Published : 13 Jan 2019 12:27 PM
Last Updated : 13 Jan 2019 12:27 PM

வானவில் பெண்கள்: தமிழுக்குத் தொண்டாற்றும் ஆசிரியை

அன்றைய பணிகளை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள். ஆசிரியர் கனகலட்சுமி வந்தவுடன் புத்தகத்தில் உயிர் எழுத்து, மெய்யெழுத்துகளை உச்சரித்துக்கொண்டேஎழுதத் தொடங்கினர். 

தாய் மொழிக்கு முக்கியத்துவம்

சென்னை ஷெனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் முனைவர் கனகலட்சுமி. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ‘கசடறக் கற்க கற்பிக்க தமிழ் வாசிக்க எழுத 45 நாட்கள்’  புத்தகம் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. அதேபோல் கணக்குப் பாடத்தை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும்வகையில் ‘கணக்கு கையேடு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகங்களின் பயன்பாடு குறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில்  ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்  தமிழ் வாக்கியங்களைப்  பிழையில்லாமல் எழுதவும் சரளமாகப் படிக்கவும் செய்துள்ளனர். அதேபோல் இவரின் புத்தகங்களை வைத்துத் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. 

“தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வளைவுக்கும்  வரிவடிவங்களுக்கான ஒலி வடிவ முறை உண்டு. ஆனால், நாம் ஒலிவடிவங்களை மறந்ததன் விளைவு  பிள்ளைகளுக்குத் தமிழை எழுதக் கற்றுத்தருவதற்குப் பதிலாக ஓவியம் போல் வரையவே கற்றுக்கொடுக்கிறோம். இது மாற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் இலங்கியங்களில் தமிழ் எழுத்துக்கள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதை ஆய்வுசெய்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன்” என்கிறார் கனகலட்சுமி.

தற்போது முதியோர் கல்விக்கு  இந்தப் புத்தகம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான முன்னோட்ட வகுப்புகள் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் நடத்தப்பட்டுவருகிறது.

குழந்தைத் தொழிலாளர்களுக்கான முதல் பள்ளி

கனகலட்சுமியின் சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சராசரி மாணவியாகவே இருந்திருக்கிறார். அம்மா சுப்புலட்சுமி இறந்துவிட்ட நிலையில் அப்பாவின் கனவை நனவாக்கவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், ஆசிரியர் பயிற்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். தனியார் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

vaanavil-2jpgright

பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள கடுக்காய் வலசை கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றினார். மாணவர்களுக்குப் புரியும்வகையில் எளிமையாகக் கற்பித்ததால் போகலூர் ஒன்றியத்தின் ஆசிரியர் பயிற்றுநுர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார்.

இந்நிலையில்  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் உள்ள குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாகக்  குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளியை இவர் தொடங்கினார்.

உலக சாதனை

இவரது புத்தகத்தைக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் எளிமையான முறையில்  தமிழைக் கற்பிக்கும் முறை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் 1,56,170 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழை வாசிக்கச் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியதற்காக அமெரிக்காவின் உலக சாதனை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவே தனக்கு வந்த பணி உயர்வையெல்லாம் தவிர்த்திருக்கிறார். “வாழ்வின் இறுதிவரை தமிழ் மொழிக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே லட்சியம்” என்கிறார் ஆசிரியை கனகலட்சுமி.கனகலட்சுமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x