Published : 06 Jan 2019 10:13 AM
Last Updated : 06 Jan 2019 10:13 AM
2018-ல் சர்வதேச உழைக்கும் மகளிர் நாளன்று ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன்முறையாகப் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘பாலின பாகுபாடு’, ‘குடும்ப வன்முறை’ ஆகியவற்றை எதிர்த்தும் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும்’ முழுநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ‘நாங்கள் வேலையை நிறுத்திக்கொண்டால் உலகமே நின்றுவிடும்’ என்ற முழக்கத்தின் கீழ் 50 லட்சம் பெண்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
பசுமை அலை
கத்தோலிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டுவந்தது. இதையடுத்து, 2018-ல் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டுப் பெண்கள் ‘கிரீன் வேவ்’ என்ற முழக்கத்தோடு லட்சக்கணக்கில் திரண்டனர். பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோற்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்நாட்டு அரசு கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி அயர்லாந்து நாட்டிலும் பெண்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அது வெற்றியும் பெற்றது.
பின்னோட்டம் அல்ல முன்னோட்டம்
பல்வேறு பிற்போக்குத்தனமான காரணங்களைக் கூறிப் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, கேரளத்தில் பெண்கள் எழுப்பிய ‘வனிதா மதில்’ (பெண்கள் சுவர்) உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் உரிமையை நிலைநாட்ட காசர்கோடு பகுதியிலிருந்து திருவனந்தபுரம்வரை 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு லட்சக்கணக்கான பெண்கள் சாதி, மதங்களைக் கடந்து கைகோத்து நின்றார்கள். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் பிற்போக்குக் கருத்துகளைப் பின்னுக்குக் தள்ளவும் பெண்கள் பெரும்படையெனத் திரண்டு வரலாறு படைத்துள்ளனர்.
வன்முறை ஒழிக
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசின் கொள்ளைகளுக்கு எதிராக லட்சக்கணக்கான பெண்கள் பேரணியில் 2018-ல் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறை, வேலைவாய்ப்பின்மை, அமெரிக்காவுக்குக் குடிபெயரும் மக்களுக்கு எதிராக டிரம்ப் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT