Last Updated : 10 Feb, 2019 12:24 PM

 

Published : 10 Feb 2019 12:24 PM
Last Updated : 10 Feb 2019 12:24 PM

வண்ணங்கள் ஏழு 41: பரிதாபம் வேண்டாம், உரிமை கொடுங்கள்

ஒளிப்படம் எடுப்பது, திரைக்கதை எழுதுவது, நடிப்பு, பேச்சு, பத்திரிகைகளுக்கு எழுதுவது,  புதிது புதிதாகச் சமைப்பது எனப் பலவற்றில் ஆர்வமுள்ளவராக விளங்கும் நளினா பிரஷிதாவுக்கு அழகுக் கலை நிபுணர் என்ற அடையாளமும் உண்டு.

திண்டுக்கல்லைச் சேர்ந்த தங்கராஜ் - முருகேஸ்வரி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். 11-ம் வகுப்பு படித்தபோதே முழுமையான அறுவை சிகிச்சைக்குப் பின் நளினாவாக மாறினார். முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை வகுப்பில் முதலாவது மாணவனாக விளங்கினார். குடும்பத்தின் புறக்கணிப்பால் பெங்களூருவுக்குச் சென்றவர் சில காலம் கழித்து, படிப்பைத் தொடர்வதற்காக சென்னைக்கு வந்தார். “படிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

எப்படியாவது பிளஸ் டூ தேர்வு எழுதி, அதன்பின் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று பல கனவுகளோடு சென்னைக்கு வந்தேன்.  பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டது. அதில் இருந்த பெயரும் தற்போது இருக்கும் பெண் பெயரும் வேறாக இருப்பதால், அதைப் பெறுவதற்கு நிறைய அலைய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அதற்கே ஆனது. அதன்பின் பிளஸ் டூ நேரடியாக எழுதி தேர்ச்சி பெற்றேன்.

லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால், அதற்காக முயன்றபோதுதான் கல்லூரியில் தேர்வு நடந்துகொண்டிருந்தது. எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல்கூட எனக்குப் பிடிபடவில்லை. இப்படியே ஒரு வருடம் முடிந்தது. அடுத்த வருடத்தில் மீண்டும் விண்ணப்பித்தேன்.

காளீஸ்வரன் சார் மூலமாக எனக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் அழகுக் கலை நிபுணர் பயிற்சியை முடித்திருந்ததால், அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்தேன்” என்று சொல்லும் நளினாவுக்குக் கல்லூரியில் சக மாணவர்களிடமிருந்தும் உடனடியாக ஆதரவும் அரவணைப்பும் கிடைத்து விடவில்லை. சேர்ந்த முதல் வருடத்தில் எந்தப் பாடத்திலும் நளினாவால் வெற்றிபெற முடியவில்லை.

அறிமுகப்படுத்திய வெற்றி

“மனரீதியாக மிகவும் சோர்வாக இருந்த என்னை, கல்லூரியின் பேராசிரியர்கள் அன்புட னும் ஆதரவுடனும் வழிநடத்தினர். படிப்பதில் கவனம் செலுத்தினால் நட்பும் உறவும் தானாக நம்மிடம் வந்து சேரும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு முழுமூச்சாகப் படித்தேன். இரண்டாவது ஆண்டில் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்தேன்.

அதோடு, முதல் ஆண்டின் சில பாடங்களையும் சேர்த்து முடித்தேன். தோல்வியால் சுருண்டுவிடாமல் படித்து வெற்றிபெற்றதால், உடன் படிப்பவர்கள் என்னைப் புரிந்து கொண்டு நட்புக்கரம் நீட்டினர்” என்று தான் மீண்டெழுந்த கதையைப் பகிர்ந்துகொண்டார்.

சிறந்த மாணவி

லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. விஸ்காம் பட்டத்தைப் பெறும் சிறந்த திருநங்கை மாணவியாக நளினா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். படிக்கும்போதே வார இதழ் ஒன்றில் பயிற்சி மாணவியாகப் பங்கேற்று, திருநங்கைகள் சமூகத்துக்கு ஆதரவான கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். உடன் படிக்கும் நண்பர்கள், தன்னுடைய சீனியர்கள் எடுக்கும் விளம்பரப் படங்களிலும் இணையத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

“ஊடகங்கள் திருநங்கைகளைக் கேலியாகப் பார்க்கின்றன. இல்லாவிட்டால், பரிதாபமான பிம்பத்தைக் காட்டுகின்றன. எங்களுக்கு வேண்டியது உரிமையே தவிர பரிதாபம் அல்ல” என்று சொல்லும் நளினா, மாற்றுப் பாலினத்தவர்களைச் சமூகத்துக்கு அடையாளப் படுத்தும் வகையிலான யூடியூப் சேனலைத் தொடங்க விருப்பதாகச் சொல்கிறார். மாற்றுப் பாலினத்தவர் குறித்துப் பல்வேறு கோணங்களில் குறும்படங்கள் எடுக்கும் யோசனையிலும் இருக்கிறார் நளினா.

முக்கியமான மூன்று பேர்

தற்போது லயோலா கல்லூரியிலேயே எம்.எஸ்சி. விஸ்காம் படித்துவரும் நளினா, தன் வாழ்க்கையில் மூன்று பேர் மிகவும் முக்கிய மானவர்கள் என்கிறார்.

“எங்கள் கல்லூரியின் ஜேக்கப் சார் பலருக்கு உதவி செய்தவர். ஒருமுறை அவருடைய பிறந்தநாளின்போது, பலரும் பரிசுப் பொருட்களுடன் கூடியிருந்தனர். என் கையில் அவருக்குக் கொடுப்பதற்கு எந்தப் பரிசும் இல்லை. நிற்பவர்களுக்கு இடையில் என்னை மறைத்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது அங்கு வந்த ஃபாதர் ஜேக்கப்,  ‘வாம்மா நளினா.. ஏன் அங்கேயே நின்னுட்டே. முன்னாடி வா’ என்று அழைத்தார். அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை.

இந்த நான்கு வருடமாக என்னைத் தன்னுடைய மகளாகப் பார்த்துக்கொள்பவர்கள் ஜெயா அக்காவும் அவருடைய கணவர் சுரேஷும்தான். எங்களுக்கு நீயும் ஒரு குழந்தைதான் என்று சொல்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் வசதியானவர்கள் கிடையாது. அவர்களோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், அவர்கள் என்னை விட்டுத்தரவே மாட்டார்கள். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அவர்களின் அன்புக்கு ஈடே இல்லை.

‘உன்னால் முடியும், என்று எனக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறுபவர் எங்கள் கல்லூரியின் பேராசிரியர் சைமன் சார். இந்த மூவரையும் என் வாழ்க்கையில்  முக்கியமானவர்களாக நினைக்கிறேன்” என்கிறார் நளினா.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x