Published : 13 Jan 2019 12:27 PM
Last Updated : 13 Jan 2019 12:27 PM
கலை உலகில் ஆதர்சத் தம்பதியாக உலகம் முழுவதும் பல மாணவர்களை உருவாக்கிவருபவர்கள் சாந்தா தனஞ்செயன் - தனஞ்செயன். மியூசிக் அகாடமியின் பெருமைமிகு ‘நிருத்ய கலாநிதி’ விருதைப் பெற்றிருக்கிறார் சாந்தா தனஞ்செயன். கலைத் துறையில் இவரது அர்ப்பணிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. “இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுவதாக உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இந்த விருதைப் பெற்றார்” என்று தங்களின் அன்னியோன்யமான உறவைக் கோடிட்டுக் காட்டுகிறார் சாந்தா.
பரத நாட்டியம் தொடக்கத்தில் ஆலயத்தில் இறைவனுக் காக அர்ப் பணிக்கப்பட்ட கலையாக இருந்தது. ஆலயத்துக்கு வருகிற சாமானிய மக்களும் அதை ரசித்தனர். அதன்பின் அரசு தர்பார் களிலும் ஆடப்பட்டது. தற்போது சபாக்களில் மட்டுமே அரங் கேறும் கலையாக இருக்கிறது. சாமானிய மக்களிடமிருந்து பரத நாட்டியம் விலகிவிட்டதாக நினைக்கிறீர்களா?
சாமானிய மக்களிடமிருந்து பரத நாட்டியம் எப்போதும் விலகாமல்தான் இருக்கிறது. கோயிலில் ஆடினாலும் சரி, சபா மேடைகளில் ஆடினாலும் சரி எங்கு ஆடுவது என்பதைவிட எப்படி ஆடுகிறோம் என்பதே முக்கியம். நாட்டியம் பண்றவங்களுக்கு அது எங்கு நடந்தாலும் அது தெய்வாலயம்தான். வகுப்பில் ஆடினாலும் நான் கோயிலில் ஆடுவதுபோல் உணர்ந்துதான் ஆடுவேன்.
நடன சம்பிரதாயத்தில் பல மாற்றங்கள் வந்தாலும், அதன் அடிப்படை இறைவனை அடையும் வழியாகத்தான் பார்க்கிறேன். முச்சந்தியில் ஆடினாலும் கலையின் உன்னதம் வெளிப்பட வேண்டும். தெய்விகமாக நினைத்துச் செய்ய வேண்டிய கலை வடிவம் அது. எந்த இடத்தில் ஆடினாலும் அதன் தத்துவத்தில் மாற்றம் இல்லை.
எந்த ஆண்டிலிருந்து நீங்கள் இருவரும் ஒன்றாக மேடையில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தீர்கள்?
கலாஷேத்ராவில் ருக்மிணி தேவி அருண்டேலிடம் பரத நாட்டியம் கற்ற நாங்கள் அங்கேயே பல ஆண்டு கள் இருந்தோம். அதன்பின் ‘பரத கலாஞ்சலி’யை 1968-ல் தொடங்கினோம். அப்போது நான் கருவுற்றிருந்தேன். குழந்தை பிறந்தபின், 1969-ல் தனியாக நிகழ்ச்சிகள் நடத்தினோம். திருமண மேடைகளிலும் சுற்றுலாத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாய்ப்புக் கிடைத்தது.
நாரத கான சபாவில்கூட நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். அதன்பின் மியூசிக் அகாடமி போன்ற பல இடங்களிலும் நிகழ்ச்சிகளை அளித்தோம். இன்றுபோல் சபாக்களின் ஆதரவு பெரிதாக அன்றைக்கு இல்லாத நிலையிலும் மிகவும் மெதுவாக அதேநேரம் ஆணித்தரமாக எங்களின் நாட்டியத் தடத்தைப் பதித்தோம்.
நாயகன், நாயகி பாவங்களை அடியொற்றியே பரத நாட்டியம் எனும் கலை வடிவம் பெரும்பாலும் அரங்கேறிவருகிறது. காலத்துக் கேற்ற மாற்றம் ஒரு கலைக்குத் தேவைதானே?
கலை உணர்வோடு எந்த மாற்றத்தையும் புதுமை என்னும் வடிவத்தில் தரலாம். சாப்பாட்டில் மரபார்ந்த சமையல் உண்டு; புதுமையான வழிகளும் உண்டு. பெருங் காயத்தோடு சமைப்பது, வெங்காயம் இல்லாமல் சமைப்பது இப்படிப் பல ருசிகள் உண்டு. இதற்கு நாட்டியமும் விதிவிலக்கல்ல. அழகாக தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செய்பவர்களும் உண்டு.
ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காகப் புதுமைகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறவர்களும் உண்டு.
‘வள்ளி திருமணம்’ எல்லோரும் அறிந்த நாட்டிய நாடகம். நாங்கள் இருவரும் இணைந்து நிகழ்த்திய ‘ராமாயணம்’ நாட்டிய நாடகம் அந்த நாளில் புதுமையானதாக மதிக்கப்பட்டது. காரணம் அப்போதெல்லாம் ராமாயணம் என்றால் ராமரின் உடலில் வண்ணம் பூசுவது முதல் ராவணனுக்குப் பத்துத் தலைகளைக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால், நாங்கள் நடத்தியதில் கதாபாத்திரங்களுக்கேற்ற வேடம் போடாமல், இயல்பான நாட்டிய உடை அணிந்து நடனமாடினோம். இதற்கு ஆதரவு கிடைக்குமா என்று முதலில் தயங்கினோம். ஆனால், அதன்பின் அதுவே ஒரு டிரெண்டானது.
‘ஜங்கிள் புக்’ கதையை அமெரிக்காவின் ஒஹையோ டான்ஸ் பாலே குழுவுடன் இணைந்து நிகழ்த்தினோம். முழுக்க முழுக்க இசையை மட்டுமே ஆதாரமாகக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்திய பாணியில் நாங்கள் ஆடினோம். ‘ஜங்கிள் புக்’ நிகழ்ச்சியை இந்த ஆண்டு இந்தியாவின் பல இடங்களிலும் நிகழ்த்த இருக்கிறோம்.
அதற்கும் முன்பாக, சிதார் மேதை பண்டிட் ரவிஷங்கரின் கதைக்கு தனஞ்செயன் நாட்டிய வடிவம் கொடுத்தார். கனஷியாம் என்னும் மேதையின் பாதை, போதையால் எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. பண்டிட் ரவிஷங்கரின் தயாரிப்பில் இந்த நாட்டிய நாடகத்தை லண்டன் பர்மிங்ஹாம் மேடையில் நிகழ்த்தினோம். பின்னாளில், அந்த நாட்டிய நாடகம் நாரத கான சபாவிலும் அரங்கேறியது.
அதே போல் ‘அசோக சங்கமித்ரா’ என்னும் நாட்டிய நாடகத்தையும் மேடைகளில் நிகழ்த்தியிருக்கிறோம். இதெல்லாம் மேதைகளுடன் இணைந்து செய்த சில நிகழ்ச்சிகள். இவை உலகம் முழுவதும் எங்களை அறிமுகப்படுத்தின. அதேநேரம் நாயக, நாயகி பாவங்கள் இல்லாத பல புதுமைகளையும் இந்தப் படைப்புகள் தன்னியல்பாகக் கொண்டிருந்தன.
கலை கலைக்காக மட்டுமே என்பது சரியா?
