Published : 21 Apr 2019 09:51 AM
Last Updated : 21 Apr 2019 09:51 AM
‘பெண்களுக்குக் கிடைத்தது மரியாதை; தூய்மையான எரிபொருளால் மேம்பட்ட வாழ்க்கை’ என பெட்ரோல் பங்க் முதல் பார்க்கும் இடமெல்லாம் ‘உஜ்வலா’ திட்டத்தைப் பற்றிய விளம்பரம். வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லும் மத்திய அரசின் விளம்பரம்தான் இது.
விறகு அடுப்பு, மண்ணெண்ணெய், வரட்டி போன்றவற்றால் உருவாகும் புகையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், பலருக்குக் காசநோய், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு போன்றவை ஏற்படுவதாகவும் நாட்டில் காற்று மாசால் இறப்போரின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது எனவும் மருத்துவ ஆய்விதழான ‘லான்செட்’டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியப் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச கேஸ் இணைப்பு அளிக்க வேண்டும் என்ற முழக்கத்தை பாஜக அரசு முன்னெடுத்தது.
இலவசத் திட்டமல்ல
இலவச காஸ் இணைப்பு என ‘உஜ்வலா’ திட்டம் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேஸ் இணைப்புக்கு ரூ.1600 செலுத்த வேண்டும். அதேபோல் அடுப்பு, சிலிண்டருக்கான தொகையைக் கடனாகத்தான் அரசு வழங்குகிறது.
இந்தத் தொகை அடுத்தடுத்த மாதங்களில் பொது மக்கள் பதிவு செய்யும் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுவிடும். இதனால்தான் ‘உஜ்வலா’ திட்டத்தை இலவச காஸ் இணைப்புத் திட்டம் என்னும் மத்திய அரசின் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகளும் மக்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
மறைந்துபோன மானியத் தொகை
இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டபோது நாட்டில் ஆறு கோடிப் பெண்கள் பயனடைவர் எனக் கூறப்பட்டது. பின்னர் 2018-ல் மேலும் விரிவுபடுத்தப்பட்டு எட்டுக் கோடிப் பேருக்கு காஸ் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் இத்திட்டத்தின் கீழ் எத்தனை பெண்கள் பயனடைந்துள்ளனர், அடுப்புப் புகையினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற இலக்கை அரசால் அடைய முடிந்துள்ளதா எனக் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசின் இத்திட்டம் பெண்களை அடுப்புப் புகையிலிருந்து மீட்டெடுப்பதற்குப் பதிலாக அவர்களை மேலும் அதிகமான அளவு வரட்டி, விறகுகளைக் கொண்டு சமைக்கவே நிர்பந்தித்துள்ளது என்பதே நிதர்சனம். சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்க முடியாததால்தான் பெரும்பாலான பெண்கள் காஸ் அடுப்பைத் தவிர்த்துவிட்டு விறகடுப்பில் சமைக்கின்றனர்.
மேலும், மானிய விலையில் மட்டும் பெற்றுவந்த காஸ் சிலிண்டரை முழுத் தொகையும் கொடுத்து வாங்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தியது. இதற்கான மானியத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் போடப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இதை நம்பி மானிய விலையில் ரூ.488 கொடுத்து வாங்க வேண்டிய சிலிண்டரை 722 கொடுத்து (தற்போதையே விலை) பொதுமக்கள் மானியமில்லா விலைக்கே வாங்கிவருகிறார்கள்.
வங்கியில் மானியத் தொகை போடப்படும் என அரசு அளித்த வாக்குறுதியும் காற்றோடுபோய்விட்டது. இதனால், பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மக்களை மானியமில்லா சிலிண்டரை முழுத் தொகையையும் கொடுத்து வாங்கக் கட்டாயப்படுத்தியதுதான் மத்திய அரசின் சாதனை. இதனால் அல்லல்படுபவர்கள் பொதுமக்களாகவே உள்ளனர்.
கிராமப்புறங்களில் விறகு அடுப்புக்கும் வரட்டிக்கும் பெண்கள் மாறியதுபோல் நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் மின்னடுப்புகளுக்கு மாறிவருகிறார்கள். உயர்ந்துவரும் சிலிண்டரின் விலையேற்றம், மானியம் ரத்து போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கேஸ் சிலிண்டர்களின் விலையேற்றத்தால் ஆண்டுக்குக் குறைந்தது ஏழு சிலிண்டர்களைப் பயன்படுத்திவந்த குடும்பங்கள் தற்போது ஐந்தை மட்டுமே பயன்படுத்திவருவதாக மத்திய தணிக்கை அமைப்பான சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘உங்கள் மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகளுக்கு உதவுங்கள்’ என அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், இன்றைக்கோ வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண்களுக்காக அமல் படுத்தப்பட்ட ‘உஜ்வலா’ போன்ற திட்டத்தில் கூட மானியமில்லாமல் சிலிண்டர் வாங்கும் நிலை நடைமுறையில் இருக்கும்போது பொது மக்கள் விட்டுக்கொடுக்கும் மானியம் யாருக்குச் செல்கிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT