Published : 10 Mar 2019 09:05 AM
Last Updated : 10 Mar 2019 09:05 AM

தேர்வு வழிகாட்டி: தெரிந்ததைச் சிறப்பாக எழுதுங்கள்

தேர்வுகளில் தேர்ச்சிபெறுவதைவிட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதுதான் மாணவர்கள் மீது ஏற்றப்படும் மிகப் பெரிய சுமை. இந்த அதீத அழுத்தமே அவர்களைத் தேர்வைச் சரியாக எழுதவிடாமல் செய்துவிடும் என எச்சரிக்கிறார்கள் கல்வி ஆலோசகர்கள்.

வருடம் முழுவதும் பாடங்களைப் படித்தாலும் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்புவரைகூடச் சில மாணவர்கள் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். சிலரோ, “எனக்கு இந்தப் பாடத்தை மட்டும் எத்தனை முறை படித்தாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை” எனப் புலம்புவார்கள். ஆனால், இப்படியான பதற்றம் தேவையில்லை என்கிறார் சிறப்புக் கல்வியாளர் ஷோபா அசோக். “மாணவர்களுக்குத் தேர்வு குறித்த பதற்றம் இயல்பானது. ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும்.  இதற்குப் பெற்றோரின் துணையும் அவசியம். பல நாட்களாகப் படித்த பாடத்தைத்தான் தேர்வில் எழுதப்போகிறோம். அதனால், தேர்வின்போது அதிகமாகப்  பதற்றப்படாமல் இருப்பதே நல்லது” என்கிறார் அவர்.

அனைத்தும் ஐந்தில் அடக்கம்

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ஐந்து முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் ஷோபா அசோக்.

1. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, படித்தவற்றை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

2. படித்த பாடங்களில் உள்ள முக்கியமான வார்த்தைகளைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

3. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு குறிப்பெடுத்த வார்த்தைகளை மட்டும்  நினைவுபடுத்த வேண்டும். பிறகு மீண்டும் புத்தகத்தைத் திறந்து, படித்தவற்றைச் சரியாக நினைவில் வைத்திருக்கிறோமா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

4. படித்தவற்றை மறுவாசிப்பு செய்வது நல்லது.  மேலும், தேர்வு நெருங்கிய பிறகு கடைசி நேரத்தில் அதுவரை படிக்காத பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். தெரிந்த பாடங்களை மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி படிப்பது உகந்தது.

5. நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அதே அளவுக்கு மனத்தையும் உடலையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் படித்தால் பத்து நிமிடமாவது ஓய்வெடுக்க வேண்டும். பாடல் கேட்பது, எளிய உடற்பயிற்சி, கோழித் தூக்கம் போன்றவற்றைச் செய்யலாம்.

நினைவாற்றலைப் பெருக்கும் உணவு

தேர்வு நேரத்தில் பல மாணவர்கள் இரவும் பகலும் ஓய்வில்லாமல் படித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், தேர்வு நாட்களின்போது குறைந்தபட்சம் ஐந்து மணி நேர தூக்கம் அவசியம். நல்ல தூக்கம் மூளைக்குப் புத்துணர்வு அளிக்கும். இதனால், படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். பல மாணவர்கள் தேர்வு நாட்களில் காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள். இது தவறு. சாப்பிட்டுவிட்டுப் படிப்பது நினைவாற்றலைப் பெருக்கும்.

“எத்தனை முறை படித்தாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத சில பாடங்கள் இருக்கும். அவற்றை நண்பர்களிடமோ வீட்டில் உள்ளவர்களிடமோ வினா- விடைபோல் கேட்கச் சொல்லி நினைவில் வைத்துக்கொள்ளலாம். அல்லது மாணவர்களே ஆசிரியர்போல் தங்களை நினைத்துக்கொண்டு  அந்தப் பாடத்தை மற்றவர்களுக்குச் சொல்லித்தர முயன்றால் பாடம் எளிதில் மனத்தில் பதியும். கடினமான பாடத்தை மனதுக்குள்ளேயே வரைபடம்போல் வைத்துப் படிக்கலாம்” என்கிறார் ஷோபா அசோக்.

sirappagajpgஷோபா அசோக்right

தெரிந்ததில் இருந்து தொடங்கலாம்

முதல் முறையாகப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், இதற்கு முன்பு தேர்வெழுதிய உறவினர்களிடம் தேர்வு எப்படி நடக்கும் என்ற அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு அறையில் வினாத்தாள் கொடுக்கப்பட்டவுடன் தெரியாத கேள்விகளைப் பார்த்ததும் சில மாணவர்கள்  பதற்றமாகிவிடுவார்கள். தெரியாத கேள்விகள் இருந்தாலும் பிரச்சினை இல்லை. தெரிந்த கேள்விகளுக்குப் பதில் எழுதத் தொடங்க வேண்டும்.

அடுத்து, ஓரளவுக்குத் தெரிந்த கேள்விகளை எழுதிவிட்டு,  தெரியாத கேள்விகளைக் கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பக்குவத்தை மாணவர்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் அளிக்க வேண்டும். அப்போதுதான் தெரிந்த பதிலையாவது சிறப்பாக எழுத முடியும்.

அதேபோல் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவுடன்  நண்பர்களிடமோ புத்தகத்தைச் சரிபார்த்தோ சரியான பதில் எழுதியிருக்கிறோமா என ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை. ஒருவேளை நீங்கள் எழுதிய பதில் தவறாக இருந்தால் அடுத்த நாள் தேர்வுக்குத் தயாராக முடியாது. தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாளைக் கோடிட்டு, வண்ணம்தீட்டி, பார்க்க அழகாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உயிரியல், விலங்கியல் படிக்கும் மாணவர்கள் ஓவியங்களைச் சிறப்பாக வரைந்தால் சுலபமாக மதிப்பெண் பெற்றுவிடலாம். மாணவர்கள் தேர்வெழுத உறுதுணையாக இருப்பவர்கள் பெற்றோர்கள். ‘All the best, you're the best’ எனக் குழந்தைகளை வாழ்த்தி அனுப்பினாலே அவர்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தேர்வெழுதுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x