தொடர்ந்து சொல்லிவரும் பிரக்யா தாக்கூர் போன்றவர்களும் இடம்பெறும் அவையில் எதிரணியினரின் செயல்பாடு இரட்டிப்பு வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.  

காரணம் பாலினப் பாகுபாடு, ஒடுக்குமுறை, பெண்கள் குறித்த கற்பிதங்கள் போன்றவற்றுக்காகப் பெண்களே மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சில நேரம் அந்த விலை அவர்களது உயிராகவும் ஆகிவிடுகிறது.

கண்டுகொள்ளப்படாத உழைப்பு

2005-2006-ல் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 36.3 சதவீதமாக இருந்தது. ஆனால், அடுத்து  வந்த ஆண்டுகளில் குறைந்து 2015-16-ல் 24 சதவீதமாகச் சரிந்துவிட்டது. பெண்கள் பெருவாரியாக வேலைக்குச் செல்வதைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை.

காரணம் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பும் அவசியம். இதற்காக அரசு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது என்றால், அந்தத் திட்டங்கள் உரிய நோக்கத்தை அடைந்தனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்குத்தானே இருக்கிறது?

பெண்களின் பேறுகால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாகக் கடந்த அரசு உயர்த்தியது வரவேற்கத்தக்கதே. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இது நன்மையைத் தந்த அதேநேரம் தனியார் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த யோசித்தன. பேறுகால விடுப்பு இல்லாததால், பல பெண்கள் வேலையை விட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பெண்களில் உடல், மனம், பொருளாதாரரீதியான வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் அரசுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. அதை நிறைவேற்று வதில் உடனிருப்பதும் நிறைவேறாதபட்சத்தில் அரசுக்கு அழுத்தம் தர வேண்டியதும் நம் சார்பில் நாடாளுமன்றம் செல்லவிருக்கும் உறுப்பினர்களின் கடமைகளில் அடங்கும். அடுத்து வரும் ஐந்து ஆண்டு களிலாவது அந்த மாற்றங்கள் ஓரளவுக்கு நிறைவேறும் என நம்புவோம்.

கட்டுரையாளர்,

தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x