கலை நம்மையும் உயர்த்த வேண்டும். ரசிகனையும் உயர்த்த வேண்டும். ‘பாவம்’, அபிநயம், ரசம் ஆகிய மூன்றும் கலையின் அங்கங்கள். ரசம் - இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வது. கலை உணர்வு ஒரு தொடர் சங்கிலி. ராமா கிருஷ்ணா கோவிந்தா ஆடினாலும் சரி, ‘ஜங்கிள் புக்’கிற்கு ஆடினாலும் சரி, அதில் கலையின் உன்னதம் வெளிப்பட வேண்டும்; அதுதான் முக்கியம். முக்கியமாக ரசிகர்களின் கலை உணர்வை உயர்த்த வேண்டும்.
நடனத்துக்கான வரவேற்பு குறைந்து வருகிறதே..
முக்கியமான விஷயம் இது. ‘தேவையைவிட உற்பத்தி அதிகம்’ என்பதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். சிலர் காசு கொடுத்து ஆடுகிறார்கள். காசு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கோயில்களிலேயே அரங்கேற்றங்களை நடத்தலாம். பரத கலாஞ்சலியிலேயே நாங்கள் சிறிய அளவில் அரங்கேற்றங்களை நடத்துகிறோம். நிறையப் பேர் திறமையோடு இருக்கின்றனர்.
நிறையப் பேர் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், எல்லாருமே மேடையில் ஆட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் வாத்தியாராகலாம். ஆராய்ச்சியாளர்களாக ஆகலாம். இதைச் சரியாகக் கணிப்பதற்கு ஒரு தேர்ந்த குருவால்தான் முடியும். நாங்கள் அப்படித்தான் செய்கிறோம்.
நடராஜரே கலைக்கான கடவுளாக இருக்கும்போது, ஆண் நடனக் கலைஞர்களுக்குப் பெரிதாக வரவேற்பில்லையே?
கலைக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. விருது வாங்கும்போதே நான் இதைத்தான் சொன்னேன். நான் இரண்டாவதாக இந்த விருதை வாங்குகிறேன் என்று சொன்னது, என்னுடைய கணவர் இதற்கு முன் விருது வாங்கியதைக் குறிப்பிட்டதன் மூலம் அவரில் பாதி நான், என்னில் பாதி அவர் என்பதைத்தான். ஆண் கலைஞர்களுக்கான வரவேற்பு இப்போது அதிகரித்து வருகிறது. மியூசிக் அகாடமியிலேயே நான்கு ஆண் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தனியார் தொலைபேசி விளம்பரத்துக்காகப் பறந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஏதோ சின்ன விளம்பரப் படம் என்றுதான் நினைத்தோம். ஆனால், கோவாவுக்குச் சென்றபின்தான் புரிந்தது. அதைத் தொடர்ச்சியான ஒரு கதைபோல் வடிவமைத்திருந்தனர். அந்தத் துறையில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான புதிய அனுபவமாக அது இருந்தது. இரண்டு நாள் பயிற்சி கொடுத்திருந்தால் நான் பாராசெய்லிங் கற்றுக்கொண்டிருந்திருப்பேன்.
சில நொடிகள் காற்றில் பறந்த அனுபவமே அலாதியாக இருந்தது. அதைத் தொடர்ந்து ராஜீவ் மேனனின் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தில் நெடுமுடி வேணுவுக்கு மனைவியாக நடித்திருக்கிறேன். அதுவும் புதிய அனுபவமாக இருந்தது.
ஒரு குழந்தை நாட்டியத்தின் பால பாடத்தைத் தொடங்கும்போதே, அரங்கேற்றத்துக்கு நாள் குறிக்கும் பெற்றோர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரங்கேற்றத்தை முன்னிறுத்தி மட்டுமே நாங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துவதில்லை. ஒரு நல்ல குடிமகனுக்கு நம்முடைய பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுப்பது தான் எங்கள் முக்கிய நோக்கமாக இருக்கும். நீங்கள் சொல்லும் மனப் பான்மையுடன் பெற்றோர்கள் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றே.
படங்கள்: கே.வி. ஸ்ரீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT