Last Updated : 09 Sep, 2018 11:43 AM

 

Published : 09 Sep 2018 11:43 AM
Last Updated : 09 Sep 2018 11:43 AM

பாதையற்ற நிலம் 15: கதையல்லாத கதை

எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் ஆகிய இருவிதமான பதங்களில் படைப்பாளிகள் அழைக்கப்படுவதுண்டு. கதை எழுதுபவர்களை விளிக்கும் பதங்கள் என்பதற்கு அப்பாற்பட்டு இவற்றை இருவிதமான இலக்கிய இயக்கங்கள் என அடையாளப்படுத்தலாம். தொடக்கக் காலத்திலிருந்த இலக்கியம் ஒரு குறிப்பிட்ட வர்க்க, சாதியைப் பின்னணியாகக் கொண்டிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட சில சமூகக் கதைகளும் ஒரு பொதுப் பார்வையிலிருந்தே எழுதப்பட்டன. அம்மாதிரியான கதைகளில் எழுத்தாளர் ஒருவரின் இருப்பு கதாபாத்திரங்களுக்கு ஒருபடி மேலாக இருக்கும். இதற்கு அப்பாற்பட்டு இதுவரை தமிழ் இலக்கியம் அறியாத ஒரு சமூகப் பின்ணணி, அந்தப் பின்னணி சார்ந்த கதைசொல்லிகளின் குரலில் பரவலாகப் பதிவானது எண்பதுகளுக்குப் பிறகுதான். அந்தக் குரல் ஒன்றின் சொந்தக்காரர் எழுத்தாளர் பாமா.

கிராமத்தின் அசலான சித்திரம்

பாமாவின் கதைக் களமும் புதிது; சொல்லும் புதிது. அதுவரை பொதுத்தளத்தில் நிலைபெற்றிருந்த ஒரு பொதுமொழியைத் தன் கதைகளின் வழியே மீறினார். அதுவரை கதைகளில் விதந்தோதப்பட்ட கிராமம் என்ற நிலத்தின் அசலான சித்திரத்தை பாமா தன் கதைகளில் வரைந்து காட்டினார். பண்பாட்டின் அடையாளமாக முன்னிறுத்திக் காட்டப்படும் கிராமம் எந்த மாதிரியான சாதியக் கட்டுகளுடன் உள்ளது என்பதையும் விவரித்தார்.

‘தன் வரலாறு’ பாணியில் சொல்லப் பட்டிருக்கும் அவரது முதல் நாவலான ‘கருக்கு’ ஒரு கரிசக் காட்டுக் கிராமத்தைப் பற்றிய முப்பரிமாணச் சித்திரமாக துலங்குகிறது. கி.ராஜநாரயணனின் கரிசல் காட்டு கிராமத்துக்குப் பொருள் அளவிலும், நில அமைப்பிலும் வெகுதூரத்தில் இருக்கிறது பாமாவின் கிராமம். மேல் சாதி குடிகள் ஒருபக்கமாகவும் கீழ் சாதியினர் ஒருபக்கமாகவும் பிரிந்து கிடக்கும் அந்தக் கிராமத்தைச் சொல்லி அந்தக் கதையைத் தொடங்குகிறார்.

அவரது பிள்ளைப் பிராயத்திலிருந்து தொடங்கி, கிறிஸ்தவ மடத்தில் கன்னியாஸ்திரியாக மாறுவதுவரை கதை விரிந்துசெல்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தலித்துகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைச் சொல்லிவிடுகிறார்.

சிறுவயதில் அறிமுகமாகும் தீண்டாமை

தெருக்களில் பராக்குப் பார்த்துக்கொண்டே பள்ளியிலிருந்து திரும்பும் ஒரு சிறுமிக்கு எப்படி சாதிப் பாகுப்பாடு அறிமுகமாகிறது என்பதை இந்த நாவலின் ஒரு காட்சி சித்தரித்துள்ளது. நாயக்கர்களின் களத்தில் வேலைபார்க்கும் தலித்துகளில் ஒரு பெரியவர், ஒரு தின்பண்டப் பொதியை விநோதமாகத் தூக்கிவருகிறார்.

பராக்குப் பார்த்துவரும் இந்தச் சிறு பெண் அந்தக் காட்சியைப் பார்க்கிறாள். அவளுக்குத் தெருவில் நடக்கும் எல்லாம் வேடிக்கைதான். ஒழுங்காகப் பிடித்துவரலாம். ஆனால், அவரோ அந்தப் பொதி கட்டப்பட்டிருக்கும் கயிற்றைக் கையில் பிடித்தபடி வருகிறார். ஆனால், அவரால் பிடிக்க முடியவில்லை. சிறுமிக்குச் சிரிப்பாணி.  வீட்டுக்கு வந்து, தன் அண்ணனிடம் இந்தக் காட்சியைச் சொல்லிச் சிரித்திருக்கிறாள். ஆனால், அது சிரிக்கக்கூடிய விஷயமல்ல என்பதை அண்ணன் புரியவைக்கிறார். தின்பண்டப் பொதியைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வேண்டும். கையிலும் தொட்டுவிடக் கூடாது. இப்படித் ‘தீண்டாமை’ என்ற ஒன்றைத் தனது ஏழு வயதில் தெரிந்துகொள்கிறாள் அந்தச் சிறுமி.

மேலும் இந்த நாவல், தலித் மக்களின் வாழ்க்கை முறையையும் பதிவுசெய்கிறது; அது முழுக்க மேல் சாதியினரையே சார்ந்திருந்திருக்கிறது. கடைகள், பள்ளிக்கூடம், நூலகம் எல்லாம் மேலத் தெருக்களில்தான் இருந்திருக்கின்றன. கீழத் தெருக்காரர்களுக்கு அதனால்தான் மேலத் தெருவின் தயவு தேவைப்பட்டது. அதுபோல் மேலத் தெருக்காரர்கள், கீழத் தெருவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாங்காத மீன் வகை இவர்களுக்குச் சகாய விலைக்குக் கிடைக்கிறது. அவர்களது தொழுவத்தைத் தூத்துப் பெருக்கி, மீந்த பழயதை இவர்கள் உண்கிறார்கள். நிலம் எல்லாம் அவர்களுக்குச் சொந்தமானவையாகவும் இருக்கிறது.

பெயருக்கும் உரிமையில்லை

இந்தச் சாதிப் பாகுபாடுகளில் முக்கியமானது பெயர். போன தலைமுறை தலித்துகள் முறையான பெயர்களால் அழைக்கப்பட்டதில்லை. சில குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பெயர் அழகானதாகவும்  அழைக்கப்படுவதாகவும் இருந்தது. இந்தப் பாகுபாட்டை நாவல் நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது. கதைசொல்லியின் சொந்த சாதியில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பட்டப் பெயர்களில்தான் அழைக்கப்பட்டனர்.

அதில் ஒரு பெண்ணின் பட்டப் பெயர் விசித்திரமானதாக இருக்கிறது; ‘மத்தியான மசாலா’. அந்தக் குடியில் பெரும்பாலான வீடுகளில் மத்தியானம் சமையல் செய்வது கிடையாது. கூழ்தான். ஆனால், ஒருத்தி மட்டும் மசாலா அரைத்துச் சமைப்பாள். அதனால் அந்தப் பெயர். இதுபோல் சிறு சிறு விவரிப்பில் அவர்களின் வாழ்க்கை வழக்கங்களும் பதிவாகின்றன.

‘நாகரிகம்’ பார்க்காத கூர்மை

ஒரு சிறுமிக்குத் திருட்டுப் பட்டம் கொடுக்கப்படுகிறது. மாணவிக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது. இவையெல்லாம் தலித் என்ற அடையாளத்தால் நடக்கின்றன.  கதைசொல்லி ஆர்ப்பாட்டமில்லாமல் இவற்றைச் சொல்லிச் செல்கிறார். இந்த மொழி வாசகர்களைக் கூர்ந்து கேட்க வைக்கிறது.

அம்மா, அப்பா, பாட்டி, தங்கை, அண்ணன் எல்லோரும் வருகிறார்கள். ஆனால், இந்த நாவல் அந்தக் குடும்பத்தின் கதையைச் சொல்லவில்லை. முதலாளிகள் வருகிறார்கள். கண்டிப்பான ஆசிரியர்களும் கதையில் உண்டு. கன்னியாஸ்திரிகள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், கதை எந்தக் கதாபாத்திரத்தையும் பின்தொடர்ந்து செல்லவில்லை. தலித் அடையாளம் என்பதையே பாமா மையப் படுத்திக் கதையைச் சுழற்றுகிறார்.

பாமா தேர்ந்த இந்த மொழி, கூர்மையானது. ‘பொது நாகரிகம்’ கருதி பிரயோகிக்க முடியாத சங்கதிகளைக்கூடத் துணிந்து சொல்லும் ஆற்றல் படைத்தது. எழுத்தாளர் கி.ரா.வால் பிரபலமான கரிசல் மொழிக்கு அருகில் இருந்தாலும் இதைத் தனிப்பட்ட சமூகத்தின் மொழி என வரையறுக்கலாம். ஒரே பிரதேசத்தில் சாதிகளுக்கு இடையில் வேறுபடும் புழங்குமொழியை பாமா தனது கதைகளின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார். அவரது சிறுகதைகளும் இதே போன்ற மொழியைப் பாடுபொருளாகக் கொண்டவை தாம். கூடுதலாக விவரிப்பில் லயிக்காமல் உரையாடலாகக் கதையை நகர்த்திக்கொண்டு செல்கிறார்.

பாமாவின் நாவல்கள் வழக்கமான கதைசொல்லும் நாவல்கள் அல்ல. அவரது அடுத்த நாவலான ‘சங்கதி’யும் ‘கருக்’கைப்போல் தன்வரலாற்று நாவல்தான். முதல் நாவல், கன்னியாஸ்திரியாக ஆன பிறகும் தொடரும் தலித் என்ற அடையாளச் சிக்கலைப் பேசியது. இரண்டாவது நாவல், ஒரு பெண் என்ற பாலினச் சிக்கலையும் பேசியது. அவரது சிறுகதைகளிலும் இதைப் பார்க்க முடியும். பாமாவின் மொத்த எழுத்துகளையும் இந்த இரு அம்சங்களுக்கு இடையில் வைத்துப் பார்க்கலாம்.
 

பாமா, ஆசிரியராகப் பணியாற்றியவர். கிறிஸ்தவ மடத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர். இவர், ‘கருக்கு’ ‘சங்கதி’ ‘வன்மம்’ ‘மனுசி’ ஆகிய நாவல்களையும் ‘கிசும்புக்காரன்’ ‘கொண்டாட்டம்’ ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இந்திய ஆங்கில இலக்கியத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கிராஸ் வேர்டு விருதை ‘கருக்கு’ ஆங்கில மொழிபெயர்ப்புக்காகப் பெற்றுள்ளார்


(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x