Last Updated : 10 Mar, 2019 06:13 PM

 

Published : 10 Mar 2019 06:13 PM
Last Updated : 10 Mar 2019 06:13 PM

ஆடும் களம் 41: சீறிப் பாயும் அலிஷா

மின்னல் வேகத்தில் பைக்கிலோ காரிலோ சாகசப் பயணம் செல்கிறவரைப் பார்த்தால்  ஆணாகத்தான் இருப்பார் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், அசாத்திய வேகத்தில் பைக் ஓட்டி அந்த நினைப்பைப் பொய்யாக்குகிறார் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இந்த சென்னைப் பெண். பைக் ரேஸிங்கில் பங்கேற்க விரும்பும் பெண்களுக்கு இவர்தான் ஆதர்சம்!

அலிஷாவின் அப்பா ஆர்.ஏ. அப்துல்லா, பைக் ரேஸ் வீரர். பைக் ரேஸிங்கில் ஏழு முறை தேசிய சாம்பியன். அப்பா பைக் ரேஸிங் பயிற்சிக்குப் போகும்போதெல்லாம் சிறுமியாக இருந்த அலிஷாவும் உடன் செல்வது வழக்கம். சீறும் பைக்கில் அமர்ந்து அவர் செய்யும் ரேஸ் சாகசங்களைக் கண்டு லயித்துப்போவார் அலிஷா.  அப்பாவைப் போல் தானும் பந்தயத் தடத்தில் பறக்க வேண்டும் என்று சிறு வயதிலேயே அவருக்கு றெக்கை முளைத்துப் பறந்தது ஆசை.

அலிஷாவுக்கு ஒன்பது வயதானபோது ‘கோ கார்ட்டிங்’ எனப்படும் நான்கு டயர்கள் கொண்ட சிறிய பந்தயக் கார்களை ஓட்டி, பயிற்சிபெறத் தொடங்கினார். அடுத்த இரண்டே ஆண்டு களில் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்குத் தன்னை மெருகேற்றிக் கொண்டார். 11 வயதில் போட்டிகளில் பங்கேற்று வெல்லவும் தொடங்கிவிட்டார் அலிஷா.

13 வயதானபோது எம்.ஆர்.எஃப். நேஷனல் ‘கோ கார்ட்டிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைவிட வயதில் மூத்தவர்கள் பங்கேற்ற அந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று ஆச்சரியமூட்டினார் அலிஷா.

கார் டூ பைக்

அலிஷாவின் ‘கோ கார்டிங்’ பயணத்தில் 2004-ம் ஆண்டு மைல்கல்லாக அமைந்தது. ‘தேசிய சாம்பியன்ஷிப்’பில் ஆண்கள் பங்கேற்ற போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் அலிஷா. ஆனாலும், ஆண்களோடு போட்டிபோட்டு பந்தயத்தில் பங்கேற்றது அவருக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. கார் பந்தயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அலிஷா முன்னேறிவந்த வேளையில் அதிலிருந்து விலகும் சூழலும் வந்தது.

மற்ற விளையாட்டுகளைப் போல அல்லாமல், கார் பந்தயம் ரொம்பவே காஸ்ட்லி. எனவே, அலிஷாவின் அப்பா தன் மகளின் கவனத்தை பைக் ரேஸ் பக்கம் திருப்ப முடிவுசெய்தார். மேலும், தான் பைக் ரேஸ் வீரர் என்பதால், அந்தப் பந்தயத்தின் நுணுக்கங்களைச் சுலபமாகத் தன் மகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியும் என்று அவர் நம்பினார்.

இதுபோன்ற காரணங்களால் பைக் பந்தயத்தில் கவனம் செலுத்தும்படி அலிஷாவிடம் அப்துல்லா கூறினார். ஆனால், கார் பந்தயங்களில் பங்கேற்றுக்கொண்டிருந்த அலிஷாவுக்கு பைக் பந்தயங்களுக்கு மாறுவது கடினமாக இருந்தது.

பைக்கில் வந்த பெருமை

பைக் பந்தயத்தில் தன்னால் ஜொலிக்க முடியுமா என்று அலிஷாவுக்குக் கேள்வியும் இருந்தது. ஆனால், அவருடைய அப்பா அதை மிக எளிதாக்கினார். இயல்பாகவே அலிஷாவின் அப்பா கண்டிப்பானவர். அந்தக் கண்டிப்பும் வழிகாட்டலும் அலிஷாவை பைக் பந்தயங்களுக்குத் தயார்படுத்தின. தொடக்கத்தில் குறைந்த திறன்கொண்ட பைக்குகளை ஓட்டி பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகே பந்தயங்களுக்கு ஏற்ற சூப்பர் ரக பைக்குகளை ஓட்டத் தொடங்கினார்  அலிஷா.

பைக் பந்தயத்துக்குத் தயாரான பிறகு 2009-ல் தேசிய பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் 600 சிசி திறன் கொண்ட பைக்கை ஓட்டினார். அதில் பங்கேற்ற ஒரே பெண் அலிஷா மட்டுமே. 15 ஆண்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு பைக்கில் அலிஷா சீறிப் பாய்ந்தார். 302 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்த அந்தப் போட்டியில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டி அலிஷா மூன்றாமிடத்தைப் பிடித்தார்.

12 ஆண்களை முந்திக்கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தது சாதாரண விஷயமல்ல. இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

மீண்டும் கார் ஆசை

பைக் பந்தயங்களில் அலிஷா பங்கேற்றாலும், கார் பந்தயங்கள் மீதான ஆசை அவருக்கு விடவே இல்லை. மீண்டும் அந்த ஆசை அவரிடம்  துளிர்த்தது. கொஞ்சமும் யோசிக்காமல் கார் பந்தயங்களுக்குத் திரும்பினார். சென்னை இருங்காட்டுக்கோட்டை தடத்தில் அவர் சந்தித்த விபத்தும் அதற்கு ஒரு காரணம். பைக் பந்தயங்களிலிருந்து விலகி, கார் பந்தயத்தில் அவர் மீண்டும் கால் பதித்த பிறகு, அதிலும் சீரான முன்னேற்றத்தைக் காண ஆரம்பித்தார்.

2010-ல் போலோ கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று 10-வது இடத்தைப் பிடித்தார். அதற்கடுத்த ஆண்டு அதே போட்டியில் ஏழாவது இடத்துக்கு முன்னேறினார். கோவையில் நடந்த கார் பந்தயம் ஒன்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து முதன்முறையாக வெற்றி மேடையில் ஏறினார் அலிஷா. அந்த வகையில் தேசிய அளவில் மேடை ஏறிய முதல் வீராங்கனையும் அலிஷாதான். அந்தப் போட்டியில் அவர்தான் முதலிடம் பிடித்திருக்க வேண்டும். அதிக நேரம் முன்னணியில் இருந்த அலிஷா, கடைசியில் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

உடல் தகுதி வேண்டும்

கார், பைக் பந்தயங்கள் ஆண்களுக்கான தாகவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டன. ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அந்த விளையாட்டில் பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் அலிஷா அப்துல்லா. இந்த விளையாட்டுகளில் அவர் பதித்த அழுத்தமான தடம், பல இளம் பெண்களை இவற்றுக்குள் இழுத்துவந்திருக்கிறது. தற்போது 30 வயதாகிவிட்ட அலிஷா, தன்னைப் போல இளம் பெண்களை பைக் பந்தயக்காரர்களாக மாற்ற ஆர்வம் காட்டிவருகிறார். இதற்காகப் போட்டிகள் வைத்துப் பெண்களுக்குத் தைரியமூட்டிவருகிறார்.

இளம் பெண்களால் இந்தப் பந்தயங்களில் நிச்சயம் சாதிக்க முடியும் என்று உற்சாகமூட்டுகிறார் அலிஷா. “பைக் மற்றும் கார் பந்தயங்களுக்கு உடல் தகுதியும் தாக்குப் பிடிக்கும் திறனுமே முக்கியம். ஆனால், பெண்களைப் பலவீனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லி அவர்களை அப்படியே ஆக்கிவிட்டோம். உடல் தகுதியோடு உள்ள எந்தப் பெண்ணும் இந்தப் பந்தயங்களில் ஈடுபட முடியும்” என்கிறார் அலிஷா.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x