Last Updated : 29 Sep, 2014 12:32 PM

 

Published : 29 Sep 2014 12:32 PM
Last Updated : 29 Sep 2014 12:32 PM

வளர்வதற்கு அஞ்சும் சிறுமி

நான் 19 வயதைக் கடந்தவள். விரைவில் 20 வயதை எட்ட இருக்கறேன். ஆனாலும் என்னால் நான் வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என் முன்னால் நிறைய பொறுப்புகள், கடமைகள் உள்ளன. ஆனால் எனக்கு பணத்தைக் கையாளத் தெரியாது. வங்கிக்குப் போவதைப் பொறுத்தவரை ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதைத் தவிர வேறு எதையும் நான் இதுவரை கற்றுக்கொள்ளவே இல்லை. எப்படி பணத்தை வங்கிக்கணக்கில் சேர்ப்பது என்று தெரியாது. அதைப்பற்றி இதுவரை நான் கவலைப்பட்டதும் இல்லை. என் வங்கிக்கணக்கில் பணம் தீர்ந்துவிட்ட தகவலை என் அப்பாவிடம் சொன்னால் அவர் அடுத்த நாளே பணத்தைப் போட்டுவிடுவார்.

ஷாப்பிங்கும் எனக்கு எளிதாக இருப்பதில்லை. எனக்கு பட்டுத்துணிக்கும் பருத்தித் துணிக்கும் வித்தியாசம் தெரியாது. என்னைவிட வயதான பெண்மணிகளுடன் புடவை, சல்வார்களை வாங்கப் போகும்போதெல்லாம் விநோதமான அனுபவத்தைச் சந்திப்பேன். கடைக்காரர்கள் காட்டுவது அத்தனையும் அருமையாகவும் நன்கு உழைக்கக்கூடியது போலவும் இருக்கும். ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. குறிப்பாக துணிமணிகளைப் பொருத்தவரை மிகவும் சாமர்த்தியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

எனக்கு சமைக்கத் தெரியாது

நான் பசியாக இருக்கும்போது மட்டுமே சமையலறைக்குப் போயிருக்கிறேன். எனக்குச் சமைக்கத் தெரியாது என்று சொல்ல வெட்கப்படுகிறேன். ஓணம் விருந்தில் பரிமாறும் நேந்திரம் வறுவலுக்கு அருகில் இருக்கும் கறியின் பெயரோ, அதன் செய்முறையோ எனக்குத் தெரியாது. மிகவும் ருசியாக இருக்கும் மீன்கறியில் இருக்கும் மீனின் வகையை என்னால் சொல்ல முடியாது.

சமையல் என்பது அருமையான ஒரு கலை. அனுபவத்தில் வரும் ருசி அது. அம்மா எப்போதும் சமையல்கட்டில் உதவிசெய்வதற்கு என்னைக் கூப்பிடுவார். ஆனால் நான் போனதில்லை. எனக்கு உணவு கிடையாது என்று சொன்னால் மட்டும்தான் நான் அங்கே போவேன். வெங்காயத்தின் தோலை உரிப்பதற்கோ பீன்ஸை வெட்டுவதற்கோதான் என்னைக் கூப்பிடுவார். ஆனால் அவர் ஒருபோதும் என்னைக் கட்டாயப்படுத்தியதே இல்லை.

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நான் குடும்பத்தலைவியாக ஆகவேண்டும். சமைக்கவும் செய்யவேண்டும். இதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. நூடுல்ஸ், பிரெட் ஜாம், ஓட்ஸ் மற்றும் கார்ன்ப்ளேக்ஸ் மட்டுமே செய்யத் தெரிந்தவள் தனது மருமகள் என்று தெரிந்தால் மாமியார் என்ன நினைப்பார்கள்? நினைத்துப் பார்க்க எனக்கே வேடிக்கையாக இருக்கிறது.

கரண்ட் கட்டாகிவிட்டால் மெயின் ஸ்விட்ச் பாக்ஸில் போய் சரிபார்க்க எனக்குத் தெரியாது. பல்பு மாட்டத் தெரியாது. ஒரு ஸ்கூட்டர் நடுவழியில் நின்றுவிட்டால் அதைத் திரும்ப கொஞ்ச தூரமாவது ஓடவைப்பதற்கான சாகசங்கள் எதையும் நான் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதை என் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் தியரியாக மட்டுமே படித்திருத்திருக்கிறேன்.

தண்ணீர் வரியை எங்கே கட்டவேண்டும்? பான் கார்டு எதற்கு? என்றும் எனக்குத் தெரியாது. என்னுடன் கல்லூரியில் படித்த சிலர் வடக்கே சில நகரங்களில் வேலைக்கே போய்விட்டார்கள். நான் இதுவரை தமிழ்நாட்டின் தெற்கே உள்ள ஊர்களுக்குக்கூட தனியாகப் போனதில்லை.

ஒரு துணியை சரியான பதத்தில் வாஷிங் இயந்திரத்தில் துவைக்க வேண்டும் என்பதை நான் இன்னும் அறியவில்லை. எந்தத் துணியை கையால் துவைக்கவேண்டும்? எவற்றை இன்னொரு துணியுடன் துவைக்கப் போடக் கூடாது என்றும் தெரியாது.

ஒரு வேலையில் இத்தனை சிக்கல்களா?

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அளவுக்கு எனக்கு முதிர்ச்சி வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. படங்களில் காணப்படும் வில்லன்களைப் போல இருக்கிறார்கள் அவர்கள். ப்ளேஸ்மென்ட் கிடைத்துவிட்டால் மட்டும் போதாது என்பதைப் பின்னரே நான் அறிந்துகொண்டேன். கடுமையான தேர்வுகளும், கற்றல் நடைமுறைகளும் இருக்கும் என்பதும் பிறகுதான் தெரியவந்தது. நான் எனது சீனியர்கள், ஜூனியர்கள் என அனைவருடனும் போராடவேண்டும்.

எனக்கு வாழ்க்கையில் என்னதான் வேண்டும் என்றே தெரியவில்லை. செவ்வக வடிவில் இருக்கும் சிறிய கேபினுக்குள் அமர்ந்து ஐந்து நாட்கள் வேலை செய்யமுடியுமா? எனக்கு சிறு பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பதிலும் சமூகப்பணி செய்வதிலும் ஆர்வம். ஆனால் ஆசிரியராவது குறித்து பேசும்போதெல்லாம் என்னை எம்.டெக். படிப்பை உருப்படியாக முடிக்கச் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை பி.டெக் படிப்பை ஒழுங்காக முடித்தாலே போதுமென்று தோன்றுகிறது.

என்னை அச்சத்துக் குள்ளாக்கி, எனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அத்தனை விஷயங்கள், சூழ்நிலைகளை அப்படியே கடந்து செல்ல முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் எப்போதும் கற்றுக்கொள்வது, கற்றுக்கொள்ளாததைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய விஷயங்களை அதன்போக்கில் ஏற்றுக்கொள்ள நேர்மறையான மனப்போக்குடன் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாம் நம்மிடம் வருகிறது. இதில் எந்த விஷயங்களை எடுத்துக்கொள்வது, விடுப்பது என்று எப்படித் தெரியும்? ஒன்று மோசமானதற்குப் பொருந்திப் போக வேண்டும் அல்லது வாழ்க்கை என்று சொல்லப்படும் இந்தப் பந்தயத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

‘தி இந்து’ ஆங்கிலம் (தமிழில்: ஷங்கர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x