Published : 09 Mar 2019 07:16 PM
Last Updated : 09 Mar 2019 07:16 PM
மணியம்மையார் நூற்றாண்டு: மார்ச்-10
கடந்த வாரம் வெளியான ஆங்கிலக் கட்டுரையொன்றில் ஈ.வெ.ரா.மணியம்மையாரைப் பற்றிய குறிப்பு, ‘பெரியார் வீட்டின் பணிப்பெண்’ என்பதாக இருந்தது. பொதுவாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தமிழகத்தின் முன்னோடிப் பெண் தலைவர்களில் ஒருவரான மணியம்மையாரின் மீது அவர் வாழ்ந்த காலத்தில் வாரியிறைக்கப்பட்ட சேற்றைக் காட்டிலும் மோசமானது அவரை இன்னமும் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் மனப்போக்கு.
பொதுவாழ்வுக்கு வருகிறவர்கள் மான, அவமானம் பார்க்கக் கூடாது என்றார் பெரியார். அந்த வார்த்தைகள் யாருக்குப் பொருந்துகின்றனவோ இல்லையோ, மணியம்மையாருக்கு மிகவும் பொருத்தமானது. உடன் நின்ற தோழர்களே பழிசொல்லி நகர்ந்தபோதும், அவர் தரப்பிலிருந்து எந்த மறுமொழியும் வந்ததாகத் தெரியவில்லை.
வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம் என்று சொன்னவர்கள்தாம் பின்பு வெட்கத்தோடும் வேதனையோடும் திரும்பிவந்தார்கள். இடைப்பட்ட 18 ஆண்டுகளில் காட்சிகள் தலைகீழாக மாறின. ஜனநாயக அரசியலால் ஈர்க்கப்பட்டு விலகிப்போன தமது இயக்கத் தோழர்களையெல்லாம் மணியம்மையார் பின்பு குறிப்பிட நேர்ந்தபோது, கண்ணியமும் மதிப்பும்கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கப் பணிகளில் பங்கேற்றுத் தமிழகம் முழுவதும், ‘வேலூர் மணி’ என்று அறியப்பட்ட ஒரு ஆளுமையாகத்தான் பெரியாரின் ஏற்பாட்டில் இணைந்தார் மணியம்மையார். அதன்பின் பெரியாரின் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளும் பணியில் 25 ஆண்டுகள் ஈடுபட்டார். அப்போதும்கூட மேடைகளில் ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. ஏறக்குறைய 40 ஆண்டு காலப் பொதுவாழ்வு அவருடையது.
சாதிக்கு எதிரான போராட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டம் சாதியைப் பாதுகாக்கிறது என்று அதை எதிர்த்து 1957-ல் மாநிலம் தழுவிய போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் மணியம்மையார். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 3,000-க்கும் மேற்பட்டவர்கள் ஓராண்டுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்றனர். கொள்கை சார்ந்த இயக்கம் என்பது வேறு; அரசியல் கட்சி என்பது வேறு என்பதை இந்தப் போராட்டங்கள் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டின.
திருச்சி சிறையிலிருந்த மூன்று போராட்டக்காரர்கள் உடல் நலம் மோசமாகி இறந்தார்கள். ஒருவரது உடலைக் காவல் துறை கொடுக்கவில்லை. கடுமையான போராட்டங்களுக்கு நடுவே இருவரது உடல்களைப் பெற்று மாபெரும் ஊர்வலமாக எடுத்துச்சென்று மரியாதை செய்தவர் அவர். அப்போதைய அரசின் பலத்த கெடுபிடிகளுக்கு நடுவேதான் அதைச் செய்ய முடிந்தது.
தொண்டராக உயர்ந்தவர்
சாதி ஒழிப்புக்கான அந்தப் போராட்டத்தில் அவர் பேசியபோதெல்லாம், பெண்கள் இன்னும் அதிக அளவில் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோளாக இருந்தது. அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிவிடாமல் அடுத்து ‘சுதந்திரத் தமிழ்நாடு’ போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தார்.
இன்று கொஞ்சமாவது மாநில உரிமைகளைப் பற்றிப் பேசமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் அன்று நடத்தப்பட்ட இத்தகைய போராட்டங்களும் அவை மத்திய அரசுக்குக் கொடுத்த வலுவான அழுத்தங்களும்தாம்.
பெரியாருக்கு நடக்கும் இரங்கல் கூட்டங்கள் வெறும் இரங்கல் கூட்டங்களாக நடத்தப்படக் கூடாது; அவையும் பிரச்சார மேடையாகத்தான் அமைய வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி கொள்கை உறுதிக் கூட்டங்களாக அவற்றை நடத்தினார். தனது எழுத்துகளில் ‘தந்தை பெரியார்’ என்று தொண்டரின் நிலையில் நின்றே அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘பெரியார் ஈ.வெ.ராமசாமி’ என்று தோழரின் நிலையில் நின்று அவர் பேசிய உரைகளும் அதையே உணர்த்துகின்றன.
உறுதியான அரசியல் நிலைப்பாடு
பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற மணியம்மையார் சொன்னார்: “சந்தர்ப்பம் வரும்போது நான் யார், எப்படி நடந்துகொள்கிறேன் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்”. அத்தகைய வாய்ப்புகளும் அமைந்தன. மணியம்மையாரின் தலைமையில் நடத்தப்பட்ட ‘இராவண லீலா’ இந்தியா முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
எந்த இதிகாசம் இந்தியத் துணைக்கண்டத்தைக் கலாச்சார ரீதியில் ஒன்றுபடுத்தி வைத்திருக்கிறதோ, அதே இதிகாசத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள சமூக சீர்திருத்த அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, தமிழகத்தில் அதை எதிர்த்துத் தீவிரமாகப் போராடியவர்களில் மணியம்மையாரும் ஒருவர். அதன் காரணமாக, வருமான வரித் துறை தொடங்கி பத்திரிகைத் தணிக்கைவரை பல்வேறு கெடுபிடிகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்னை வந்த இந்திரா காந்தியை எதிர்த்து அவர் நடத்திய ‘கறுப்புக் கொடி போராட்டம்’ அவரது துணிச்சலுக்கும் வீரத்துக்கும் உதாரணம்.
எல்லாமே மக்களுக்காக
அரசு ஊழியர்கள் போராடும்போது அவர்களுக்கு எதிராக மக்களை உசுப்பிவிடுவது இன்றைக்கு மட்டுமல்ல; முன்பும் நடந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அப்படியொரு முயற்சி நடந்தபோது கடுமையான குரலில் முதல்வரின் செயல்பாட்டைக் கண்டித்தவர் மணியம்மையார். இந்தி எதிர்ப்புப் போரில் கலந்துகொண்டதற்காகவும் தான் பதிப்பாசிரியராக இருந்த பத்திரிகையில் வெளியான கட்டுரைக்காகவும் அவர் சிறைத் தண்டனைகளையும் அனுபவித்திருக்கிறார்.
தனது சொத்துகளையும் பெரியார் தனது சொந்தப் பயன்பாடுகளுக்காக அளித்த சொத்துகளையும் மணியம்மையார் மக்களுக்கே விட்டுச்சென்றார். பெரியாரின் பெயரில் அறக்கட்டளைகளை நிறுவி, அவற்றுக்குத் தனது சொத்துகளை எழுதிவைத்தார். அவையே இன்று பெண்களுக்கான கல்வி நிறுவனங்களாகவும் மருத்துவமனைகளாகவும் குழந்தைகள் காப்பகங்களாகவும் செயல்பட்டுவருகின்றன.
வியக்கவைக்கும் சிந்தனை வீச்சு
தான் உருவாக்கிய அமைப்பைத் தனக்குப் பிறகு பாதுகாப்பதற்கான ஏற்பாடு என்றுதான் மணியம்மை யாருடனான திருமணத்துக்கு விளக்கம்கொடுத்தார் பெரியார். அவரின் உடல்நலத்தைப் பாதுகாத்து அவரது ஆயுளை மட்டும் மணியம்மையார் நீட்டிக்கவில்லை. அவர் உருவாக்கிய அமைப்பின் ஆயுளையும் நீட்டித்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தது ஐந்தாண்டுகள் மட்டும்தான்.
ஒரு மக்கள் இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தும் தகுதிவாய்ந்த அவர், அதுவரையில் தலைவரின் உடல்நலம் காக்கும் ஒரு செவிலியாகத் தன்னைச் சுருக்கிக்கொண்டிருந்தார் என்றால் பெரியாரியர்கள் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். ஒருவகையில் அது ஒரு சுய அழிப்பு.
மணியம்மையாரைப் பற்றிப் பேசிய அளவுக்கு அவரது எழுத்துகளும் உரைகளும் விவாதிக்கப்படவில்லை. அவரது சிந்தனைகளின் வீச்சு, பெரியாரை அடியொற்றியது மட்டுமல்ல; அதற்கு நிகரானதும்கூட. தொடர்ந்து பெரியார் பேசிய மேடைகளில் அருகிலிருந்ததன் விளைவாக, அவரைப் போலவே மணியம்மையாரின் உரைகளும் மிக நீளமான வாக்கியங்களைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம்.
கொடிகளின் தத்துவம் பற்றிய மணியம்மையாரின் பேச்சு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு. கந்தபுராணத்துக்கும் ராமாயணத்துக்குமான ஒப்பீடு, இந்து மதத்துக்கும் மற்ற மதங்களுக்குமான ஒப்பீடு ஆகியவை அவரது ஒப்பீட்டுப் பகுப்பாய்வுத் திறனுக்கான உதாரணங்கள்.
வரலாற்றில் நிலைத்த பெருமை
இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவது குறித்து சி.பி.ராமசாமி அய்யர், ஜவாஹர்லால் நேரு, லியாகத் அலிகான் ஆகியோரிடையே நடந்த விவாதங்களைத் தொகுத்து அவர் ‘குடிஅரசு’வில் வெளியிட்டது இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் முக்கியமான ஆவணப் பதிவு. ‘விடுதலை’யில் அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும் சிவவாக்கியர் உள்ளிட்ட சித்தர்களின் பாடல்கள், தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் பொருள்முதல்வாதப் போக்கைக் கோடிட்டுக் காட்டுபவை.
‘நம்மைவிட, நம் தனிப்பட்டவர்கள் நலத்தைவிட சமுதாயத்தின் மானமே பெரிது. அதற்காகவே உயிர்வாழ்கிறோம்’ என்றவர் மணியம்மையார். சொன்னவாறே வாழ்ந்தும் காட்டியவர். அவரின் நூற்றாண்டு விழா, அவர் பிறந்த வேலூரில் இன்று தொடங்குகிறது.
அதையொட்டி, அவர் எழுதிய கட்டுரைகளும் அவரைப் பற்றிய கட்டுரைகளும் அடங்கிய ‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் களஞ்சியம்’ என்ற பெருந்தொகுப்பு வெளியிடப்படுகிறது. மணியம்மையாரின் எழுத்துகளும் உரைகளும் அவர் நடத்திய போராட்டங்களின் வரலாற்றுப் பதிவுகளுமே போதும், என்றென்றும் அவரது தலைமைக் குணத்தை எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்கும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT