Published : 23 Mar 2019 05:56 PM
Last Updated : 23 Mar 2019 05:56 PM

விவாதம்: பாலியல் குற்றங்களுக்குப் பெண்தான் காரணமா?

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரத்தின் தொடர்ச்சியாக வழக்கம்போலவே பலரும் அறிவுரைகளையும் ஆலோசனையையும் வாரி வழங்கத் தவறவில்லை. பெரும்பாலானவை பெண்களை நோக்கி, பெண்களின் ‘பாதுகாப்புக்காக’ உதிர்க்கப்பட்ட முத்துக்கள்.

பெண்ணின் உடலைக் களமாக்கி வன்முறை நிகழ்த்தப்படும்போதெல்லாம், பெண்களின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுக்கப் படுகின்றன. அவர்கள் புழங்கும் வெளியை இறுக்கிப் பிடித்துச் சுருக்கத் தொடங்குவோம். இப்போதும் அதுவே நடந்துவருகிறது.

யாரையும் நம்பாதே, அறிமுகமில்லாத நபர்களை நம்பி வெளியே போகாதே, ஆண்களிடம் பேசாதே, ஃபேஸ்புக் கணக்கை மூடிவிடு, வாட்ஸ் அப்பை முடக்கிவிடு, ஸ்மார்ட் போனைக் கண்டால் பயந்து ஒதுங்கு - என முடிவில்லாமல் நீள்கிறது அந்தப் பட்டியல். எல்லாமே பெண்களின் தற்காப்புக்காகத்தான் என்று அதற்கு விளக்கமும் சொல்லப்படுகிறது.

பெண்களை இப்படி முடங்கச் சொல்லும் யாரும், அவர்கள் மீது வன்முறையை நிகழ்த்துகிற ஆண்களுக்கு எந்த அறிவுரையையும் சொல்வதில்லை. ஆண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளும் சமூகத்தில் பெண்ணின் தற்காப்புக்கு என்ன தேவை?

பாதிக்கப்பட்ட பெண்கள்?

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்புடைய செய்திகளில், ‘பாதிக்கப்பட்ட’ பெண்கள் என்ற சொல் தவறாமல் இடம்பெறுகிறது. ‘பாதிக்கப்பட்ட’ என்பதை என்ன பொருளில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் எதை இழந்து பாதிப்புக்குள்ளானார்கள்? காலம் காலமாக இந்தச் சமூகம் பெண்கள் மீது ஏற்றிவைத்திருக்கும் கற்பு, மானம், கண்ணியம், குடும்ப கவுரவும் போன்றவற்றையா இழந்தனர்?

அதனால்தான் அவர்கள் ‘பாதிக்கப்பட்ட’ பெண்கள் ஆகிறார்களா? அப்படியென்றால் அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண்கள் அனைவரும் மாபெரும் சாகசத்தைச் செய்த வீரர்களா? அவர்களைப் பற்றிய முன்குறிப்புகளோ-பெயரடைகளோ (Adjective) எந்தச் செய்தியிலும் இல்லையே. அவர்களின் பராக்கிரமத்தைக் குறிப்பிடத் தகுந்த சொற்கள் மொழிகளில் இல்லையா?

அமுக்கப்படும் குரல்

நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கும் பொள்ளாச்சி கொடூரத்துக்கு மாநில அளவிலேயே போதிய கவனம் ஏற்படாதபோது, தேசிய அளவிலான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா? அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் முழங்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் அநீதி இழைக்கப்பட்ட பெண்களின் குரல் பொள்ளாச்சியைத் தாண்டி ஒலிக்குமா என்பதும் சந்தேகமே.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு எனப் பாராட்டத்தகுந்த அம்சங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டிருக்கும் கட்சிகள்கூட பொள்ளாச்சி கொடூரம் குறித்துப் போதிய அக்கறை செலுத்தவில்லை.

எது கண்ணியம்?

“ஏன் அந்தப் பெண்கள் ஆரம்பத்திலேயே இதைப் பற்றித் தங்கள் வீட்டில் சொல்ல வில்லை?” என்று கேட்கிற பலரும், தங்கள் வீட்டுப் பெண் இப்படியொரு சம்பவம் தனக்கு நடந்ததாகச் சொன்னால் எப்படி அணுகு வோம் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். “ஊர், பேர் தெரியாதவனை நம்பி, நீ ஏன் சென்றாய்?” என்பதுதான், அந்தப் பெண்களிடம் முதல் கேள்வி யாகக் கேட்கப்பட்டிருக்கும்.

