Published : 20 Jan 2019 10:21 AM
Last Updated : 20 Jan 2019 10:21 AM
உலக துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை ஒருவர் முதலிடம் பிடிப்பது கனவிலும் நடக்காது எனப் பலர் நினைத்தனர். ஆனால், அந்த நினைப்பைத் தகர்த்தெறிந்து பதக்கக் கனவுக்கு உயிர்கொடுத்தார் அந்த வீராங்கனை. உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் அவர்தான். இந்திய வரலாற்றில் முத்தான இரு சாதனைகளை படைத்த அந்த வீராங்கனை, பஞ்சாபைச் சேர்ந்த ஹீனா சித்து.
ஹீனா சித்துவின் சொந்த ஊர் லூதியானா. மற்ற வீராங்கனைகளைப் போல சிறு வயதிலிருந்து விளையாட்டைக் கற்றவரும் அல்ல; விளையாட்டு ஆர்வம் கொண்டவரும் அல்ல. சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஹீனாவின் லட்சியம். அவருடைய பயணமும் அதை நோக்கித்தான் இருந்தது. முழுக்க முழுக்க படிப்பில் மட்டுமே அவரது கவனம் குவிந்திருந்தது. பிளஸ் டூ தேர்வு, மருத்துவ நுழைவுத் தேர்வு எனப் படிப்பிலேயே மூழ்கிக்கிடந்தார் ஹீனா. ஒரு கட்டத்தில் படிப்பு தந்த சோர்வால், அவருக்குச் சற்று மன அமைதி தேவைப்பட்டது. அதற்காக அவர் தேர்வு செய்த விளையாட்டுதான் துப்பாக்கிச் சுடுதல்.
எதிர்பாராத துப்பாக்கிச் சூடு
ஹீனாவின் அப்பா தேசிய துப்பாக்கிச் சுடும் வீரர். அவருடைய உறவினர் துப்பாக்கியை வடிவமைக்கும் கடையின் உரிமையாளர். இவர்கள் மூலம் துப்பாக்கியைப் பிடிக்கத் தொடங்கிய ஹீனா, ஆசுவாசத்துக்காகத் துப்பாக்கிச் சுட ஆரம்பித்தார். ஆனால், சில நாட்களிலேயே அந்த விளையாட்டு மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
மருத்துவம் படித்துக்கொண்டே துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டையும் தொடர்ந்தார். மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். 2009-ல் கேரளத்தில் நடந்த தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஹீனாவுக்கு அதே ஆண்டில் சீனாவில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது.
19 வயதிலேயே உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற ஹீனா, வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேசப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். மருத்துவ வகுப்புக்குப் பங்கம் வராமல் தொடர்ந்து தேசிய, சர்வதேச அரங்கில் வலம்வரத் தொடங்கினார். 2010-ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஹீனாவின் திறமைக்குச் சான்றாக அமைந்தது. 10 மீ. ஏர்பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற மகளிர் அணி சார்பில் விளையாடிய ஹீனா, தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் சீனாவின் குவாங்ஷு நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்று முத்திரைப் பதித்தார்.
வரலாற்றுச் சாதனை
2013-ல் உலகக் கோப்பைத் தொடரில் முக்கியமான சாதனையை ஹீனா படைத்தார். அந்த ஆண்டு ஜெர்மனியில் உலக துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் உலக சாம்பியனான செர்பியாவின் சொரானா அருனோவிக், உக்ரைனின் ஒலினா ஆகியோரைத் தோற்கடித்துத் தங்கம் வென்றார். உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் படைத்தார் ஹீனா.
இதற்கு முன்பு அஞ்சலி பாகவத், ககன் நரங் இருவர் மட்டுமே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரைபிள், பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றிருந்தனர். அந்த வரிசையில் மூன்றாவதாக இணைந்தார் ஹீனா. பிறகு அவரது வெற்றிப் பயணம் தடையின்றி தொடர்ந்தது. 2014 ஏப்ரல் 7 அன்று உலக துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்தார் ஹீனா. இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனையானார்.
2015-ல் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன், தெற்காசிய ஃபெடரேஷன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் என ஹீனா வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தகுதிச் சுற்றோடு அவர் வெளியேறியது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. 2017-ல் ஈரானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்று விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்துப் போட்டியிலிருந்து விலகியதால் ஹீனா சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.
விளையாட மறுப்பு
ஈரானில் விளையாட மறுத்த பிறகு அதைப் பற்றி இப்படிக் கூறினார் ஹீனா: “பாலினம், மதம், கொள்கை, கோட்பாடு, கலாச்சாரம் ஆகியற்றைக் கடந்து எந்தப் பாரபட்சமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் விளையாட முடியும் என்பதால்தான், விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறேன். நான் புரட்சியாளர் அல்ல; விளையாட்டு வீரர்.
வீராங்கனைகள் தலைப்பாகை அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது விளையாட்டு உணர்வையே அவமதிப் பதாகிவிடும்” எனக் கொந்தளித்தார். போட்டியிலிருந்து விலகுவது தொடர்பாகத் தேசிய ரைபிள் சங்கத்துக்கு அவர் எழுதிய கடிதத்தை அந்தச் சங்கம் ஏற்றுக்கொண்டது.
இந்த அதிரடி முடிவுக்குப் பிறகு அதே ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கத் தையும், 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்று திரும்பினார். சில மாதங்களுக்கு முன்பு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தனது விளையாட்டுப் பயணத்தில் ஏராளமான பதக்கங்களை வென்றாலும் மிகப் பெரிய தொடர்களில் அவர் வென்ற பதக்கங்களே அவரது திறமைக்குச் சான்று. 2014-ல் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த பிறகு அவரது திறமையை அங்கீகரிக்கும்வகையில் மத்திய அரசு ஹீனாவுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது.
உழைப்பின் மகிமை
2012, 2016 என இரு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருக்கிற ஹீனா, அதில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கைத் தவிர்த்துவிட்டு மற்ற பெரிய தொடர்களில் எல்லாம் அவர் ஜொலித்திருக்கிறார். உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 4 பதக்கங்கள், காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கங்கள் என சர்வதேச அளவில் ஹீனா வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார்.
மருத்துவத்தையே தன் வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்த ஹீனா, இன்று மருத்துவம், துப்பாக்கிச் சுடுதல் என இரு துறைகளிலுமே இரட்டைச் சவாரி செய்துவருகிறார். விளையாட்டுத் துறையில் எதிர்பாராமல் காலடி வைத்த ஹீனா, இன்று அந்த விளையாட்டில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். மருத்துவம், விளையாட்டு என இரு துறைகளிலும் உயரத்தை அடைய ஹீனா காட்டிய உழைப்பு அபாரமானது. இலக்கை அடையும்வரை கடும் உழைப்பு என்ற அவரது தாரக மந்திரம்தான் தொடர்ந்து அவர் வெற்றிநடைப் போட உதவிக்கொண்டிருக்கிறது.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT