Last Updated : 13 Jan, 2019 12:27 PM

 

Published : 13 Jan 2019 12:27 PM
Last Updated : 13 Jan 2019 12:27 PM

கொண்டாட்டம்: எங்கே அந்த ஊர் பொங்கல்?

பொங்கல் நாள்தான் விவசாயிகளுக்கு வருசப் பிறப்பு. வருசப் பிறப்பு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னாலேயே நிலம் உள்ளவர்கள் பழைய கூரையைப் பிரித்துவிட்டுப் புது கம்பந்தட்டை, புது சோளத்தட்டை என்று புதிதாக வேய, பிஞ்சை நிலம் இல்லாதவர்கள் பனை ஓலையாலும் மலையிலிருந்து அறுத்துக் கொண்டுவரும் தரகுப் புற்களாலும் கூரையை வேய்ந்துவிடுவார்கள்.

கருதறுத்த தட்டை, தாள்களைக் கால்நடைகளுக்காக வீட்டுக் கொல்லைப்புறத்தில் படப்பாக ஆண்கள் அடுக்கிவிடுவார்கள். புதுக் கூரை, புதுத் தவசம், புதுசாகத் தீவனமும் அடுக்கியிருப்பதால் அந்தக் கிராமமே புது வாசம் வீசும். அந்த வாசத்தில் மண் வாசமும் நிறைந்திருக்கும்.

பொங்கலுக்கு முதல்நாள் யாருக்கும் விடிய விடிய உறக்கமிருக்காது. இளவட்டங்கள் வீடுகளையெல்லாம் வெள்ளையடிக்க, வெள்ளை யடித்த சுவர்களில் குமரிகள் செம்மண் கோலமிட்டு அழகுபடுத்துவார்கள். பழைய மண்பானைகள், ஆப்பை, துடுப்பு, பழைய துணிமணிகள் எல்லாவற்றையும் ஓடையில் கொண்டுபோய்ப் பெண்கள் எரித்து விட்டு வருவார்கள். ஆனால், மரத்தாலான உப்பு மரவையை மட்டும் எரிக்க மாட்டார்கள். உப்பு மரவையை எரித்தால் வீட்டிலுள்ள சீதேவியும் அதோடு போய்விடுமாம்.

ஆண்கள் பெரிய பெரிய குந்தாணிகளை உருட்டிக்கொண்டு வந்து மந்தையில் போடுவார்கள். நாளைய தினம் பொங்கல் வைப்பதற்காகப் புதுப்பானையிலிருக்கும் நெல்லைக் கொண்டுவந்து குந்தாணியிலிட்டுக் குமரிகள் குத்த, நடுத்தரப் பெண்கள் அந்த நெல்லைப் புடைத்து அரிசியாக்குவார்கள்.

கிழவிகள் பொங்கலுக்காகப் புடைத்த நெல் உமி யார் காலிலும் பட்டுவிடக் கூடாதென்பதற்காக ஒன்றாகக் கூட்டித் தீயிட்டு எரிப்பார்கள். எரித்த சாம்பலை ஒரு பொட்டியில் பத்திரமாக அள்ளி வைப்பார்கள். மறுமுறை நெல் விதைக்கும்போது இந்தச் சாம்பலைக் கொண்டுபோய் ஒவ்வொரு வயலிலும் சிதறிவிட்டு வருவார்கள். அப்படிச் செய்தால் வெள்ளாமை நன்றாக விளையுமாம்.

பொலிவு பெற்ற வீடு

ஆண்கள் ஏற்கெனவே பிடுங்கி வைத்த கண்ணு பீளைச் செடியோடு மாவிலை, கம்பந்தட்டையை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் பசும்புல், நாத்து, ஆமணக்குக் குழை என்று அறுத்துக்கொண்டு வருவார்கள். பொங்கல் நாளுக்காகவே அவற்றை வைத்திருப்பார்கள்.

குமரிகள் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து பெரிய, பெரிய புள்ளிக் கோலங்களைப் போட்டு செம்மண் கோலமிட்டு, கூரைகளில் படர்ந்து பூத்திருக்கும் மஞ்சள் பூசணிப் பூக்களைப் பறித்து, கோலங்களில் நடுவில்வைக்க, வாசலே பூந்தோட்டமாக மாறி கண்ணைப் பறிக்கும்.

முதல் பொங்கல்

முதலில்  ஊர் அம்மனுக்குத்தான் பொங்கல் பானை. ஏழெட்டுப்படி (பத்து கிலோ) வேகும் வெங்கலப் பானையை ஊர் பொதுவில் வாங்கி வைத்திருப்பார்கள். அது குமரிகள் தேய்ப்பில் பொன்னாக மின்னும். அம்மன் கோயிலுக்கு முன்னால் பெரியவர்கள் கோளாறு சொல்ல, இளவட்டங்கள் அடுப்புக்கூட்ட, இரண்டு மூன்று குமரிகள் சேர்ந்து பானையைத் தூக்கிவந்து அடுப்பில் வைக்க, இரண்டு பெண்கள் துவரம் பயறையோ பருத்திமார் கட்டையோ தூக்கிவந்து போடுவார்கள். ஒரே விறகில்தான் பொங்கல் வைக்க வேண்டும். எல்லா வீடுகளிலும் மாடுகள் இருப்பதால் எல்லோரும் ஒவ்வொரு செம்பிலும் பால், நெய் என்று கொண்டுவருவார்கள்.

kondattam-2jpgright

சூரியனுக்கே சிறப்பு

தோட்டங்களில் விளைவதால் தோகை கொண்ட கரும்புகள் ஒருபுறம் குவிந்து கிடக்கும். பிஞ்சைகளுக்குக் கண்ணுபீளைச் செடிகளைக் கட்டப் போனவர்களும் ஏர் கலப்பையில், மாட்டுவண்டியில், இறைக்கும் கமலையில் என்று எல்லாவற்றுக்கும் மாவிலையோடு கட்டி முடித்தவர்களும் வந்துசேர பொங்கல் பானை பொங்குவதற்குத் தயாராக இருக்கும்.

பொங்கலில் அரிசியைப் போடும்போது, பெண்கள் ஒன்றுசேர்ந்து குலவை போடுவார்கள்.

சுமங்கலிகள் பொங்கல் வைத்து இறக்கும் நேரமும் கிழக்கு வானில் செந்நிறப் பட்டுடுத்திச் சூரியன் புறப்பட்டு வரவும் சரியாக இருக்கும். முதல் பொங்கலின் சிறப்பு சூரியனுக்குத்தான். அதன்பிறகு அம்மனைப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பிறகுதான் மற்றவர்கள் எல்லோருக்கும்.

எல்லா நாளும் இருக்காதா?

மறுநாள் மாட்டுப் பொங்கல். மாடுகள் கட்டிய தொழுக்களில்தான் இந்தப் பொங்கலை வைப்பார்கள். அது மாடுகளுக்கு மட்டுமல்ல; கலப்பையிலிருந்து விவசாயத்துக்குப் பயன்படும் அத்தனை பொருட்களுக்கும்தான். மாடுகளின் உடம்புகளில் குங்குமப் பொட்டு, கொம்புகளுக்கு வர்ணம், கழுத்து மணிகளுக்குச் சந்தனம் என்று வைப்பதோடு கலப்பையிலிருந்து மண்வெட்டிவரை குங்குமப் பொட்டுதான்.

அன்றைய நாட்களில் வீட்டுக்கு வீடு உலை வைப்பது கிடையாது. ஊரே சேர்ந்து சோறாக்கி, குழம்பு வைத்து தெருக்களில் வாழையிலை விரித்து விருந்து படைப்பார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும் மந்தையில் ஒன்றுதிரள, நிலவு வெளிச்சத்தில் விதவிதமான விளையாட்டுகள்தாம். பெரியவர்களும் இதில் மண் தட்டி ஓடுவார்கள். பெண்கள் கும்மி அடிப்பார்கள்.

முந்திச் சுருட்டி விளையாடுவார்கள். குமரிகளும் இளவட்டங்களும் விளையாடுவதுபோல் நடிக்க, குழந்தைகள் மட்டும் விடியும் நாளெல்லாம் பொங்கல் நாளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தோடு கரும்பைத் தின்றுகொண்டிருப்பார்கள்.

‘இந்து தமிழ்' பொங்கல் மலர் 2019-ல் இன்னும் பல சுவாரசியமான கட்டுரைகளை விரிவாக வாசிக்கலாம். விலை ரூ.120

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x