Published : 05 May 2019 09:53 AM
Last Updated : 05 May 2019 09:53 AM
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தையை விற்பது தொடர்பாக ஒரு பெண் பேசிய ஆடியோ சில நாட்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை இல்லாத பெற்றோருக்குத் தத்துக்கொடுப்பதற்காக நிறம், ஆண், பெண் எனப் பிரித்துப் பேரம் பேசுவதும் சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல், “நாளைக்கு ஒரு பீஸ் வருகிறது” என்றெல்லாம் பேசியதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகப் பலர் கைதுசெய்யப்பட்டனர். தனியார் கருத்தரிப்பு மைய செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என மாநிலம் முழுவதும் பெரிய நெட்வொர்க் இருப்பதும் லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும் இதில் குறிப்பிடத்தக்கவை. குழந்தையின்மை பிரச்சினை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இனி, குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்துவிட்டு, சட்ட விரோத முறையில் குழந்தையை வாங்கி வளர்க்கவும் தத்தெடுக்கவும் முற்படும் சிலரே குழந்தைக் கடத்தல் கும்பலை ஊக்குவிக்கின்றனர்.
நவீன மருத்துவம் வளர்ந்துவிட்ட சூழலில், குழந்தைகளைத் திருடி விற்கிறவர்களால்தான் பிள்ளை வரம் கொடுக்க முடியுமா என்ற கேள்வியோடு கோவை தாமரை கருத்தரிப்பு மைய இயக்குநரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு துறையில் பணியாற்றி வருபவருமான சி.வி.கண்ணகி உத்ராராஜைச் சந்தித்தோம்.
பரிசோதனை அவசியம்
“இனி, குழந்தையே பிறக்காது என்று சொல்லும் நிலையெல்லாம் மாறிவிட்டது. முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் குழந்தையைப் பெறலாம். திருமணமாகி சில மாதங்களிலேயே இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று வருபவர்களும் உண்டு. தம்பி, தங்கைக்குக் குழந்தை பிறந்ததாலும் அக்கம்பக்கத்தினர், உறவினர்களின் தொடர் கேள்விகளாலும், பெரியவர்கள் குறிப்பாக மாமியாரின் தொந்தரவாலும் டாக்டரை நாடி வருவோரும் உண்டு.
இன்னொரு தரப்பினரோ பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் கடத்தி, 35 வயதுக்கு மேல் டாக்டரை அணுகுகின்றனர். குறிப்பிட்ட வயதுக்கு மேல் வரும்போது கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்து, சிகிச்சை முறையைப் பெரிதாக்கிவிடும். அதனால், திருமணமாகி ஓராண்டு கழித்து ஒரு மருத்துவப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. தேவைப்பட்டால் சிறிய அளவிலான மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மூலமாகவே குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யலாம். 99 சதவீதம் இயற்கை முறையிலேயே கருத்தரிக்கலாம்” என்று சொல்லும் மருத்துவர் கண்ணகி, எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது என்கிறார்.
“வயதைப் பொறுத்து சிகிச்சை முறைகள் இருக்கும். முட்டை இல்லாவிட்டாலும் கருமுட்டை தானம் பெறலாம். புதிய கருப்பையை வைத்து, குழந்தை பிறக்கச் செய்யும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆணுக்கும் இதேபோல் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன” என்று சொல்லும் கண்ணகி, தனது 30 ஆண்டு கால அனுபவத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். இவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் குழந்தை பிறந்தது என்கிறார்.
தத்தெடுப்பது நல்லது
“நவீன மருத்துவ சிகிச்சை முறைகள், மகப்பேறு மருத்துவத்துக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. பெண்களைப் பொறுத்தவரை வயதும் உடல் தகுதியும் முக்கியமானவை. ஏனெனில், கருத்தரிப்பது மட்டுமே தீர்வல்ல. பத்து மாதங்கள் குழந்தையைச் சுமக்கக்கூடிய அளவுக்கு உடல் வலுவுடன் இருக்க வேண்டியது அவசியம். 45, 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் தகுதியைச் சோதித்த பின்னரே கருத்தரிப்பு சிகிச்சை அளிக்கிறோம். இவற்றைத் தாண்டியும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்பட்டால், சட்டரீதியாகக் குழந்தையைத் தத்தெடுப்பதே நல்லது” என்கிறார் அவர்.
அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, உரிய முறையில் பதிவுசெய்து, குழந்தையைத் தத்தெடுக்கலாம். வெளிநாடுகளில் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் குழந்தையைத் தத்தெடுக்கின்றனர். இந்த நிலை இங்கும் உருவாக வேண்டும். சட்டத்தை மீறிய செயல்கள் சரிவராது. பிற்காலத்திலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் 100 தம்பதிகளில் பத்துத் தம்பதிக்கு மகப்பேறு பிரச்சினை ஏற்படுகிறது.
வயது, உடல் நிலை, அதிக எடை, மாறிவரும் வாழ்க்கை முறை, நோய்த் தாக்குதல், மரபுத் தன்மை, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசு, வேதிப் பொருட்களின் தாக்கம், கொசு மருந்து, உரம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்பு, இரவில் நீண்ட நேரம் கண் விழித்தல், நீண்ட நேரம் மடியிலேயே லேப்டாப்பை வைத்திருப்பது, மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால் மகப்பேறின்மை ஏற்படுகிறது. வெளிப்புற, உட்புறக் காரணிகளால் உடலின் சமநிலை மாறும்போது பாதிப்பு ஏற்படுகிறது. தகுந்த ஓய்வு, நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்டவை நம் மனத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
“குழந்தை இல்லையே, இனி பிறக்காதோ என்று எந்தச் சூழலிலும் மனம் தளரத் தேவையில்லை. நம்பிக்கையுடன் உரிய சிகிச்சை பெற்றாலே போதுமானது” என்று உறுதியுடன் சொல்கிறார் கண்ணகி உத்ராராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT