Published : 10 Feb 2019 12:52 PM
Last Updated : 10 Feb 2019 12:52 PM
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோரும் இந்தச் சமூக வாழ்வுக்குள் வராதவர்கள் எனச் சமுதாயமும் அரசும் மிகக் கவனமாக நம்பவைக்கின்றன. ஆனால், அது உண்மையா? நம் வாழ்நாளில் இதுபோன்ற பாதிப்புக்குள்ளான குழந்தையையோ அவர்களின் பெற்றோரையோ நாம் நிச்சயம் கடந்துவந்திருப்போம்.
நம்மில் பலர் அவர்களைப் பார்த்ததுமே இரக்கப்பட்டிருக்கலாம் அல்லது கண்டும் காணாததுபோல் ஒதுங்கி நின்றிருக்கலாம். ஆனால், அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்ள என்றேனும் நினைத்திருப்போமா, இதுபோன்ற குழந்தைகளைப் பராமரித்துவரும் பெற்றோரின் நிலை என்ன எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘பேரன்பு’ திரைப்படம்.
பிறந்தது முதலே படுக்கைதான் அபர்ணாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உலகம். தற்போது அவருக்கு 16 வயது. பேசவோ சைகையால் உணர்த்தவோ அவரால் முடியாது. அபர்ணாவுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது வீடும் அம்மாவும் அப்பாவும்தான். அபர்ணாவை உட்காரவைக்க வேண்டும் என்றால்கூட மற்றவர்களின் உதவி தேவை. அப்போதும் கழுத்து நிலையாக நிற்காது. மிக்ஸியில் அரைத்த சாப்பாட்டுக் கூழை வாயில் ஊற்றுகிறார் அவளுடைய அம்மா.
இயற்கை உபாதைகள் எல்லாமே படுக்கையில்தான். ‘‘தற்போது டயபர் இருப்பதால் கொஞ்சம் பரவாயில்லை” என்பதை மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்தார் அபர்ணாவின் அம்மா. ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தை மலம் கழித்தாலே அதைச் சுத்தம் செய்யும்போது சிலர் முகம் சுளிப்பார்கள். ஆனால், 16 ஆண்டுகளாக இதைக் கடமையாகச் செய்துவரும் அபர்ணாவின் அம்மா முகத்தில் எரிச்சலோ வெறுப்போ எதுவுமில்லை.
அபர்ணா பிறந்த பிறகு அவருடைய அம்மா வீட்டு விசேஷம், கோயில் என எங்கும் வெளியே சென்றதில்லை. இவர் மட்டுமல்லாமல் மனவளர்ச்சி குன்றிய பெரும்பான்மைக் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் வாழ்க்கையைப் பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள்ளேயே கழிக்கிறார்கள். குறைபாடு குழந்தைகளுக்குத்தான் என்றால் அவர்களின் நிழலாகத் தொடரும் பெற்றோரும் அந்தக் குழந்தைகளுக்கு நிகரான வாதையை அனுபவிக்கிறார்கள்.
கொல்லும் பார்வைகள்
சென்னை திருவேற்காட்டில் வாடகை வீட்டில் வசித்துவருகிறார் ரத்னா. இவருடைய மகன் சூர்யா பிறந்ததிலிருந்தே மனவளர்ச்சி குன்றியவர். தினக்கூலியான கணவர் கொண்டுவந்து தரும் வருமானத்தில்தான் குடும்பத் தேவைகள் குறைந்தபட்சம் பூர்த்தியாகின்றன. “சூர்யாதான் என்னோட முதல் பையன். அவன் பொறந்ததுல இருந்தே இப்படித்தான் இருக்கான். நான் போகாத ஆஸ்பத்திரி கிடையாது. ஆனால், ஒண்ணுமே நடக்கலை.
முன்னாடியெல்லாம் பிசியோதெரபிக்கு அம்பத்தூர் கூட்டிட்டுப் போவேன். ஒரு நாளைக்கே ஐந்நூறு ரூபாய் ஆகிடும். ஆனால், இப்போ அதுவும் எங்களால முடியல. பாத்ரூம் எல்லாம் அவனே போயிப்பான். ஆனால், அவனால தனியா சாப்பிட முடியாது. ஆள்காட்டி விரலால சாப்பாட்டை உள்ளே தள்ளணும். இதனால் அடிக்கடி இருமல் வரும். சில நேரம் புரையேறும். இவனை மாதிரியான குழந்தையைப் பார்த்துகிறது கஷ்டம்தான்.
ஆனா, நாலு பேரு நம்மள பாக்கிற விதம்தான் அதைவிடக் கொடுமை. என்னோட குழந்தை இப்படி இருப்பதால நிறையப் பேர் வாடகைக்குக்கூட வீடு தர யோசிக்கிறாங்க. அதுதான் எங்களுக்குக் கஷ்டமா இருக்கு. எங்க கஷ்டத்தைப் புரிஞ்சு யாராவது உதவ மாட்டாங்களான்னு நான் வேதனைப்படாத நாள் இல்லை” என்று சொல்லும்போது அவரது குரல் உடைகிறது.
மூன்றாயிரம் காரணங்கள்
மூளை முடக்குவாதம், ஆட்டிசம், டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகள் வருவதற்கு மூன்றாயிரம் காரணங்கள் உள்ளன என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை முறை இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.
“உறவு முறையில் திருமணம், மரபணுக் கோளாறு, கர்ப்பகாலத்தின்போது பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல் ஆரோக்கியம் போன்ற பல காரணங்கள் இதுபோன்ற குறைபாட்டுக்குக் காரணமாகலாம். ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சியைக் கருவில் இருக்கும்போதே கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால், மூளை செயல்பாடு பற்றிக் கண்டுபிடிக்க முடியாது. மூளையில் ஒரு விஷயத்தைப் பதிவு செய்துகொள்வது, பதிவுசெய்ததை நினைவில் வைத்துக்கொள்வது, நினைவில் உள்ளவற்றை வெளிப் படுத்துவது போன்ற வற்றை முழுமை யாகச் செயல்படுத்த இயலாதவர்களே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்.” என்கிறார் குழந்தை நல மருத்துவர் வெங்கடரமணி.
எங்களுக்குப் பிறகு யார்?
“என்னோட குழந்தை பாரதிக்கு மனவளர்ச்சி குறைவு. ஆனால், அதைப் பெரும் வேதனையாக உணரவைத்தது யார்? அவனைப் பார்த்துக்கொள்வதில் உள்ள கஷ்டங்களைத் தாண்டி எங்களுக்குப் பிறகு இதுபோன்ற குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்பதுதான் சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் பல பெற்றோரின் மனத்தில் தோன்றும் கேள்வி. இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்புப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து அரசு சார்ந்து ஈஞ்சம்பாக்கம், கே.கே. நகர் தவிர சென்னையில் வேறு எங்கும் சிறப்புக் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகள் கிடையாது. பொதுவாக, இதுபோன்ற குழந்தைகளில் பெரும்பாலானோருக்குக் கண்விழி ஓரிடத்தில் நிலையாக இருக்காது. இதனாலேயே என் மகனுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முடியவில்லை. அவனுக்கு ஆதார் கார்டுகூட இல்லை. இப்படி ஒரு குழந்தை இந்த நாட்டில் இருந்தது என்பதற்கான எந்த அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை” என்கிறார் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அன்பரசு.
கிடைக்காத ஊக்கத்தொகை
சென்னை எல்லீஸ்புரத்தில் வசித்துவரும் ராஜேஸ்வரி, வீட்டுவேலை செய்கிறார். காலையில் வேலைக்குச் சென்றால் வீடு திரும்ப இரவாகிவிடும். இவருடைய மகன் மனோகருக்கு 40 வயதாகிறது. மனோகர் பெரும்பாலும் அருகிலிருக்கும் அக்கா வீட்டுக்குச் செல்வார் அல்லது வீட்டில் தனியாக இருப்பார். அவருக்குக் கடந்த ஒரு வருடமாக வழங்கப்பட்டு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவனுக்கு உதவித் தொகையை நிறுத்திட்டாங்க. இந்த உதவித்தொகை வாங்க எத்தனைவாட்டி தாசில்தார் ஆபீஸுக்கு அலைஞ்சேன்னு கணக்கேயில்லை. எப்போ கேட்டாலும் இன்னைக்கு நாளைக்குன்னு சொல்லுறாங்க. என்னோட காலம்வரைக்கும் இவனைக் காப்பத்திட்டேன். அதுக்கு அப்புறம் ஆண்டவன் விட்ட வழிதான்” எனக் கூறும்போது கண்கள் கசிகின்றன அவருக்கு.
“இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் நிலை விவரிக்க முடியாதது. வலியும் வேதனையும் நிறைந்தது. இந்தக் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் தேவைப்படுவது சமூகத்தின் அரவணைப்புதான். பல தனியார் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் பணியாக எடுத்துக்கொண்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில் கவனம் செலுத்த வேண்டும். கோயில்களுக்குத் தரும் நன்கொடை, அன்னதானத்தைவிட இதுபோன்ற சேவையில்தான் தெய்வீகத்தன்மை நிறைந்துள்ளது” என்கிறார் மருத்துவர் வெங்கடரமணி.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துத்தான் பயப்படுகிறார்கள். அதனால்தான் பெரும்பாலான பெற்றோர் தாங்கள் உயிரோடு இருக்கும்போதே இத்தனை வருடங்கள் பொத்தி வளர்த்த குழந்தை இறக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நினைப்பை அவர்கள் வளர்த்துக்கொள்ளக் காரணம் என்ன? பதிலைத் தேடுவோம்; மாற்றத்தை விதைப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT