Last Updated : 28 Jan, 2019 01:01 PM

 

Published : 28 Jan 2019 01:01 PM
Last Updated : 28 Jan 2019 01:01 PM

வண்ணங்கள் ஏழு 39: சாதிப்பதுதான் பதில்!

மஸில்மேனியா இந்தியா (Musclemania India) சார்பாக ஆண்டுதோறும் நடக்கும் ஆணழகன் போட்டி அது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ஆர்யன் பாஷா. “நான் இந்தப் போட்டியில் ஜெயிப்பேன் என்று சத்தியமாக நினைக்கவில்லை. இந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டு, நான் திருநம்பி என்பதை இந்த உலகத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். அந்த லட்சியத்துக்காகவே கடுமை யாகப் பயிற்சி செய்தேன். இந்தப் போட்டிக்காக நான் செய்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் பலன்தான் இந்தப் பரிசு!” என்றார்.

பெண்ணாகப் பிறந்து திருநம்பியாக மாறிய ஆர்யன் பாஷா, ஆண்களுக்கான பாடிபில்டிங் பிரிவில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது, ஒரே இரவில் இந்தியா முழுமைக்கும் அவரை அறிமுகப்படுத்தியது.

கல்லூரியில் படித்தபோது ஒல்லியான உடலைக் கொஞ்சமாவது தேற்றத்தான் ஜிம்முக்குப் போயிருக்கிறார் ஆர்யன். நாளடைவில் அதில் மனம் ஒன்றிவிடவே முழுமூச்சாக பாடிபில்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஒருநாளைக்கு ஆறு மணி நேரம் வரை நீடித்த அவரின் பயிற்சியைக் கண்டு வியந்த நண்பர்களும் அவருக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர்களும் மஸில்மேனியா போட்டியில் பங்கேற்கும்படி அவரை ஊக்குவித்தனர்.

ஹார்மோன் பற்றாக்குறை

ஒருபக்கம் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்த அதே நேரம், பாலின மாற்று சிகிச்சைக்கான மருந்துகளையும் அவர் சாப்பிட்டுவந்தார். சராசரியாக ஆண்களுக்குச் சுரக்கும் அளவைவிட டெஸ்டோஸ்டிரான் அவருக்குக் குறைவாகவே சுரக்கும். அதோடு கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான சக்தியை அது ஈடுசெய்யாது. ஏற்கெனவே சிகிச்சைக்காக (21 நாட்களுக்கு ஒரு ஷாட்) டெஸ்டோஸ்டிரான் அவசியம் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

மஸில்மேனியா பாடிபில்டிங் போட்டி எந்த விதமான ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள் ளாத வீரர்களுக்கு நடத்தப்படும் போட்டி என்பதால், சிகிச்சைக் காக டெஸ்ட்டோஸ்டிரான் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதைப் போட்டி அமைப்பாளர்களிடம் ஆர்யன் தெரிவித்திருக்கிறார். அமைப்பாளர்களும் போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்னதாக டெஸ்ட்டோஸ்டிரானை எடுத்துக்கொள்ளாமல் அவர் போட்டியில் ஈடுபடுவதற்கு அனுமதியை வழங்கினர்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு!

சினிமாவில் ‘இன்டர்வெல் பிளாக்’கில் எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என்று கதாநாயகன் சொல்வதைப்போல, ஆர்யன் பாஷாவுக்கு இன்னொரு பெயர் இருந்திருக்கிறது. அது அவர் பெண் குழந்தையாக இருந்தபோது, அவரின் பெற்றோர் வைத்த பெயரான நைலா.

நைலாவுக்கு அப்போது ஆறு வயது. மற்ற சிறுமிகளைப் போல் சீருடையான ஸ்கர்டை அணிந்துகொண்டு பள்ளிக்குப் போவதற்கு அவளுக்குப்  பிடிக்கவில்லை. பையன்களைப் போல சட்டையும் டிராயரும் அணிந்து கொண்டுதான் பள்ளிக்குப் போவேன் என்று அடம்பிடித்தி ருக்கிறாள். அந்த வயதிலேயே தன்னுள் இருக்கும் பையனை நைலா அடையாளம் கண்டுவிட்டாள்.

சறுக்கிய கனவு

நைலா அபாரமான ஸ்கேட்டிங் விளையாட்டு வீரராக மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல போட்டிகளில் வெற்றி பெற்றுவந்தாலும், ஒவ்வொரு போட்டியிலும் ‘பெண்’ எனும் பிரிவின் கீழ் இடம்பெற வேண்டியிருக்கிறதே என்று வருந்தினார் நைலா. ஒவ்வொரு போட்டியின் போதும் ஆண்கள் பிரிவில் போட்டியிட விரும்புவதாக ஆசிரியர்களிடம் மல்லுக்கட்டியது தான் மிச்சம்.

“உன்னை எப்படி ஆண்கள் பிரிவில் போட்டி போடுவதற்கு அனுமதிக்க முடியும் பெண்ணே... நாட்டி கேர்ள்..!” என்று நைலாவின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து அனுப்பிவிடுவார்கள். இப்படியே ஒவ்வோர் ஆண்டிலும் வென்று இறுதியில் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கு பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண் எனும் பாலின அடையாளத்தோடு அதில் பங்கெடுக்க நைலா விரும்பவில்லை.

டெல்லியில் பாரம்பரியமான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் நைலா. ஆறு வயதானபோது, அவரின் பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். சில காலம் தன் மாமா வீட்டில் வளர்ந்த நைலா, தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டபின் மீண்டும் குடும்பத்தோடு வளர்ந்தார். குடும்பத்தில் யாரும் அவரின் பையன் போன்ற நடவடிக்கைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், நைலாவின் சித்தி அவரின் உடல் மொழி, நடை, பழகும்விதம், திடீரென்று தனிமையில் மூழ்கிவிடுவது, திடீரென்று வெளிப்படும் கோபம், மூர்க்கம் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். ஒவ்வொரு முறையும் நைலா ஆண் தன்மையோடு நடந்துகொள்ளும் போதெல்லாம் அவரிடம், “நீ ஒரு பெண். இப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது” என்று யாராவது அறிவுரை சொல்லியபடி இருந்தனர்.

ஆனால், அந்த அறிவுரைகள் நைலாவை மேலும் ஆத்திரப்படுத்தவே உதவின. ஆறு வயதில் நைலாவுக்குத் தோன்றிய உணர்வுப் போராட்டம் அவரின் 16 வயதில் உச்சத்தை அடைந்தது. இந்த நேரத்தில்தான் அவருடைய சித்தியின் பாசமான புரிதலுடன் கூடிய அணுகுமுறை அவருக்குப் பலவற்றைப் புரியவைத்தது.

சித்தியால் கிடைத்த புரிதல்

நைலாவின் சித்திதான் அவருக்குத் திருநர்களைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்தினார். பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கும் ஒருவரின் உடலுக்கும் உணர்வுக்கும் இடையேயான போராட்டத்தைப் பற்றிய தெளிவைப் புத்தகங்களின் வழியாகவும் ஆவணப்படங்கள், குறும்படங்களின் வழியாகவும் நைலா உணர்ந்துகொள்ள உதவினார். அதோடு குடும்ப உறுப்பினர்களுக்கும் புரியவைத்தார். கூடவே, நைலாவின் நிலையையும் தவிப்பையும் எடுத்துச் சொன்னார்.

பொதுவாகவே குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களுக்கு இதெல்லாம் புரியாது, பிடிக்காது என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் நைலாவின் நிலையைக் கேள்விப்பட்டவுடன், “என்னுடைய பேத்தியின் மகிழ்ச்சியைப் பற்றிதான் நான் அதிகம் யோசித்துவந்தேன். இப்போது எனக்குப் பேரனும் கிடைத்துவிட்டான்” என்று நைலாவின் உணர்வுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தார் அவருடைய தாத்தா.

தேர்வை எழுதவிடாத கிண்டல்கள்

நைலாவின் டாம்பாய் தோற்றத்தை அவரோடு பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் ஏகத்துக்கும் கிண்டல் செய்துள்ளனர். அவரைப் பாலியல் வல்லுறவு செய்யவும் முயன்றனர். தினம் தினம் தொடர்ந்த இந்தப் போராட்டங்களால் பிளஸ் டூ தேர்வையே எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

18 வயதில் குடும்பத்தினர் சம்மதத்தோடும் ஆதரவோடும் அவருக்குப் பலகட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தன. அதன்பின் நைலா, ஆர்யன் பாஷா ஆனார். அரசு ஆவணங்களிலும் அவரது பாலின மாற்றத்தை முறையாகப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் களைப் பெற்றார். ஆனாலும், அவரது பாலின மாற்றத்தைக் காரணம்காட்டி,  டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின், மும்பை ரிஸ்வி சட்டக் கல்லூரியில் படித்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்றவுடன்

‘மார்க்’ என்னும் மாற்றுப் பாலினத்தவருக்கான தன்னார்வ அமைப்பில் இணைந்து எல்.ஜி.பி.டி. மக்களுக்கான நலப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். 25 வயதில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளித்து தன்னுடைய பாலின அடையாளத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.

“நம்மைப் பலவீனமாக நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டாம். சாதித்துக் காட்டினாலே போதும். அதுதான் அவர்களுக்கான பதில்” என்பதே தன்னுடைய மாற்றுப் பாலினத் தோழமைகளுக்கு இவர் விடுக்கும் செய்தி!

நீங்கள் மாற்றுப் பாலின பாடிபில்டரா?

சர்வதேச பாடி பில்டிங் அசோசியேஷன் நடத்தும் போட்டியில் இடம்பெற, அதற்கான தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் பங்கெடுக்கும் ஐ.பி.எஃப்.எஃப். இந்தியா பாடிபில்டிங் போட்டியை ஆர்வின் பாஷா ஒருங்கிணைத்து நடத்தவிருக்கிறார் இதன் செயற்குழுவில் தமிழகத்தை சேர்ந்த இடையிலிங்க நபரான கோபி ஷங்கரும் உள்ளார், இந்த வருடம் மார்ச் மாதம் புது டெல்லியின் தி லலித் ஓட்டலில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியாவில் இருக்கும் மாற்றுப் பாலினத்தவரும் இடம்பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு : ibffindia.com

 

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x