Published : 28 Apr 2019 11:08 AM
Last Updated : 28 Apr 2019 11:08 AM
பண்பாடு, பாரம்பரியம், மரபு என்னும் பெயர்களில் தங்கள்மீது வந்து விழும் சுமைகளைப் பெரும்பாலான பெண்கள் சுமந்துதிரிகிறார்கள். அந்த வகையில் இந்தியப் பெண்களின், குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில் திருமணம் மிகப் பெரிய குறுக்கீட்டை நிகழ்த்துகிறது. அதன் பெயரில் பெண்களின் வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் அத்துமீறலுக்கு அளவே யில்லை.
அதன் பாதிப்பு ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு வகையில் இருக்கும். வசந்தியின் வாழ்க்கைக் கதையும் அப்படிப் பாதிப்புக்குள்ளானதுதான். வசந்தி எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் நடிகை அம்பிகா என்றால், அதை உருவாக்கியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். படம் ‘அந்த 7 நாட்கள்’ (1981).
மனைவியின் காதல் கதை
வசந்தியைத் தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். வசந்தி தமிழ்ப் பெண். அவள் காதலித்த ஆணோ மலையாளி. அவள் தன் காதல் கதையை முதன்முதலில் தன் கணவனிடம் சொல்கிறாள். அதுவும் முதலிரவுப் பொழுதில்.
பாலும் பழமும் அருந்த வேண்டிய நாளில் வசந்தியை விஷம் அருந்த வைத்து வேடிக்கை பார்க்கிறது இயற்கை. அவளை மணந்துகொண்ட டாக்டர் ஆனந்த் அவளுக்கு சிகிச்சை அளித்துப் பிழைக்க வைக்கிறான். அவள் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம்தான் அந்தக் காதல்.
வசந்தியுடைய தந்தை வேறு ஒரு பெண்மீது மோகம் கொண்டு, குடும்பத்தை நிராதர வாக விட்டுவிட்டுச் சென்று விட்டார். பண்பாடு பற்றிப் பாடமெடுக்கும் இந்தியக் குடும்பங்களில் இத்தகைய சீரழிவுக்குப் பஞ்சமேயில்லை.
வசந்தியின் தாய்வழித் தாத்தாதான் குடும்பத்தைத் தாங்கிப்பிடித்திருக்கிறார். கல்யாணப் பருவத்திலிருக்கும் வசந்திக்கு, அவளைவிட ஓரிரு வயது குறைந்த தங்கையும் மாற்றுத் திறனாளியான தம்பி யும் இருக்கிறார்கள். வசந்தியின் வீட்டுக்கு பாலக்காட்டு மாதவனைக் கொண்டுவந்து சேர்க்கிறது காலம்.
மரபு வேலியை உடைத்த காதல்
சென்னைக்கு வந்து பெரிய இசையமைப் பாளராக வேண்டும் என்பது மாதவனின் கனவு. அதற்காகத்தான் அவன் சென்னைக்கு வந்திருக்கிறான். வசந்தியின் வீட்டு மாடிக்கு மாதவன் குடிவருகிறான். வீட்டுக்குள்ளேயே கிடந்த, துடுக்கான பெண்ணான வசந்தி அறிந்த ஒரே அந்நிய ஆடவனாக மாதவன் இருக்கிறான். அதிலும் பெண்ணைக் கண்டு ஒடுங்கி ஓரம்போகிறவனாக இருக்கிறான்.
அந்தப் பண்பு வசந்தியை அதிகமாக ஈர்க்கிறது. பருவத்தில் வரும் காதலுக்கு வசந்தி மட்டும் விதிவிலக்கா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனத்திலும் குடியேறுகிறான் மாதவன். அதைப் புரிந்தும் சூழல்கருதி ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறான் மாதவன். ஆனால், மனத்திலுள்ள காதலை மரபு வேலியால் எவ்வளவு காலத்துக்குத் தடுக்க இயலும்? அவனுள்ளும் காதல் சுரக்கும்படியான சம்பவங்கள் கூடிவருகின்றன.
மனத்துக்குள் குடியேறிய மாதவன்
வெண்ணெய் திரண்டு வரும் போது சொல்லி வைத்தாற்போல் பானை உடை கிறது. வசந்தியின் காதலை அறியாத அவளுடைய தாத்தா அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். அவளிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் இரண்டாம் தாரமாக அவளை மணம்செய்து கொடுக்கக் குடும்பத்தினர் முடிவெடுக்கிறார்கள். அதுவும் மறுநாளே திருமணம். செய்தி கேட்டதும் கொதிக்கிறாள் வசந்தி. ஆனால், யதார்த்தம் அவள் மென்னியைத் திருகி அமர்த்துகிறது.
இரவோடு இரவாக மாதவனும் வசந்தியும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துக் கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால், விடிவதற்குள் வசந்தியை மணமகளாக்கும் காலம் மாதவனை அவளிடமிருந்து பிரித்துவிடுகிறது. டாக்டர் ஆனந்தைக் கரம்பிடிக்கும் நிலைமைக்குத் தள்ளிவிடப்படுகிறாள் வசந்தி. காதலின் கதறல் பண்பாட்டுச் செவியை எட்ட முடியாமல் திணறுகிறது.
ஆனந்தும் நல்ல மனிதன்தான். முதல் தாரம் இறந்துவிட்ட நிலையில் தன் மகள் உஷாவை வளர்த்துவருகிறான். மீண்டும் மணம்புரிந்தால் வரும் பெண் தனக்கு நல்ல மனைவியாக இருப்பாள்; தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா என்ற சந்தேகத்திலேயே திருமணத்தைத் தள்ளிப்போட்டுவருபவன். ஆனால், மரணப்படுக்கையில் கிடக்கும் தாய்க்கு மகிழ்ச்சி தர ஆனந்த் மறுமணம் செய்துகொள்ள வேண்டிய நெருக்கடி வருகிறது.
அந்த நேரத்தில் வசந்தியின் கரம்பற்ற நேர்கிறது. ஆனந்த் நல்லவன் என்றபோதும் வசந்தியின் மனத்தில் மாதவன் இருக்கிறானே? அவளது கதையைக் கேட்ட ஆனந்த் அவளை அவளுடைய காதலன் மாதவனுடன் சேர்த்துவைப்பதாகவும் ஒரு வாரத்துக்குள் தன் அம்மா இறந்துவிடுவார் என்பதால் அதுவரை பொறுத்துக்கொள்ளும்படியும் கோருகிறான்.
காதல் கைகூட உதவும் கணவன்
ஆணாக இருந்தபோதும் ஆனந்த் சொன்ன சொல் தவறாதவன். மாதவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். வசந்தியின் கணவன் என்பதை மறைத்து ஒரு தயாரிப் பாளராக அவனிடம் அறிமுகமாகி மாதவனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறான். தங்கள் கதையையே ஒரு சினிமாக் கதைபோல் மாதவனிடம் சொல்லி அதன் முடிவையும் சொல்கிறான்.
காதலனுடன் மனைவியைச் சேர்த்துவைக்கும் கிளைமாக்ஸ் காட்சிக்கு முதலில் பண்பாடு அது இது என்று மறுப்புச் சொல்லும் மாதவன் இறுதியில் சம்மதிக்கிறான். இப்போது தான் வசந்தியின் கணவன் என்னும் உண்மையை உடைக்கிறான் ஆனந்த். வசந்தியை அழைத்துச் செல்லும்படி மாதவனிடம் சொல்கிறான்.
சினிமாக் கதையைப் போலவே முதலில் மறுக்கும் மாதவன் இறுதியில் வசந்தியை அழைத்துப் போகச் சம்மதிக்கிறான். ஆனால், ஒரு நிபந்தனை விதிக்கிறான். வசந்தி கழுத்தில் தொங்கும் ஆனந்த் கட்டிய தாலியைக் கழற்றிவிட்டால் அவளை அழைத்துப் போவதாகச் சொல்கிறான். வசந்தியிடமும் அதைக் கழற்றச் சொல்கிறான்.
வசந்திக்கு அந்தத் துணிவில்லை. தாலி அவளைத் துவளச்செய்துவிடுகிறது. ஆனந்தாலும் தாலியைக் கழற்றி எறிய முடியவில்லை. இந்த யதார்த்தத்தை உணர்த்தி மாதவன் அவர்கள் வாழ்விலிருந்து வெளியேறி விடுகிறான். படம் நிறைவுபெறுகிறது.
வாழ்வை அழிக்கும் பண்பாட்டுச் சுமை
காதலனுடன் சேர்ந்து வாழச் சம்மதித்துத் தான் வசந்தி அந்த ஒரு வாரத்தை ஆனந்த் வீட்டில் கழித்தாள். மாதவனை மறக்க இயலாமல்தான் வசந்தி விஷமருந்தி உயிரிழக்க முடிவெடுத்தாள். இப்போது தாலி அவள் கண்ணை மறைத்துவிட்டதா? தன் கழுத்தில் இருக்கும் தாலியை நிமிடத்தில் கழற்றி எறிந்திருக்க வசந்தியால் முடியும்.
ஆனால், அதை அவள் ஏன் செய்யவில்லை? அந்தத் தாலியின் மீது படிந்து கிடக்கும் பண்பாட்டு அழுத்தத்தை மீறி அதைத் தூக்கி எறிய வசந்தியாலோ மாதவனாலோ ஆனந்தாலோ ஏன் முடியவில்லை? எந்தப் பாவமும் செய்யாத வசந்தியையும் வசந்தி யைப் போன்றவர்களது வாழ்வையும் இத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் விழுங்கிவிடுகின்றன. மனிதர்களுக்காகப் பண்பாடா பண்பாட்டுக்காக மனிதர்களா என்னும் பெரிய கேள்வியை வசந்தியின் வாழ்க்கை எழுப்புகிறது.
(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT