Last Updated : 17 Mar, 2019 12:56 PM

 

Published : 17 Mar 2019 12:56 PM
Last Updated : 17 Mar 2019 12:56 PM

ஆடும் களம் 42: வங்கத்தின் வேகப் புயல்!

கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு, உடல் வலுவோடு சம்பந்தப்பட்டது. ஆண்கள் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், மகளிர் அணியில் வேகப்பந்து வீச்சில் கொடிகட்டிப் பறப்பது அரிது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கண்டெடுத்த அப்படியொரு அரிதான வீராங்கனை, ‘சாக்தகா எக்ஸ்பிரஸ்’ என்றழைக்கப்படும் ஜூலன் கோஸ்வாமி.

கால்பந்து விளையாட்டின் கோட்டை எனக் கருதப்படும் மேற்கு வங்கம்தான் ஜூலன் பிறந்த மண். கொல்கத்தாவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் சாக்தகா அவரது சொந்த ஊர். கால்பந்து விளையாட்டில் மோகம்கொண்ட மண் என்பதால், இயல்பாகவே ஜூலனுக்கும் கால்பந்து விளையாட்டு என்றால் கொள்ளைப் பிரியம். 1992 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தபோது டி.வி.யில் போட்டிகளைப் பார்த்து கிரிக்கெட் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போது முதலே டி.வி.யில் கிரிக்கெட் ஒளிபரப்பானால் அதன் முன் ஆஜராகிவிடுவார்.

1997-ல் இந்தியாவில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்தான் அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தது. கொல்கத்தாவில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியை நேரில் கண்டார் ஜூலன் கோஸ்வாமி. அந்தப் போட்டியை மிக அருகில் இருந்து ரசிப்பதற்காக, ஈடன் கார்டன் மைதானத்தில் பணியாற்றுவோரிடம் பேசி, பந்து பொறுக்கும் வேலையைப் பெற்றார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் பெலிண்டா கிளார்க்கின் ஆட்டம் ஜூலனைக் கவர்ந்தது. அவர் விளையாடிய விதத்தைப் பார்த்து, கிரிக்கெட்தான் தனது வாழ்க்கை என ஜூலன் முடிவுசெய்தார். அப்போது ஜூலனுக்கு 15 வயது.

கிரிக்கெட்டுக்காகப் பயணம்

கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்ற லட்சியத்துடன் எந்நேரமும் கிரிக்கெட்டில் மூழ்கிக்கிடந்தார் ஜூலன். ஆனால், மகளின் செயல்பாடு அவருடைய பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால், ஜூலன் காதில் எதுவும் ஏறவில்லை. அதன்பிறகு படிப்பைக் கைவிடாமல் கிரிக்கெட் விளையாட அவருடைய பெற்றோர் அனுமதி கொடுத்தனர்.

சாக்தகாவில் கிரிக்கெட் விளையாட்டுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை என்பதால், அவர் கொல்கத்தா செல்ல முடிவெடுத்தார். தன் ஊரிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொல்கத்தாவுக்குத் தினமும் பயிற்சிக்காகச் சென்றுவர நேர்ந்தது. பயணத்துக்கே ஐந்து மணி நேரம் ஆகிவிடும். இதனால், ஜூலனின் கல்வி பாதிக்கப்படும் என அவருடைய பெற்றோர் கவலைப்பட்டனர். ஆனால், “வாழ்க்கையில் சாதிக்க, கடுமையாக உழைத்துதான் ஆக வேண்டும். தினமும் ஐந்து மணி நேரம் பயணம் சென்றுதான் ஆக வேண்டும்” எனப் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, தினமும் கொல்கத்தாவுக்குச் சென்றுவந்தார்.

கைவந்த வேகப்பந்துவீச்சு

பேட்டிங், பவுலிங் என இரு துறையிலும் தன்னைத் தயார்படுத்திவந்தார். ஆனால், பேட்டிங்கைவிடத் துல்லியமாக வேகப்பந்து வீசுவது அவருக்குக் கைவந்த கலையானது. அதற்கு அவருடைய 180 செ.மீ. உயரமும் ஒரு காரணமாக அமைந்தது. கிரிக்கெட் மீது ஜூலனுக்கு இருந்த தனியாத காதலும் அர்ப்பணிப்போடு அவர் உழைத்த உழைப்பும் வீணாகவில்லை. ஜூலன் 19 வயதை எட்டியபோது மேற்கு வங்க மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். அடுத்து ஓராண்டுக்குள் 2002-ல் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் போட்டி. முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  அந்தப் போட்டி அவரை ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அடையாளம் காட்டியது. அதே வேளையில் பேட்டிங்கிலும் அவ்வப்போது ஜொலித்துவந்தார். ஒரு நாள் போட்டியில் விளையாடிய அதே ஆண்டில் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

உலகக் கோப்பையில் முத்திரை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 2005-ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மறக்க முடியாதது. அந்த உலகக் கோப்பையில்தான் இந்திய மகளிர் அணி முதன்முதலாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு இந்தியா வந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தார் ஜூலன். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, அணி முன்னேறுவதற்குக் காரணமாக இருந்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் ஜூலன் கோஸ்வாமி பணியாற்றியிருக்கிறார்.  2008-லிருந்து 2011 வரை கேப்டனாக இருந்த காலத்தில் 25 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்று 12 போட்டிகளில் வெற்றிபெற்றது. இதேபோல 18 டி20 போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு எட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றிதேடித் தந்திருக்கிறார்.

சாதனை மேல் சாதனை

சமகால கிரிக்கெட் வீராங்கனைகளில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய வீராங்கனைகளை சர்வதேச அளவில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஜூலன் கோஸ்வாமியும் ஒருவர். ஒட்டுமொத்தமாக, பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.  177 ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி 218 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 1,061 ரன்களை ஜூலன் குவித்திருக்கிறார். 68 டி20 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

தனது கிரிக்கெட்  வாழ்க்கையில் 2017-ல் முக்கியமானதொரு தடத்தை ஜூலன் பதித்தார்.  ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் கேத்ரின் எடுத்திருந்த 180 விக்கெட்டுகளைத் தாண்டி முதலிடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு முக்கிய மைல்கல்லாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார். ஒட்டுமொத்தமாக, 255 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜூலன் 343 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜூலனுக்குத்தான் முதலிடம்.

கிரிக்கெட்டில் கவுரவம்

கடந்த 17 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ஜூலன் பெறாத விருதுகளே கிடையாது. முதன்முறையாக 2007-ல் சர்வதேச சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்ணும் அவர்தான். கிரிக்கெட்டில் ஜூலன் செய்த சிறப்பான, தரமான சாதனைகளைக் கருத்தில்கொண்டு விளையாட்டுக்கான உயர்ந்த விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை 2010-ல் மத்திய அரசு அவருக்கு வழங்கிக் கவுரவித்தது. 2012-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஓயாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் ஜூலன், டி20 போட்டிகளிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடிவருகிறார். 36 வயதிலும் அவரது பந்துவீச்சில் இன்னும் வேகம் குறையவில்லை. தற்போதும் 120 கி.மீ. வேகத்தில் பந்துவீசுகிறார். கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு துறைக்கு வரப் பெண்கள் பெரும்பாலும் தயங்குவார்கள். அந்தத் தயக்கத்துக்கெல்லாம் இடம்கொடுக்காமல், 17 ஆண்டுகளாக வேகப்பந்து வீச்சில் கோலோச்சிவரும் ஜூலன் கோஸ்வாமி, கிரிக்கெட்டில் ஒரு வாழும் அதிசயம்!

(வருவார்கள் வெல்வார்கள்)

கட்டுரையாளர்

தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x