தீங்கிழைக்கப் பட்டவரையே குற்றவாளியாக்கும் திறமை நம் சமூகத்திடம் கொட்டிக் கிடக்கிறது. அதுதான், ‘பெண்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று மாநில மகளிர் ஆணையத் தலைவியையே சொல்லவைக்கிறது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை எது கண்ணியம் என்பதே சரியாக வகைப்படுத்தப்படவில்லை.

ஒரு பெண் தனக்கு விருப்பமான நபருடன் பழகுவதால் குறைந்துவிடுகிற கண்ணியம், அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தை அவளுடைய அனுமதியில்லாமல் பொதுவெளியில் காட்சிப் படுத்தும் ஆணின் செயலால் மேன்மையடைகிறதா? இல்லை நம் சமூகத்தில் ஆணுக்குக் கண்ணியத் தேவை ஏதுமில்லையா? ஆணாகப் பிறந்ததே அரும்பெரும் கண்ணியச் செயலா?

நான்கு பேரில் ஒருவர்

இதில் கவனிக்கத்தகுந்த இன்னொரு கோணமும் இருக்கிறது. நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற பயத்தாலும்தான் அந்தப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்லவில்லை. அவர்களை அச்சுறுத்திய அந்த நான்கு பேரில் நாமும் அடக்கம். எப்போதும் பிறரது செயல்பாடுகளைக் குறிப்பாகப் பெண்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதையும் கலாச்சாரக் காவல் புரிவதையுமே பலரும் முழுநேர வேலையாக வைத்திருக்கிறோம்.

கல்லூரி முடித்துவிட்டு ஒரு பெண் தாமதமாக வீடு திரும்பினால் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைவிட, சுற்றியிருப்பவர்கள்தாம் அதிக ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, அந்தரங்க வீடியோக்களில் இடம்பெற்ற பெண்ணை அவ்வளவு எளிதாக இச்சமூகம் விட்டு வைப்பதில்லை.

பார்வையால் கொன்றுவிட்டு, வார்த்தைகளால் கூறுபோட்டுவிடத் துடிக்கிறது. அந்தப் பெண்களைப் பற்றிப் பேசிப்பேசியே அவர்களை உருக்குலைத்துவிடுவதில் போய் முடிகிறது.

‘என் வீட்டுப் பொண்ணா இருந்தா வெட்டிப் போட்டிருப்பேன். பொண்ணை வளர்த்திருக்கற லட்சணத்தைப் பாரு’ என்று பெண்ணைப் பெற்றவர்களைப் பார்த்துக் கொக்கரிக்கும் பலரும் பெண்களை வஞ்சித்து, குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண் களின் பெற்றோரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. போனால் போகிறதென்று யாருக்கும் வலிக்காமல் இரண்டொரு சொல் வீசப்படுகிறது. சாண் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஆண் பிள்ளை என்றுதானே இச்சமூகம் போற்றுகிறது.

அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நியாயம் கிடைத்துவிடும், அந்தப் பெண்களின் அடையாளம் காக்கப்படும், துயரிலிருந்து மீண்டு எழ அந்தப் பெண்களுக்கு வழிவகை செய்துதரப்படும்,  குற்றமிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவிடும், அந்தத் தண்டனைதான் குற்றம் புரிய நினைக்கிறவர்களைத் தடுக்கும் என்பது போன்ற பகல் கனவுகளுக்கு நாம் பழகிவிட்டோம்.

அதேபோல் எது நடந்தாலும் களப் போராளிகளோ பெண்ணிய அமைப்புகளோ பார்த்துக்கொள்வார்கள் எனப் பொதுச் சமூகம் ஒதுங்கிக்கொள்கிறது. நம்முடைய அதிகபட்ச செயல்பாடு, பாதுகாப்பான இடத்தில் நின்றுகொண்டு கருத்துக் களமாடுவதாகவே இருக்கிறது.

இதையும் கடந்து வருவோம்

ஆணையும் பெண்ணையும் சமமாக வளர்ப்போம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டுமே எந்தப் பலனும் விளைந்துவிடப் போவதில்லை. ஆண் மையச் சிந்தனையிலிருந்து ஆண்களோடு பெண்களும் சேர்ந்தே வெளிவரும்போதுதான் சமத்துவ வளர்ப்பு சாத்தியப்படும். அது இல்லாதபோது பெண்கள், ஆண்கள் நுகர வேண்டிய பண்டங்களாக மட்டுமே நடத்தப்படுவார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கான அத்தனை சாத்தியங்களை யும் இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இப்படியான சமூகத்தில் நம் வீட்டுப் பெண்களை அடங்கி இரு, ஒடுங்கி இரு எனக் கண்டிப்பதைவிட எந்தச் சூழலையும் எதிர்கொள்ள அவர்களைப் பழக்குவதுதான் இன்றைய அவசியத் தேவை. நெருக்கடியான சூழலை எதிர் கொள்வதற்கான மனோதிடம் முதலில் நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்டுக்கொள்வோம்.

பெண்ணின் உடலில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது என்ற மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அப்படியொரு தெளிவு இருந்திருந்தால் வீடியோவைக் காட்டி மிரட்டப்பட்டபோதே, அந்தப் பெண்கள் துணிந்து அனைத்தையும் தங்கள் குடும்பத் திடம் சொல்லியிருப்பார்கள்.

ஆனால், நம் சமூகம் அப்படிப்பட்ட பரந்துபட்ட பார்வையோடு குழந்தைகளை வளர்ப்பதில்லை. உடலில்தான் மானம் இருக்கிறது; ‘மானம் போனால் எல்லாமே போச்சு' என்ற பிற்போக்குச் சிந்தனையை ஊற்றி வளர்க்கிறது. அதிலிருந்துதான் குற்றங்கள் தொடங்குகின்றன.

சமூகத்துக்குக் கொடுத்த பதிலடி

அறிவுரை சொல்வது எளிது; அந்த நிலையில் இருப்பவர்களுக்குத்தானே அந்த வேதனை புரியும் என்பதெல்லாம் கட்டுக்கதை. அதை ஏன் வேதனையாக நினைக்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி. டேனிஷ் பெண் பத்திரிகையாளர் எம்மா ஹோல்டன், தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை  அப்படித்தான் கடந்துவந்தார். அவரது நிர்வாணப் படங்களை யாரோ சிலர் திருடி, இணையத்தில் உலவவிட்டனர்.

அவற்றுக்குக் கீழே கொச்சையான கருத்துகளைப் பதிவிட்டனர். எம்மாவும் முதலில் உடைந்துதான் போனார். ஆனால், தன் பங்கு எதுவுமே இல்லாத அந்தச் செயலுக்குத் தான் ஏன் வருந்த வேண்டும் என நினைத்தார். தொழில்முறை பெண் புகைப்படக் கலைஞரை அழைத்தார்.

ஆண்களின் கண்களுக்கு விருந்தாக இல்லாமல் பெண்ணின் வலியைப் பேசும் விதத்தில் தன்னை நிர்வாணமாகப் படமெடுக்கச் சொன்னார். அவற்றை அவரே இணையத்தில் பதிவிட்டார். தன்னுடலைக் கொத்தித் தின்ற சமூகத்துக்குத் தன் செயல்மூலம் பதிலடி கொடுத்தார் எம்மா. இது நடந்து மூன்று ஆண்டுகளாகின்றன.

ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் பெண்கள் தங்கள் அந்தரங்கத்தை ஆண்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த நம்பிக்கையை ஆண்கள் சிதைத்தால் அது ஆண்களின் குற்றமே தவிர, பெண்கள் அதனால் குற்றவுணர்வுக்கு ஆளாகத் தேவையே இல்லை. இதைப் பெண்கள் மட்டுமல்ல; பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமல்ல; ஆண்களும் ஆண்களைப் பெற்றவர்களும் உணர வேண்டும்.

நீங்க என்ன சொல்றீங்க?

பாலியல் தொடர்பான குற்றங் களில் தொடர்ந்து பெண்களே குற்றவாளியாக்கப் படுவதும் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண்கள் பெரு மிதத்துடன் வலம்வருவதும் எதனால்? பெண்களின் அந்தரங்கம் அவர்களுக்குத் தெரியாமல் பொதுவெளியில் பகிரப்படும்போது அந்தச் சூழலை எதிர்கொள்ள நாம் ஏன் தயங்குகிறோம்? என்ன செய்து இதைச் சரிசெய்வது? உங்கள் கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்; விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x