Last Updated : 29 Sep, 2014 12:34 PM

 

Published : 29 Sep 2014 12:34 PM
Last Updated : 29 Sep 2014 12:34 PM

அநியாயங்களைத் தட்டி கேட்கும் பெண்கள் படை

ஆண்களே அனைத்தையும் நிர்ணயிக்கும் இந்த உலகில், சக மனுஷியாய்த் தனக்கு இருக்கும் உரிமைகளை எத்தனை நாளைக்குத்தான் பெண்கள் விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பது.

கல்வியிலும் வளர்ச்சியிலும் பின்தங்கியவர்களாக அறியப்படும் உத்தரப்பிரதேச பெண்கள், இதில் மாற்றத்தைக் கொண்டுவந்து நாட்டுக்கே வழிகாட்டுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தின் பூந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ரோஸ் நிறச் சேலை அணிந்து கம்பு ஏந்தி, ஒரு அமைப்பையே தொடங்கி விட்டனர். இன்றைக்கு உலகப் புகழ்பெற்றுவிட்ட அந்தப் பெண்கள் குழுவின் பெயர் ‘குலாபி கேங்’. இந்த அமைப்பை மையமாக வைத்து மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா நடிப்பில் 'குலாப் கேங்' என்ற இந்தி சினிமாவும் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது.

ரோஸ் பெண்கள்

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள பூந்தேல்கண்ட் பகுதியில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்கள் வாழும் ஒரு பகுதியும் அடக்கம். இந்தியாவிலேயே மிகவும் வறட்சிப் பகுதியான இங்கு வாழும் மக்களின் கல்வித் தரமும் வறட்சியானதே.

வேலையில்லா திண்டாட்டம் அதிகம். தேர்தல் நேரத்திலும்கூட அரசியல்வாதிகள் வருவதில்லை. இப்படி அனைத்து வகைகளிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே பூந்தேல்கண்ட் இருந்து வருகிறது.

இந்தப் பகுதியில் உழைத்துச் சம்பாதிக்காமல் காசுக்காக மனைவிக்குத் தொல்லை கொடுக்கும் கணவன், குடித்துவிட்டு மனைவி, குழந்தைகளை அடிப்பவன், வரதட்சிணை கொடுமை செய்யும் மாமியார்-மாமனார், காதலித்துக் கைவிட்ட காதலன் போன்ற குடும்பப் பிரச்சினைகள்; நிலப்பட்டா தர லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், கிடைக்காத நிவாரண உதவிகள், புகார்களைப் பதிவு செய்யாத போலீஸ் என அரசு அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள்; குலாபி கேங் பெண்களிடம் இப்படிக் குடும்பம் சார்ந்தும், வெளி உலகம் சார்ந்தும் புகார்கள் வந்தால், நியாயம் பெற்றுத்தரப் போராட்டத்தில் இறங்கி விடுகிறார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் ரோஸ் நிறச் சேலை அணிந்து, கம்புகளுடன் ஆஜராகி விடுகிறார்கள்.

‘பெண்ணிடம் மோதினால்! சுக்கு நூறாவார்கள்!’

ஒவ்வொரு கிராமமாகப் போவோம்!

குலாபி கேங் உருவாக்குவோம்!

புதிய சுதந்திரம் பெறுவோம்!

‘குலாபி கேங்! ஜிந்தாபாத்!’

என இந்தியில் அதிரும் கோஷங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசு அதிகாரிகளும் குலாபி கேங்குக்கு தலைவணங்குகிறார்கள். 25 வருடங்களாகச் செயல்பட்டு வரும் இந்தக் குலாபி கேங்கின் நிறுவனர், தலைவி சம்பத் பால் (54). இவர்தான் இங்கே தலைமை கமாண்டர். உத்தரப்பிரதேசத்தின் பண்டாவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள அட்டரா எனும் சிறிய ஊரில் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது.

ஏன் இரண்டாம்பட்சம்?

‘‘சிறு வயது முதல் போராட்டக் குணம் கொண்டவள் நான். ‘எப்போது பார்த்தாலும் என்னை மட்டும் வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, அண்ணனை மட்டும் ஏன் வெளியில் அனுப்புகிறீர்கள்?’ என பெற்றோரிடம் போராடினேன்.

ஆறாம் வகுப்புவரை படித்த எனக்கு, 12 வயதானவுடன் மணமுடித்து அருகிலுள்ள வேறொரு கிராமத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள். சில நாட்கள் கழிந்த பின்னர்தான், நான் இருப்பது மாமியார் வீடு என்பதே எனக்குத் தெரிந்தது.

முகத்தை மறைத்தபடியே இருக்க வேண்டும். சத்தம் போட்டுப் பேசக் கூடாது எனப் புகுந்த வீட்டில், பிறந்த வீட்டைவிட நிறைய கொடுமைகளை அனுபவித்தேன். எனக்கு ஒரு குழந்தை பிறக்கும்வரை பொறுத்திருந்த பிறகு, எதிர்க் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டேன்.

புதிய வரலாறு

அந்தக் கிராமத்துப் பெண்களுக்கான பிரச்சினைகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தலையிடத் தொடங்கினேன். ஒரு தலித் வீட்டில் நான் சாப்பிட்டதைக் கேள்விப்பட்டு, என் மாமியார் வீட்டார் ஒதுக்கி வைத்தனர். ஆனால், எனது கணவர் ராம்பிரசாத் பால் எனக்கு ஆதரவாக இருந்து, தைரியம் கொடுத்தார். பெண்கள் சுயமாகச் சம்பாதிப்பதே இதற்கு விடிவு தரும் என்ற முடிவுக்கு வந்தேன்.

பிறகு, அரசு உதவிகளின் மூலம் பெண்களுக்குச் சுயதொழில் வேலைவாய்ப்பு பெற்றுத் தர முனைந்தேன். அங்கும் லஞ்ச, லாவண்யம் தலை விரித்தாடியது. அதற்கும் ஒரு முடிவு கட்டுவது எப்படி என்று வந்த யோசனையால் பெண்களை ஒன்றுபடுத்திப் போராட முடிவு எடுத்தேன்.

இதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதற்காக ரோஸ் நிறச் சேலை அணிந்தேன்" என வரலாற்றுச் சுருக்கம் தருகிறார் சம்பத் பால்.

முதல் போராட்டம்

முதல் வேலையாக அட்டராவில் மோசமான நிலையில் இருந்த முக்கியச் சாலையைச் சீரமைக்கும் பணியைக் கையில் எடுத்தார்கள். நூறு பெண்களைத் திரட்டிச் சென்று மாவட்டக் கலெக்டரை, அழுத்தமாக வலியுறுத்தி நேரில் அழைத்து வந்தார்கள். மூன்று கி.மீ. தூரம் நடந்து பார்த்த அவர், சாலையைச் சீரமைக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால், லக்னோ உயர் அதிகாரிகள் தடுத்தனர். இதை எதிர்த்துச் சாலையில் நாற்று நட்டு போராட, உயரதிகாரிகளும் நடுங்கிப் போனார்கள். ஒரு வாரத்தில் சாலை அமைக்கப்பட்டது.

இதேபோல், ரேஷன் உணவுப் பொருட்களுடன் கடத்தப்பட்ட இரு லாரிகளை மடக்கிப் போலீஸுக்குப் போன் செய்தார்கள். யாரும் வரவில்லை. இதற்காக, சுமார் நூறு நாய்களுடன் காவல் நிலையத்தை நோக்கிக் குலாபி கேங் உறுப்பினர்கள் ஊர்வலமாகப் போனார்கள். அதன் பிறகு ரேஷன் திருடர்கள் பிடிக்கப்பட்டனர்.

குலாபி கேங்

இந்தச் சம்பவங்களுக்குப் பின் கிராமத்தினர் ‘குலாபி கேங்’ என்று அவர்களை அழைக்கத் தொடங்கினர். குலாப் என்றால் ரோஸ் கலர் என்று அர்த்தம். அதையே அவர்கள் குழுவின் பெயராக 2003-ல் பதிவு செய்யப்பட்டது. இவர்களது சேவை குறித்துக் கேள்விப்பட்டு அக்கம் பக்கம் உள்ள கிராமங்கள், மாவட்டத்தினரும் அவர்கள் பகுதியில் குழுக்களை உருவாக்கினார்கள். இப்போது குலாபி கேங்கில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

"எனது மாமியார் வீட்டாரும் என்னைப் பெருமையாக நினைக்கிறார்கள்" என்று பெருமிதம் கொள்கிறார் சம்பத் பால். காதலை ஆதரிக்கும் சம்பத் பால் இதுவரை, காதலித்துக் கைவிட முயன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காதலிகளுடன் சேர்த்து வைத்திருக்கிறார்.

அஞ்சாத நெறி

குலாபி கேங்கின் கம்புகள், பெண்களுக்குத் தொல்லை தருபவர்களைப் பதம் பார்க்கத் தவறுவதில்லை. இதன் காரணமாக அவர் சில முறை சிறைக்கும் செல்ல வேண்டியதாயிற்று. பதிவான சில வழக்குகளில் ஆதாரம் இல்லை எனத் தள்ளுபடியும் ஆகியுள்ளது.

எனினும், இதற்கு எல்லாம் சம்பத் பால் பயந்ததாகத் தெரியவில்லை. ஒருமுறை பண்டா வந்த ஐஜி, குலாபி கேங்கை நக்சலைட்டுகள் எனக் கூறிவிட்டார்.

இதை எதிர்த்து அந்தப் பகுதியில் கிளம்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக மறுநாளே ஐஜி கூறியது தவறு என மாநிலத்தின் ஏ.டி.ஜி.பி., வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று.

அரசியல் வெற்றி

சம்பத் பாலின் உதவியாளரான அறுபது வயது ஜெயப்பிரகாஷ் ஷிவ் ஹரே, ‘தேர்தலில் பெண்களுக்காக 33 சதவீத ஒதுக்கீடு வந்த பின், அவர்கள் வென்றாலும் பொம்மையாகவே இருந்தனர். இதைச் சம்பத் பால் தன் பாடல்களில் எடுத்துரைத்த பின், ரப்பர் ஸ்டாம்புகளாக இருந்த பெண்கள் கணவன்மார்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சுயமாக முடிவு எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

குலாபி கேங் சார்பாக முதன்முறையாகப் போட்டியிட்ட 23 பேரில் சம்பத் பாலின் மகள் உட்பட 21 பேர் பஞ்சாயத்து தேர்தலில் வென்றுள்ளனர்’ என உற்சாகம் கொள்கிறார்.

இந்தக் குழுவைப் பற்றி லண்டனைச் சேர்ந்த கிம் லாங்கினோட்டோ எடுத்த பிங்க் சாரீஸ், நிஷ்தா ஜெயின் எடுத்த குலாபி கேங் என இரண்டு டாக்குமெண்ட்ரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2011 மார்ச் மாதம் உலகின் சிறந்த பெண்மணிகளாக ஆங்கில நாளிதழான ‘கார்டியன்’ தேர்ந்தெடுத்த 4 பெண்களில் இந்தியாவின் சம்பத் பாலும் ஒருவர். 2010-ல் பிரான்சில் நடந்த ‘குளோபல் உமன் ஃபோரம் ஃபார் எகனாமிக் அண்ட் சொசைட்டி’ எனும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுச் சம்பத் பால் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x