Last Updated : 03 Feb, 2019 10:10 AM

 

Published : 03 Feb 2019 10:10 AM
Last Updated : 03 Feb 2019 10:10 AM

பெண்கள் 360: சாதனைப் பெண்கள்

சாதனைப் பெண்கள்

இந்தியாவின் 70-வது குடியரசு தினவிழாவையொட்டிய அணிவகுப்புகளில் பெண் வீரர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. பெண் அதிகாரிகள் நிகழ்த்திய சாகசங்கள் ஆண் வீரர்களுக்குச் சற்றும் குறையாமல் இருந்தது. இந்திய வரலாற்றில் ஒருபோதும் ஆண் வீரர்களின் அணிவகுப்புகளுக்குப் பெண் அதிகாரிகள் தலைமை தாங்கியதில்லை. ஆனால், இந்த ஆண்டு லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி, ஆண் வீரர்களின் அணிவகுப்புக்குத் தலைமை தாங்கினார். மேலும், அசாமைச் சேர்ந்த பெண்களை மட்டுமே கொண்ட ரைபிள், குழு முதன் முறையாகக் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. இருசக்கர வாகனங்களில் துணிச்சலுடன் செய்யப்பட்ட சாகசங்களிலும் பெண் வீரர்கள் இடம்பெற்றனர். கேப்டன் ஷீக்ஷா சுரபி, மோட்டார் சைக்கிள் மீது நின்றபடியே குடியரசுத் தலைவருக்கு சல்யூட் அடித்தது பாராட்டைப் பெற்றது.

 

எண்ணமும் சொல்லும்

“என்னைப் பற்றி ஊடகத்தில் வெளியான கேலிச் சித்திரம் என்னை வருத்தப் படவைத்தது. ஒன்றைக் கவனித்துப் பாருங்கள். சிவப்பாக இருக்கிற பெண்களை இந்தச் சமுதாயம் இப்படிக் கேலி செய்வதில்லை. நான் ஒழுக்கமான பெண்ணாக இருந்தாலும் மருத்துவராக இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் இவர்கள் என் நிறத்தையும் உருவ அமைப்பையும்தான் கவனிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அநியாயம்?

இவர்கள் இப்படிப் படம் போடுகிற அளவுக்கு நான் ஒன்றும் உருவ அழகில் குறைந்தவள் இல்லை. அடிப்படையில் பெண்களை மதிக்காத இயல்பு கொண்டவர்களால்தான் அப்படியொரு கேலிச் சித்திரத்தை வரைய முடியும். என்னைப் போல வலுவான பின்னணி கொண்டவளையே பெண் என்ற காரணத்தால் இவ்வளவு கேலி பேசினால், பிற பெண்களுக்கு அரசியலுக்கு வர எப்படித் தைரியம் வரும்?”

- தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தமிழக மாநிலத் தலைவர்

 

மதுவுக்கு எதிரான நடைப்பயணம்

கர்நாடகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, 2,500 பெண்கள் நடைப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர். ஜனவரி 19-ல் சித்ரதுர்கா நகரில் இருந்து பயணத்தைத் தொடங்கிய அவர்கள் கடந்த செவ்வாய் அன்று பெங்களூருவை வந்தடைந்தனர். அந்தப் பயணத்தின்போது நீலமங்களா அருகில் வாகனம் மோதி 55 வயது ரேணுகாம்மா மரணம் அடைந்தார். இழப்பின் சோகத்தையும் மீறிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்தப் பெண்கள் அனைவரும் விவசாயப் பின்புலம் கொண்டவர்கள். இவர்கள் அனைவருடைய குடும்பத்தின் நிம்மதியும் அமைதியும் மதுவுக்கு அடிமையான ஆண்களால் சீர்குலைந்துவிட்டது.  மதுவால் சிலர் குடும்பத்தையே இழந்துள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தங்களோடு முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது பொருளாதார நெருக்கடியையும் மீறி அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

குரலற்றவர்களுக்கான குரல்

மெர்சிடஸ் ஸோஸா, இனிமையும் கம்பீரமும் இணைந்து இழையோடும் குரலுக்குச் சொந்தக்காரர். 1935 ஜூலை 9 அன்று அர்ஜெண்டினாவில் பிறந்தார். அந்த நாட்டின் பூர்வீகக் குடியான அய்மர் இனத்தைச் சேர்ந்த ஸோஸாவுக்கு இசை மொழியும் வளமிக்கக் குரலும் பிறவியிலேயே அருளப்பட்டிருந்தன. இசையால் நிறைந்த அவருடைய இனத்தின் பாரம்பரியமே அவரது இசைத் திறனின் ஊற்று.

அவர்களுடைய நாட்டுப்புற இசையில் ஸோஸா திறன்மிக்கவராக விளங்கினார். 15 வயதிலேயே வானொலியில் பாடத் தொடங்கிவிட்டார். 1965-ல் அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைவிழாவில் கலந்துகொண்டது, அவரது வாழ்வை மாற்றியமைத்தது. உலகையே தனது காந்தக் குரலால் கட்டிப்போட்ட அவர் தான்  மறையும்வரை பாடிக்கொண்டே இருந்தார். தான் தொழில்முறைப் பாடகியாக மாறுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்று கூறிய ஸோஸா, 70-க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியியிட்டுள்ளார்.

அர்ஜெண்டினாவின் டாங்கோ, கியூபாவின் மேவோ டுரோவா, பிரேசிலின் போஸ்ஸா நோவா, ராக் என அவரது இசை பரந்துபட்ட தளங்களில் பயணித்தது. உண்மையைப் பயமின்றி உரக்கப் பாடியதற்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘குரலற்றவர்களின் குரல்’ எனப் போற்றப்பட்ட அவர், வாழ்வின் பிற்பகுதியில் யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப் பட்டார். அவரது இசையைக் கொண்டாடும் விதமாகக் கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

ஸோஸாவின் பாடலைக் காண: https://bit.ly/2HIXjSH

 

சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது

chinnapillaijpg

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.சின்னப்பிள்ளை (67), 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகக் கிராமப் புறங்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, 30 ஆண்டுகளாகக் கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றிவருகிறார்.

அவரது சமூக சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் அளித்த விருதுகள் ஏராளம். இவருக்கு 1999-ல் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டபோது அன்றைய பிரதமர் வாஜ்பாய் இவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். தற்போது மத்திய அரசு சின்னப்பிள்ளையை பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

மதுப் பழக்கத்தால் கிராமத்திலிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதால் தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கந்துவட்டிக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர் போராடிவருகிறார். சின்னப்பிள்ளைக்குப் பிடித்த பெண் தலைவரும் முன்மாதிரியும் அவரேதானாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x