Last Updated : 24 Feb, 2019 10:06 AM

 

Published : 24 Feb 2019 10:06 AM
Last Updated : 24 Feb 2019 10:06 AM

ஆடும் களம் 39: காத்திருக்கும் ராணியின் கனவு

சர்வதேச விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு வீராங்கனை, மீண்டும் அணிக்குத் திரும்புவதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், அந்தக் கற்பனையை நிஜமாக்கியவர் ரிது ராணி. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறக் காரணமாக இருந்த ஈடு இணையில்லா வீராங்கனை.

ரிது ராணி, ஹரியாணா மாநிலம் மர்கந்தா நதியோரம் உள்ள ஷாபாத் நகரைச் சேர்ந்தவர். ஷாபாத் நகரில் ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்குப் பஞ்சமே கிடையாது. அந்த நகரிலிருந்த ஹாக்கி அகாடமியிலிருந்து உருவான வீரர், வீராங்கனைகள் அநேகர். ரிது ராணிக்கு ஒன்பது வயதானபோது ஹாக்கி மீது ஆசை பிறந்தது. ஹாக்கி மட்டையை எடுத்துக்கொண்டு விளை யாடத் தொடங்கினார். ஹாக்கி மீதான அவரது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர், ஷாபாத் ஹாக்கி அகாடமியில் ரிதுவைச் சேர்த்துவிட்டார்கள். அடுத்த சில ஆண்டு களில் தேர்ந்த ஹாக்கி வீராங்கனையாக ரிது உருவெடுத்திருந்தார்.

சச்சினைப் போல அறிமுகம்

நடுக்கள வீராங்கனையாக அவர் சுழன்று ஆடும் ஆட்டம் தேர்வாளர்களை ஈர்த்தது. மாநில அளவில் விளையாடிவந்த ரிது 14 வயதிலேயே இந்திய ஹாக்கி அணிக்காகத் தேர்வானார். கிரிக்கெட்டில் 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரைப் போல ஹாக்கியில்  இளம் வயதில் அறிமுகமான வீராங்கனை என்ற சிறப்பு ரிதுவுக்குக் கிடைத்தது. பதின்ம வயதுக்கு உரிய வாழ்க்கையைத் தாண்டி, ஹாக்கிதான் அவரை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

2006-ல் 14 வயதில் தோகா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் மாட்ரிட் உலகக் கோப்பையிலும் ரிது ராணி விளையாடினார். தன்னை ஒரு குழந்தை யாகப் பாவித்தவர்களுக்குக் களத்தில் பதிலடி தந்தார். துடிப்பாகவும் 360 டிகிரி கோணத்திலும் சுழன்று பந்தைக் கடத்தும் லாகவத்தைக் கண்டு சர்வதேச ஹாக்கி வீராங்கனைகள் மூக்கில் விரல் வைத்தார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பிடித்த இந்திய அணி, வெண்கலப் பதக்கம் வென்றது. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே வெண்கலம் வென்ற மகிழ்ச்சியோடு நாடு திரும்பினார் ரிது. இந்த இரு தொடர்களும் ரிதுவின் இனிமையான ஹாக்கிப் பயணத்துக்குப் பாதை அமைத்துக்கொடுத்தன.

கேப்டனாக ஜொலித்தவர்

2009-ல் ரிதுவின் ஹாக்கிப் பயணம் உச்சத்துக்குச் சென்றது. அந்த ஆண்டில் ரஷ்யாவில் நடந்த சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டியில் ரிது ராணி பங்கேற்றார். இந்தத் தொடரை இந்திய மகளிர் அணி வென்று புதிய சரித்திரம் படைத்தது.

