Published : 30 Mar 2019 05:42 PM
Last Updated : 30 Mar 2019 05:42 PM
வங்க தேசத்தின் நவீனச் சிற்பக் கலையின் முன்னோடி நோவீரா அஹமத். மேற்கத்திய நாகரிகமும் நாட்டுப்புறக் கலையும் புத்த மத தத்துவமும் இணைந்து உருவானவையே அவரது சிற்ப வடிவங்கள். அவை பெண்களின் வாழ்வையும் அனுபவத்தையும் பிரதிபலித்தன. 1939-ல் கங்கையின் மிகப் பெரும் சதுப்புநிலக் காட்டில், கடல் நண்டு வேட்டைக்கு அவர் குடும்பம் சென்றபோது நோவீரா அஹமத் பிறந்தார்.
களிமண்ணில் வீடுகளையும் பொம்மைகளையும் உருவாக்கிய தாயைப் பார்த்து, சிறுவயதிலேயே சிற்பக் கலையின் மீது காதல் கொண்டார். அவருக்கு மணம் முடித்து வைக்கத் தந்தை முயன்றபோது, அதை உறுதியாக மறுத்து, சிற்பக் கலைஞராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் துணிவுடன் தொடங்கினார்.
லண்டனில் உள்ள ‘காம்பெர்வெல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்டி’ல் சிற்ப வடிவமைப்பு பற்றிப் படித்து, 1955-ல் பட்டம் பெற்றார். அதன்பின் ஆஸ்திரியாவின் வியன்னா, இத்தாலியின் புளோரன்ஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணித்து, சிற்பக் கலையை மெருகேற்றிக்கொண்டார். 1960-ல் inner gaze எனும் சிற்பக் கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞரானார்.
1952-ல் நடந்த மொழிப் போராட்டத்தின் நினைவாக வங்க தேசத்தில் எழுப்பப்பட்டு இருக்கும் ஷாஹித் மினாரை வடிவமைத்து உருவாக்கியவர் இவரே. வங்கதேசத்தின் மிகப்பெரும் விருதான ‘Ekushey Padak’ விருதைப் பெற்ற இரண்டாவது வங்கதேசத்தவரும் இவரே. அவரது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 29 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
உயிரைப் பறிக்கின்றனவா ரத்த வங்கிகள்?
தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சீனியர் மருத்துவர்கள், மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு உட்பட்ட ரத்த வங்கிகள் முறையாகப் பராமரிக்கப்படாத ரத்தத்துக்கு நல்ல நிலையில் உள்ள ரத்தம் எனச் சான்று வழங்கியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
முறையாகப் பராமரிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதால் தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 15 பெண்கள் உயிரிழந்து இருப்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதற்குக் காரணமான ரத்த வங்கியின் அதிகாரிகளான மருத்துவர் எம். சந்திரசேகர், மருத்துவர் நாராயணசாமி, மருத்துவர் சுகந்தா ஆகியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது. இப்போது கெட்டுப்போன ரத்தத்தால் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இனியாவது அரசு விழித்துக்கொள்ளுமா?
ஆடைப் பற்றாக்குறையால் தடைபட்ட விண்வெளிப் பயணம்
பெண் விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஆனி மெக்கிளேன் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று மின்கலங்களைப் பொருத்த வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு அந்த விண்வெளி வீராங்கனைகள் அணிகிற நடுத்தர அளவிலான விண்வெளி உடைகள் இரண்டு தேவைப்பட்டன. ஆனால், இருந்ததோ ஒன்றுதான். எனவே, ஆண் விண்வெளி வீரர் நிக் ஹேக்கோடு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கோச் மட்டும் வெளியேறி இந்தப் பணியைச் செய்திருக்கிறார்.
மெக்கிளேனால் பயன்படுத்தப்பட்ட விண்வெளி உடையை அணிந்துகொண்டு கோச், ஹேக்கோடு கடந்த வாரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லை என வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாசா ரத்து செய்திருப்பது வருந்தத்தக்கதே.
இன்னும் ஓர் உயிரா?
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்தச் சிறுமி, வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் காணாமல் போனார்.
குழந்தையைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துறையும் உறவினர்களும் இணைந்து குழந்தையைத் தேடிவந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் தன் வீட்டருகே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இன்னும் இப்படி எத்தனை சிறுமிகளைப் பலிகொடுக்கப் போகிறோமோ?
எண்ணமும் சொல்லும்: ராதாரவியின் குடும்பப் பெண்களை நினைத்து வருந்துகிறேன்.
ராதாரவியின் ஆணாதிக்கமும் வக்கிரமும் நிறைந்த பேச்சைக் காட்டிலும் மேலான அதிர்ச்சியை அங்கிருந்த பார்வையாளர்களின் உற்சாகமான கைதட்டல் ஏற்படுத்தியது. உங்களுடைய கைதட்டல் ராதாரவி போன்ற பேச்சாளர்களுக்கு, நகைச்சுவை என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக வக்கிர எண்ணங்களைக் கொட்டும் துணிவை அளிக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
விகார மனங்கொண்ட மனிதர்களின் இழிவான பேச்சை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள். என்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராதாரவியை விசாரிக்க நடிகர் சங்கம் குழு அமைக்க வேண்டும். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும்.
திரைப்படத்தில் வாய்ப்புக் கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாகப் பேசி பிரபலமடையும் ராதாரவிக்கு, அவருடைய தாயும் ஒரு பெண்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தொடர்ச்சியாக மேடைகளில் நடிகைகளைப் பற்றி இழிவாகப் பேசும் ராதரவியின் குடும்பப் பெண்கள் மீது பச்சாதாபப்படுகிறேன்.
கடவுள் கொடுத்த வரத்தால் திரையுலகில் எனக்குச் சிறப்பான இடம் கிடைத்துள்ளது. சீதையாகவும் கடவுளாகவும் தோழியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் நான் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் இனியாவது நடவடிக்கை எடுக்குமா?
- நயன்தாரா, நடிகை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT