Published : 10 Mar 2019 09:06 AM
Last Updated : 10 Mar 2019 09:06 AM

முகம் நூறு: டி.எஸ்.பி. சரோஜா

குடும்பத்தின் வறுமையைப் போக்க ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என நினைத்தார் சரோஜா. தமிழ்நாடு காவல் துறை நடத்திய ஆயுதப் படையினருக்கான உடற்தகுதித் தேர்வுக்குச் சென்றார்.  உயரம் தாண்டுதல் போட்டியில் குறைவான புள்ளிகள் பெற்று, சோகத்துடன் வீடு திரும்பினார். ஆனால், இந்தத் தேர்வு நடந்த சில மாதங்களிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வை எழுதி, தற்போது காவல்துறையின் உயர்பதவிகளில் ஒன்றான காவல் துணைக் கண்காணிப்பாளருக்கான (டிஎஸ்பி) பணி ஆணையைப் பெற்றுள்ளார் சரோஜா.

திருநெல்வேலி மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. அப்பா முருகானந்தம் திரையரங்கில்  வேலைசெய்து வருகிறார். அம்மா பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளி. மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவருக்கு அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்குப் பொருளாதார பலம் இல்லை. “அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்படுறாங்க.

அண்ணனுக்கு விபத்துல அடிபட்டதால்  கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில் காலேஜ் போக முடியலை. பகுதி நேரமாக ஏதாவது வேலை செய்துகிட்டே தொலைதூரக் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க முடிவெடுத்தேன்” என்று சொல்லும் சரோஜா,  மாண்டிசோரி கல்வி முறையில் ஆசிரியர் பயிற்சிபெற்று அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப்  பணியாற்றத் தொடங்கினார். தொலைதூரக் கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்து, குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

காத்திருந்த வேலை

சரோஜாவின் குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரம், அவரின் கணவர் பிரம நாயகம் இருவரும் சரோஜாவை அரசுத் தேர்வுகளை எழுதச்சொல்லி ஊக்குவித்தனர். சரோஜாவுக்கோ எங்குச் சென்று படிப்பது, அரசுத் தேர்வெழுத என்னென்ன செய்ய வேண்டும் எனக் குழப்பமாக இருந்துள்ளது. பின்னர், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் அரசுத் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டார்.

ஆனால், மகளை அவ்வளவு தொலைவு அனுப்பப் பெற்றோர் யோசித்தனர். தலைமை ஆசிரியை ஈஸ்வரம் எடுத்துச்சொன்ன பிறகே சரோஜாவின் பெற்றோர் சம்மதித்தனர்.

“வீட்டிலிருந்து காலைல ஏழு மணிக்குப் புறப்பட்டால்  திரும்ப வீட்டுக்கு வர நைட்டு ஒன்பது மணியாகிவிடும். அகாடமியில் கொடுக்கிற பயிற்சி மட்டும்தான். மற்றபடி வேறெந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் போனதில்லை. வார இறுதி நாட்களில்தான் பயிற்சி என்பதால் வேலைக்குப் போவதிலும் சிக்கல் இல்லை. ரயிலில் தினமும் டிக்கெட் வாங்கினா அதிகமா செலவாகும்னு சீசன் டிக்கெட் எடுத்துக்கிட்டேன்.

மதியத்துக்கு அம்மா சாப்பாடு கட்டிக்கொடுத்துடுவாங்க. ரயில் பயணம்தான் பாடம் படிப்பதற்கான நேரம். வகுப்பில் நடத்திய பாடங்களை ரயிலில் படிப்பேன்” என்கிறார் சரோஜா. 2016-ல் குரூப் -1 தேர்வை முதன்முறையாக எழுதினார். முதன்மைத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. ஆயுதப்படைக் காவலர்களுக்கான  தகுதித் தேர்வு பற்றிக் கேள்விப்பட்டார்.

 “நம்ம குடும்பத்தோட வறுமையைப் போக்க அரசு வேலை வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி என நினைத்தேன். சிறப்புக் காவலர்களுக்கான உடற்தகுதி நடக்கும் இடத்துக்குப் போனபோதுதான் நிறைய போலீஸ்காரர்களைப் பார்த்தேன். அதுக்கு முன்னால  போலீஸை அருகில் சென்று பார்த்ததில்லை.

அங்கு நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் என்னால் ஜெயிக்க முடியவில்லை. நம்மால் இந்தச் சின்ன வேலையில்கூட ஜெயிக்க முடியவில்லையேன்னு கஷ்டமா இருந்தது.  ஆனால், இதைவிட வேற ஒரு பெரிய வேலை நமக்காகக் காத்துகிட்டு இருக்கு என எனக்கு நானே தைரியம் செல்லிக்கிட்டேன்” என்கிறார் அவர்.

விடுதலைக்கான திறவுகோல்

புத்தகங்களையும் நாளிதழ்களையும் படித்து, பொது அறிவை வளர்த்துக் கொண்டார் சரோஜா. ஆனால், அவரது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களோ ஆசிரியர்  ஏதாவது கேள்வி கேட்டால் உடனே ஸ்மார்ட் போனில் பதிலைத் தேடி சொல்லிவிடுவார்களாம்.  அப்போது சரோஜாவிடமிருந்தது  பழைய மாடல் பட்டன் போன். அதுபோன்ற நேரத்தில் மட்டும் வருத்தம் ஏற்படும் என சரோஜா சொல்கிறார்.

குடும்பத்தின் வறுமையைப் போக்கக் கல்வி ஒன்றுதான் வழி என்பதைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட சரோஜா விடாமுயற்சியுடன் படித்தார். 2017-ல் நடந்த குரூப் – 1 தேர்வை எழுதினார். தகுதித் தேர்வு, முதன்மைத் தேர்வு இரண்டிலும்  தேர்ச்சிபெற்றார்.

“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேர்வு முடிவு வெளியானது. நான் தேர்ச்சிபெற்ற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உடனே அண்ணனிடம்தான் தகவல் சொன்னேன்” என்று சொல்லும் சரோஜாவின் குரலில் எல்லையற்ற மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

ஜனவரி மாதம்  நேர்முகத் தேர்வு நடந்தது. துணை ஆட்சியர், தீயணைப்புத் துறை, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆகிய பணிகள் இருந்துள்ளன. “நேர்முகத் தேர்வுக்கு என்னைத் தவிர மேலும் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ஒருவர் துணை ஆட்சியர் பணியைத் தேர்வு செய்தார். அடுத்தவர் தீயணைப்புத் துறையைத் தேர்ந்தெடுந்துவிட, டிஎஸ்பி பணிக்கான ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டது” என்கிறார்.

தமிழ் வழியில் படித்து, குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கல்வியைப் பற்றுக்கோலாகக்கொண்டு வென்றிருக்கிறார் சரோஜா. கல்வியே விடுதலை தரும் கருவி என்பதைத் தன் வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார் சரோஜா.

படங்கள்: மு.லெட்சுமி அருண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x