Last Updated : 28 Jan, 2019 01:02 PM

 

Published : 28 Jan 2019 01:02 PM
Last Updated : 28 Jan 2019 01:02 PM

பெண்கள் 360: கடவுளைத் தரிசித்தது குற்றமா?

கடவுளைத் தரிசித்தது குற்றமா?

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சபரிமலைக்குச் சென்ற திரும்பிய கனக துர்கா தன் வீட்டு உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். எதிர்ப்புகளை மீறிக் கோயிலுக்குள் நுழைந்ததால் அவரது மாமியார் கனக துர்காவைக் கட்டையால் தாக்கியதாகத் தெரிகிறது. பலத்த காயமடைந்த கனக துர்கா, மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சபரிமலைக்குச் சென்ற கனக துர்காவுக்குக் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது சற்றுத் தேறியுள்ள கனக துர்கா, காவல் துறை பாதுகாப்புடன் மலப்புரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். ஆனால், கனக துர்காவை அவரது வீட்டினுள் அனுமதிக்க அவரது குடும்பத்தார் மறுத்துவிட்டனர். புகுந்த வீட்டில் மட்டுமல்ல பிறந்த வீட்டிலும் கனக துர்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்மாதிரி ஆட்சியர்

நெல்லையின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் சொந்தக்காரர். கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நெல்லை மாவட்டத்தில் நடக்கவிருந்த மத மோதலைத் தனது துரித நடவடிக்கையின் மூலம் நீர்த்துப்போகச் செய்தவர். தன் இரண்டரை வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பதன் மூலம் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இங்கு கீதாஞ்சலியுடன் 20 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடியில் கீதாஞ்சலி சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகின்றன.

“சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்புக் குழந்தைகளுடன் பழகவும் படிக்கவும் தமிழைக் கற்கவும் என் மகளுக்குக் கிடைத்த வாய்ப்பு இது. சேர்ந்த இரண்டு மாதங்களில் அவள் நன்றாகத் தமிழ் பேசுகிறாள். திறமையான ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுகிறார்கள். இந்த மையம் என் மகளின் ஆரம்பக் கால கல்வி வளர்ச்சிக்கு மிகவும் ஊன்றுகோலாக இருக்கும்’’ என்று நம்பிக்கையுடன் ஷில்பா கூறுகிறார்.

பிரியங்காவின் அரசியல் பிரவேசம்

மக்களைக் கவர்ந்து அவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது ஒரு கலை. அந்தக் கலையைத் தன் இயல்பாகக்கொண்டவர் பிரியங்கா காந்தி. டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்றுள்ள அவர், தொழிலதிபரான ராபர்ட் வத்ராவை மணந்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள். 16-வது வயதிலிருந்தே பிரியங்கா தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகிறார். 2004-ல் நாடெங்கும் வீசிய வாஜ்பாய் அலையை மீறி சோனியா காந்தியை வெற்றி பெறவைத்ததில் பிரியங்காவின் பிரச்சாரத்துக்கும் பங்கு உண்டு.

“அரசியல் என்னை ஈர்க்கவில்லை; மக்கள்தாம் என்னை ஈர்க்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான எதையும் என்னால் அரசியலில் இல்லாமலேயே செய்ய முடியும்” என்று கூறிய அவரை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அரசியலில் களமிறக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ல்

நடந்த தேர்தலில், பிரியங்காவைத் தன்னுடைய மகள் போன்றவர் என்று அரசியல் விவேகத்துடன் பிரதமர் மோடி சொன்னார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக “நான் ராஜீவ் காந்தியின் மகள். அவர் மட்டுமே என்னுடைய தந்தை” எனச் சட்டெனக் கூறியது பிரியங்காவின் அரசியல் சாதூர்யத்துக்குச் சான்று.

adhibarjpgright

அதிபர் தேர்தலில் சென்னைப் பெண்

சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட 54 வயதாகும் கமலா தேவி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைத் தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சியில் வளர்ந்துவரும் நட்சத்திரமாக அவர் கருதப்படுகிறார். 2016-ல் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020-ல் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். “அமெரிக்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்கிறேன்” என்று ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் கமலா தெரிவித்துள்ளார். கமலா தேவியின் தாய் சென்னையைச் சேர்ந்தவர். அவரது உறவினர்கள் இன்றும் சென்னையில் வசிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் முடிவை  ‘மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்’ நினைவு நாள் அன்று அறிவித்தது மிகுந்த பாராட்டைப் பெற்றது.

 

நாட்டிய அரசி

நடனம் தாய்லாந்து நாட்டின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது. அதன் வண்ணமயமான கலாச்சாரத்துக்கு 600 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் உண்டு. அந்தக் கலாச்சாரத்தை இன்றும் நீட்டிக்கச் செய்ததில் ‘மேன்லி காங்பிரபாத்’துக்குப் பெரும் பங்கு உண்டு. 1885 ஜனவரி 20-ல் பாங்காக் அருகில் உள்ள யாய் மாநிலத்தில் மேன்லி பிறந்தார். அவருடைய அம்மா அங்குள்ள அரண்மனையில் சமையலராகப் பணியாற்றினார்.

அரண்மனையில் நடக்கும் நடன நிகழ்ச்சிகள் மேன்லிக்குள் லயிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தின. நடனக் கலைஞர்களின் ஒப்பனையும் அவர்களின் நளினமான அசைவுகளும் அங்கு ஒலிக்கும் துள்ளலான இசையும் மேன்லியை நடனத்துக்கு அடிமையாக்கின. நடனத்தில் மேன்லிக்கு இருந்த இயல்பான திறமை, அரண்மனையில் இருந்த நடன ஆசிரியர்களை ஆச்சரியப்படவைத்தது. அந்த ஆசிரியர்கள் அளித்த பயிற்சி, மேன்லியின் இயல்பான திறனை மெருகேற்றியது. தாய்லாந்தின் பாரம்பரிய நடனத்தை மேன்லி அளவுக்குச் சிறப்பாக ஆடுபவர்கள் இன்றும் இல்லை.

தாய்லாந்து நாட்டின் முதல் நடனப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி, அதன் மூலம் எண்ணற்ற நடனக் கலைஞர்களை மேன்லி உருவாக்கினார். அவரது 136-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த ஞாயிறு அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x