Published : 03 Feb 2019 10:11 AM
Last Updated : 03 Feb 2019 10:11 AM
இந்தியாவிலிருந்து அயல் நாடுகளுக்குச் சென்று பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்திய முதல் திருநங்கை நடனக் கலைஞர்; தூர்தர்ஷனில் நேரடியாக கிரேட் ஆர்டிஸ்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை; தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத நாடக அகாடமியின் விருதுகளைப் பெற்றிருக்கும் முதல் திருநங்கை நடனக் கலைஞர்; தற்போது பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் திருநங்கை பரத நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ்.
இதுவரை கலைத் துறையில் அவர் சந்தித்த சவால்களுக்கும் வெற்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் தன் தோழி சக்தியின் கட்டுப்பாடான வழிநடத்துதலே காரணம் என்று நட்புக்கு முதல் மரியாதை தருகிறார் நர்த்தகி நடராஜ்.
துளிர்விட்ட நடன ஆர்வம்
மதுரை, அனுப்பானடி கிராமம்தான் நர்த்தகிக்கும் அவரின் தோழி சக்திக்கும் சொந்த ஊர். இருவரின் குடும்பங்களும் நான்கு தலைமுறைக்கும் மேலாக நட்போடு இருப்பவை.
அன்பான சொந்தங்களோடும் வீடுகொள்ளாத உறவுகளோடும் பிறந்த நர்த்தகியும் சக்தியும் தங்களுக்குள் மாற்றுப் பாலினத்தின் அடையாளத்தைச் சிறு வயதிலேயே உணர்ந்தார்கள். 12 வயதிலேயே அவர்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கிறது. தங்களைச் சேர்த்துக்கொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவிக்கும் அவர்களின் குடும்பத்தைவிட்டு வெளியேறுகின்றனர். தோழிகள் இருவருக்கும் நாட்டியத்தில் இருந்த ஆர்வத்தை அந்தக் கிராமத்திலிருக்கும் டூரிங் டாக்கீஸ் மேலும் வளர்க்கிறது.
டூரிங் டாக்கீஸில் அவர்கள் கண்டு ரசித்த லலிதா, பத்மினி, ராகிணி, வைஜெயந்தி மாலா போன்ற நடனக் கலைஞர்களின் நடனம் அவர்களுக்குப் பெரிய ஆதர்சமாக இருந்தது. திரையில் அவர்கள் பார்த்த நடனத்தை, மதுரையைச் சுற்றியிருக்கும் கோயில்களில் நாட்டிய நிகழ்ச்சியாக நடத்த ஆரம்பித்தனர்.
பார்த்தவர்கள், “இவ்வளவு நன்றாக ஆடுகிறீர்களே, நீங்கள் யாரிடம் கற்றுக்கொள்கிறீர்கள்” என்று கேட்பார்கள். அப்படிக் கேட்பவர்களிடம், “நாங்கள் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. வைஜெயந்தி மாலாவின் குருவிடம்தான் கற்றுக்கொள்ளப் போகிறோம்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். அந்த நாளும் வந்தது.
“எங்கள் குரு கிட்டப்பா பிள்ளையிடம் நாங்கள் எங்களைப் பற்றிய உண்மையைச் சொன் னோம். எந்தவிதமான பின்புலமும் எங்களுக்கு இல்லை என்றும் சொன்னோம். அப்படிப்பட்ட எங்களுக்கு அவர் அளித்த பொக்கிஷமாகத்தான் இந்தக் கலையைப் பார்க்கிறோம்” என்று தன்னுடைய குருவுடனான முதல் சந்திப்பைக் குறித்து நர்த்தகி நடராஜ் சொல்கிறார்.
கலையின் பன்மைத்துவம், திருநங்கையருக்கான உரிமை போன்ற பல விஷயங்கள் குறித்து நர்த்தகி நடராஜ் நம்முடன் நடத்திய உரையாடலிலிருந்து…
உங்களைப் புரிந்துகொள்ளாத குடும்பத்தின் மீதான கோபம் தணிந்துவிட்டதா?
சிறுவயதில் என்னைப் பற்றியும் எனது கனவுகளைப் பற்றியும் எதுவும் கேட்காமல் என்னைப் புறக்கணித்து விட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் ரொம்ப காலம் இருந்தது. என் குடும்பத்தின் மீது அன்றைக்குத் தாங்க முடியாத கோபம் இருந்தது. காலம் மாறியது. இப்போது எங்கள் கனவு நிறைவேறிவிட்டது. குடும்பமும் சேர்ந்திருக்கிறது. இப்போது நினைத்துப் பார்த்தால், அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் திருநங்கை எனும் அடையாளத்தோடு வெளியே வரவே முடியாத நிலை இருந்தது. அப்போது என்னுடைய குடும்பத்துக்கு என்ன மாதிரியான நெருக்கடி இருந்திருக்கும் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது.
பெண்களுக்கான கலையாகவே பெரிதும் கருதப்படும் பரத நாட்டியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தீர்கள்?
இறை நம்பிக்கையால்தான் இந்தக் கலை என்னிடம் வந்திருக்கிறது. பிறந்தபோதே என்னைப் பெண் குழந்தையாகத்தான் உணர்ந்தேன். அப்போதே நாட்டியம் எனக்குள் இருந்தது. என் வாழ்க்கையில் புரியாத இந்தப் புதிர், வெற்றிகளையும் விருதுகளையும் எனக்கு விடையாகக் கொடுத்தது.
நான் திருநங்கையாக இருப்பது என் அடையாளம். எனது கலைக்கான அங்கீகாரமே இந்த விருதுகள். நிறையப் பேர் நான் திருநங்கையாக இருப்பதாலேயே பாராட்டுகளும் விருதுகளும் கிடைப்பதாக நினைக்கிறார்கள். சமூகத்திலும் கலைத் துறையிலும் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஏதோவொரு இரவில் கிடைத்தவை அல்ல. எத்தனையோ வலிகளும் அவமானங்களும் அடங்கிய பக்கங்கள் இருக்கின்றன. மீண்டும் அவற்றைப் புரட்டிப் பார்க்க விரும்பவில்லை.
கற்றுக்கொண்டதை யாருக்கு அர்ப்பணிக்கிறீர்கள்?
எங்கிருந்து எனக்குக் கிடைத்ததோ அதற்கே அர்ப்பணம் செய்யும் வகையில்தான் வெள்ளியம்பலம் கலைக் கூடமாக இருந்த நாட்டியப் பள்ளியை வெள்ளியம்பலம் அறக்கட்டளையாக உருவாக்கி மொழி, இன பேதம் இல்லாமல் பல மாணவர்களுக்கும் இந்தக் கலையைக் கற்பித்துவருகிறேன்.
உங்கள் மாணவர்களில் ஆண்களும் திருநங்கைகளும் இருக்கிறார்களா?
உடலால் ஆடப்படுவது அல்ல நடனம்; உணர்வால் ஆடப்படுவது. பாலின பேதங்களைக் கடந்து கலையை அணுகும் நிலையை என்றைக்கோ இன்றைய இளைய தலைமுறை எட்டிவிட்டது. என்னிடம் பெண்கள், ஆண்கள், திருநங்கைகள் எனப் பலரும் பரத நாட்டியம் கற்றுக்கொள்கின்றனர். எனக்கு எண்ணிக்கையில் நம்பிக்கையில்லை. ஆனால், நிச்சயம் என்னிடம் நடனம் கற்றுக்கொள்ளும் திருநங்கையை மேடையில் சீக்கிரமே அறிமுகப்படுத்துவேன்.
நாம் வாழும் சமூகத்தின் நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத்தானே கலைகள் இருக்க வேண்டும். பரத நாட்டியத்தில் சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் கருப்பொருளாகுமா?
நம்முடைய பாரம்பரியத்தையும் தொன்மையையும் பரத நாட்டியம் எனும் கலை வடிவத்தின் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவதையே முதன்மையான நோக்கமாகக் கருதுகிறேன். அதே நேரம் நீங்கள் சொல்வதுபோல் நடைமுறை வாழ்க்கையின் பிரச்சினைகளையும் கலைகள் பிரதிபலிக்க வேண்டியது அவசியம்தான். எனது நாட்டிய குருவின் வழிவந்த வேரை மறந்துவிட்டு நான் எதையும் செய்ய மாட்டேன்.
நமது பாரம்பரியமான கலையைப் பாதுகாப்பது, பரப்புவது, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது ஆகியவையே என் தலையாய லட்சியம். அதைத்தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்துச் செய்துகொண்டிருக்கிறேன். அதற்கான அங்கீகாரமே எனக்குக் கிடைக்கும் விருதுகளும் பாராட்டுகளும்.
பல துறைகளில் தடம் பதித்த திருநங்கைகள் பலரும் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்குக் குரல் கொடுப்பதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. திருநங்கை சமூகத்திலிருந்து மதிப்பு மிகுந்த விருதுகளைப் பெற்றிருக்கும் நீங்கள் அவர்களின் பிரதிநிதியாக அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் உங்களின் கருத்துகளைச் சொல்வீர்களா?
பல தடைகளைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் திருநங்கைகள் இன்றைக்குச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தில் இருக்கும் பலரும் என்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதன் மூலம் சாலையில் போகும் ஒரு திருநங்கையை மரியாதையாகவே நடத்துவார்கள். திருநங்கைகளின் உரிமைக்காகப் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து பேசுவேன்.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT