Last Updated : 07 Apr, 2019 10:22 AM

 

Published : 07 Apr 2019 10:22 AM
Last Updated : 07 Apr 2019 10:22 AM

பக்கத்து வீடு: மகளால் கிடைத்த வெற்றி!

நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் மிகவும் கடினமானது பிரிட்டனில் நடத்தப்படும் ‘ஸ்பைன் ரேஸ்’. மலைப்பாங்கான பகுதிகளில் தொடர்ச்சியாக 268 மைல் தொலைவுக்கு ஓட வேண்டும். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த 136 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 125 பேர் ஆண்கள்; 9 பேர் பெண்கள். அவர்களில் ஜாஸ்மின் பாரிஸ், 14 மாதக் குழந்தைக்குத் தாய். 

தாய்ப்பாலைச் சேமித்து வைத்துவிட்டு, குழந்தையிடமும் கணவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் ஜாஸ்மின். ஓடுவதில் இருந்த அதீத ஆர்வத்தால் போட்டியில் கலந்துகொண்டாலும் சில மைல் தொலைவைக் கடந்தவுடன் குழந்தையின் பிரிவு அவரை வாட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆர்வத்தையும் வேகத்தையும் குறைத்தது. சக போட்டியாளர்கள் அவரைத் தாண்டி வெகு தொலைவில் சென்றுகொண்டிருந்தார்கள்.

போட்டியிலிருந்து பின்வாங்க ஜாஸ்மின் முடிவெடுத்தார். 50-வது மைலில் இளைப்பாறும் இடம் இருந்தது. அதுவரை ஓடித்தான் ஆக வேண்டும். தாமதிக்காமல் சென்றால், குழந்தையைச் சீக்கிரம் சந்தித்துவிடலாம் என்று தோன்றிய உடனே அவருக்குப் புத்துணர்வு கிடைத்தது. ஓட்டத்தின் வேகமும் அதிகரித்தது. மேடு, பள்ளம், மழை, சகதி எல்லாம் கடந்து இளைப்பாறும் இடத்தை அடைந்தார். பாலைப் பீய்ச்சி, குழந்தைக்குச் சேமித்துவைத்தார். கொஞ்சம் சாப்பிட்டார். களைப்பு நீங்கியது.

ஓடும் தூரத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கடந்துவிட்டதை நினைத்தபோது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவரது கால்கள் ஓட ஆரம்பித்தன. அடுத்த இளைப் பாறும் இடத்தில் பாலைச் சேமிக்கலாம் என்ற எண்ணமே ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது.

“ஓட ஆரம்பித்தபோது குழந்தை பற்றிய எண்ணம் என்னைப் பின்வாங்கச் செய்தது. ஓரளவு ஓடிய பிறகு, குழந்தைக்குப் பால் சேமிக்க வேண்டும், குழந்தையை வெகு விரைவில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணங்களே என் னைத் தளராமல் ஓடவைத்தன. உண்மையில் என் மகள்தான் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்” என்றார் ஜாஸ்மின்.

நம்பிக்கை ஓட்டம்

அன்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு, படுத்தார். போட்டியாளர்கள் இவரைக் கடந்து ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உறக்கம் வரவில்லை. தலையில் டார்ச் விளக்கு, கையில் வரைபடத்துடன் முதுகில் பையை மாட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தார். இருளில் பாறைகளும் மரங்களும் ஏதேதோ விலங்குகளின் உருவங்களாகப் பயமுறுத்தின. உடனே மகளின் சிரிப்பையும் குறும்புகளையும் நினைத்துக்கொண்டார். இப்போது வெளியுலகம் அச்சத்தைத் தரவில்லை. நம்பிக்கையோடு ஓட முடிந்தது. 

இரண்டாம் நாள் விடிந்தது. வழியில் முன்பின் தெரியாத மக்கள் ஜாஸ்மினுக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். பழங்களையும் சாக்லெட்களையும் கொடுத்தனர். உற்சாக மான வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்தனர். சக போட்டியாளர்கள் தூங்கும் நேரத்தில் பாதியைக்கூட ஜாஸ்மினால் தூங்க முடியாது. பாலைப் பீய்ச்சுவதே பெரிய வேலையாக இருந்தது. அதற்குப் பிறகு தூக்கம் வர மறுத்தது. கணவரிடம் மகளைப் பற்றி விசாரித்துவிட்டு, ஆடையை மாற்றிக்கொண்டு ஓட ஆரம்பித்துவிடுவார்.

நான்காவது நாள் இலக்கை அடையப் போகிறோம்; மகளைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே அற்புதமாக இருந்தது.  போட்டியில் வெல்ல வேண்டும் என்றெல்லாம் ஜாஸ்மின் நினைக்கவில்லை. இலக்கை அடைந்தால் போதும்; குழந்தையின் முகத் தைப் பார்த்தால் போதும். அதைவிட வேறெதுவும் பெரிய விஷயம் இல்லை.

முயன்றால் முடியும்

83 மணி நேரம், 12 நிமிடங்களில் ஜாஸ்மின் இலக்கை எட்டினார். உற்சாகக் கூக்குரல்கள் அதிர்ந்தன. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதுவரை ஆண்கள் மட்டுமே இலக்கை எட்டி, வெற்றி பெற்ற போட்டியில் முதன்முறையாக ஒரு பெண்ணாகச் சாதனைப் படைத்திருந்தார் ஜாஸ்மின்! அவரால் இந்தச் செய்தியை நம்பவே முடிய வில்லை. தனக்கு முன்னால் பலர் இலக்கை அடைந்திருப்பார் கள் என்று நினைத்தி ருந்தார். மகிழ்ச்சிக் கடலில் நீந்தி, தன் மகளை வாரி அணைத்தார். பால் புகட்டினார்.

பலரிடமிருந்தும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார். சற்று நேரம் இளைப்பாறினார். ஏற்கெனவே ஸ்பைன் ரேஸில் வெற்றி பெற்ற ஸ்பெயின் நாட்டு வீரர் யூஜினி ரோசெல்லோ சோல், 15 மணி நேரத்துக்குப் பிறகே இலக்கை வந்தடைந்தார். வெற்றிக்கோட்டுக்கு நான்கு மைல் தொலைவில் வந்தபோது, கடுமையான வானிலை காரணமாக அவர் உடல் பாதிக்கப்பட்டதால், மருத்துவம் செய்துகொண்டு, ஓட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மற்ற போட்டியாளர்கள் பாதியிலேயே பின்வாங்கிவிட்டனர்.

“ஓடுவது பிடிக்கும் என்றாலும் 25 வயதுக்குப் பிறகே ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டேன். இந்தப் பத்து ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஸ்பைன் ரேஸ் மிகவும் கடின மான போட்டி. இதில் குழந்தை பெற்ற பிறகு, அதுவும் பால் சுரந்துகொண்டிருக்கும் போது ஓடுவது இன்னும் கடினம். ஆனாலும், இந்த ஆண்டே போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

என் கணவரும் என்னைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிகாலை நான்கு மணிக்கு மலைப்பாங்கான பகுதிகளில் ஓட்டப் பயிற்சியை ஆரம்பித்துவிடுவேன். குழந்தை எழுவதற்குள் திரும்பிவிடுவேன். பிறகு விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கக் கிளம்பிவிடுவேன். இப்படித்தான் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். பெண், தாய், தாய்ப்பால் என்று எந்த நிலையிலும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நானே இந்தப் போட்டியின் மூலம் அறிந்துகொண்டேன்” என்கிறார் ஜாஸ்மின் பாரிஸ்.

431 கி.மீ. தொலைவை 83 மணி நேரத்தில் கடந்த இவர், ஏழு மணி நேரம் மட்டுமே ஓடாமல் இருந்திருக்கிறார். இதில் மூன்று மணி நேரத்தை மட்டுமே தூங்குவதற்காகச் செலவிட்டிருக்கும் ஜாஸ்மின் பாரிஸ், குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டும் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x