கோல் அடித்தவர்களின் பட்டியலில் ரிது ராணி முதலிடம் பிடித்தார்.  அந்தத் தொடரில் மட்டும் எட்டு கோல்களை ரிது அடித்திருந்தார். அர்ப்பணிப்புடன் அவர் விளையாடிய விதம் ரிதுவை 2011-ல் கேப்டனாக உயர்த்தியது. 20 வயதில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் என்ற அந்தஸ்து ரிதுவுக்குக் கிரீடம் சூட்டியது.

aadum-2jpg

அவரது தலைமையில் 2013-ம் ஆண்டு கோலாலம்பூர் ஆசியக் கோப்பையில் இந்திய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இந்தியா வென்றது. 2015-ல் பெல்ஜியத்தில் நடந்த உலக லீக் போட்டியின் அரையிறுதியில் தரவரிசையில் முன்னிலையில் இருந்த ஜப்பானைத் தோற்கடித்து, ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியால் 2016 ஒலிம்பிக் வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

நீக்கப்பட்ட ரிது

36 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக ரிதுவின் தலைமையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்த நிகழ்வு, அவரது வாழ்க்கையில் மகுடமாக ஜொலித்தது. ரிதுவை உடனடியாக அங்கீகரிக்கும் வகையில் அந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுப் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த மகிழ்ச்சியெல்லாம் ஒரு மாதம்கூட  நிலைக்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ரிது கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்ல, ஹாக்கி அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தார். ரிதுவின் நீக்கம் அவரை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்திய ஹாக்கி அணியில் காலடி வைத்தது முதலே ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்பது ரிது ராணியின்  கனவு. அந்த வாய்ப்பு அவரால் கிடைத்தபோது, அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனதை ரிதுவால் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனைக்கும் இந்திய மகளிர் அணி தகுதியின் அடிப்படையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு பெற்றது அதுதான் முதன்முறை. ஏற்கெனவே 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி  பங்கேற்றிருந்தாலும், அது தகுதி அடிப்படையில் கிடைத்த வாய்ப்பல்ல. ரஷ்யாவின் அழைப்பின் பேரிலேயே இந்திய அணி அப்போது பங்கேற்றது.

ஓய்வுக்குப் பிறகு அழைப்பு

ஒலிம்பிக்கில் அணியை வழிநடத்தும் கனவுடன் ஆடிவந்த ரிதுவின் நம்பிக்கை ஒரே நாளில் சுக்குநூறாக உடைந்தது. அவரது நீக்கத்துக்குக் கவனச் சிதறல்,  தவறான மனோபாவம், உடல் தகுதியின்மை எனப் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொன்னது ஹாக்கி இந்திய அமைப்பு. ஒன்பது வயது முதலே ஹாக்கியை மட்டுமே வாழ்க்கையாக நினைத்துவந்த ரிதுவுக்கு ஆறாத வடுவாக இந்த நிகழ்வு அமைந்தது.

ஒலிம்பிக் கனவு மண்ணாகிப்போனதால் மனம் நொந்தவர் ஹாக்கியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஆறாத ரணத்துடன் ஹாக்கியிலிருந்து விலகியிருந்த ரிதுவை ஆறு மாதங்கள் கழித்து அணியில் சேர்த்து ஹாக்கி இந்தியா அறிவிப்பு வெளியிட்டது. ரிதுவின் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெறவைத்து இந்த அறிவிப்பு வெளியானது.

இது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் ரிது ஹாக்கி அணிக்குத் திரும்பியதை அவரது ரசிகர்கள் வரவேற்றார்கள். இந்திய மகளிர் ஹாக்கியில் ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியவர் ரிதுவாக மட்டுமே இருக்க முடியும்.

கனவு நனவாகுமா?

ரிதுவுக்குள் ஒளிந்திருந்த திறமையும் அர்ப்பணிப்போடு விளையாடும் அவரது அணுகுமுறையும் மீண்டும் ஹாக்கிக்கு ரிதுவை அழைத்துவந்தது. தற்போது ஹாக்கி அணியில் அவ்வப்போது இடம் பிடித்து நடுக்கள வீராங்கனையாகவும் அணியின் முதுகெலும்பாகவும் இருந்துவருகிறார். கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ரிதுவுக்கு மீண்டும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அந்த விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்கும் நாளுக்காக ரிது ராணி காத்திருக்கிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x