Published : 13 Jan 2019 12:27 PM
Last Updated : 13 Jan 2019 12:27 PM

சூழல் காப்போம்: பையாக மாறும் பழைய துணி

பிளாஸ்டிக் மீதான தடையின் எதிரொலியாக மாற்றுப் பொருட்களை நோக்கிப் பலரும் நகரத் தொடங்கியிருக்கின்றனர். வணிகர்களும் தங்களால் முடிந்த சிறு சிறு உத்திகளைக் கையாள்கின்றனர். அந்த வரிசையில் நாகர்கோவிலில் பல கடைகளிலும் தையல் இயந்திரம் நுழைந்துள்ளது.

நாகர்கோவிலில் உள்ள ‘ஆர்கானிக் பசுமையக’த்துக்குச் சென்றபோது, அங்கு நூற்றுக்கணக்கில் காகிதப்பைகள் இருந்தன. ஒருவர் முழுநேரமாகக் காகிதப்பையைத் தயாரித்துக்கொண்டிருந்தார். கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த ஈத்தாமொழியைச் சேர்ந்த மூதாட்டி பானுமதி,  “ரொம்ப வருசத்துக்கு அப்புறம் அந்தக் கால வாழ்க்கையைப் பார்த்ததுபோல் இருக்கு.

முன்னாடியெல்லாம் இதே மாதிரி பலசரக்கு, காய்கறி கடைகளுக்குப் போனா காகிதங்களைப் பசைபோட்டு ஒட்டி பார்சல் கவர் செய்துட்டு இருப்பாங்க. பிளாஸ்டிக் கேடுதான். சாக்கடையில அடைச்சுட்டு நிக்கும். இப்போ கடைகளுக்குக் காகிதப்பை வந்துருச்சு. பலரும் வீட்லயே காகிதப்பை செஞ்சு சப்ளை செய்றாங்க” என்றார்.

கடையின் உரிமையாளர் ‘பசுமை’ சாகுலிடம் பேசினோம். “குறைவான பொருட்கள் வாங்குறவங்களுக்குக் காகிதப்பையைக் கொடுக்கிறோம். இதுக்குக் கைப்பிடி இருக்காது. கையில் பிடித்துத்தான் தூக்கிட்டுப் போகணும். கடையின் ஒரு பகுதியில் தையல் மிஷின் போட்டுருக்கோம். கடைக்குப் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சிலர் பழைய சேலை, வேட்டின்னு கொடுக்குறாங்க.

அவற்றை நல்லா துவைச்சு துணிப்பையா மாத்துறோம். கிழிஞ்ச துணிகளும் சிலர் கொண்டு வந்து கொடுக்குறாங்க. சுற்றுச்சூழலைக் காப்பதற்காக அரசு முன்னெடுத்திருக்கிற முயற்சிக்கு நம்மால் முடிந்த சிறு ஒத்துழைப்பு இது. நாகர்கோவிலில் பல கடைகளிலும் இப்போ தையல் இயந்திரம் வாங்கி வைச்சுட்டாங்க. சிலர் குடிசைத் தொழிலா துணிப்பையைத் தைக்குறாங்க” என்றார் அவர்.

சலவை செய்யப்பட்ட பழைய துணியுடன் கடைக்கு வந்தார் ஒருவர். அவர் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்குள் துணிப்பை தயாராகிவிட்டது. பழைய துணியோடு வந்தவர், புதிய பையோடு சென்றார்.

soozhal-2jpg

கையில் எப்போதும் ஒரு டம்ளர்!

தினமும் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புபவர்கள் காய்கறிகள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகவே பிளாஸ்டிக் கைப்பைகளைப் பயன்படுத்துகின்றனர். அலுவலகத்துக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்வதைச் சுமையாக நினைத்தவர்களால் வீடுகளுக்குள் நுழைந்த பிளாஸ்டிக் பைகள், தற்போதைய வாழ்க்கைச் சூழலில் பெரும் சுமையாகவே மாறிவிட்டன.

சணலால் நெய்யப்பட்ட கைப்பையை அலுவலகக் கைப்பைக்குள் வைத்துக்கொள்வது என் வழக்கம். தரமான பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் மறு சுழற்சிக்குப் பயன்படுவதால் மனித வாழ்வுக்குக் கேடில்லை என்பார்கள். ஆனாலும், ஆரோக்கியம் கருதி பிளாஸ்டிக் கேன்களை சில்வர் கேன்களாக மாற்றிவிட்டேன்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அடுத்த தலைமுறையினருக்குப் பெரும் செல்வத்தைச் சேமித்து வைக்காவிட்டாலும் ஆரோக்கியமான இயற்கையை மிச்சம் வைத்துச் செல்வோம்.

- ச.அரசமதி, தேனி.

எப்போதுமே வெளியில் செல்லும்போது கையில் துணிப்பையை எடுத்துச் செல்வேன். மற்றவர்களின் ஏளனப் பார்வையை என்றுமே நான் பொருட்படுத்தியதில்லை. துணிப்பை,

சணல் பை ஆகியவை என் தேர்வு. கையில் ஒரு டம்ளர் வைத்திருப்பது வெளியில் காபி, டீ குடிக்க நேரும்போது உதவும். கோயிலில் பிரசாதங்களை வாழை மடலிலோ மந்தாரையிலை தொன்னையிலோ தரலாம். பூ விற்பவர்கள் வாழையிலையில் நார்கொண்டு கட்டித் தரலாம். திருமண வீடுகளில் தரும் சிறிய துணித் தாம்பூலப்பைகளைத் தூக்கி எறியாமல் காய்கறிகளை வாங்கப் பயன்படுத்துகிறேன். ஸ்டிராவை என்றுமே பயன்படுத்தியதில்லை. எதிர்பாராது வரும் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்து, தனியாக உறையில் வைத்துக் கட்டி குப்பைத் தொட்டியில் சேர்க்கிறேன். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத்

தவிர்க்க என் குழந்தைகளுக்கும் பக்கத்து வீட்டினருக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வூட்டி வருகிறேன்!

- ஆர்.ஜெயந்தி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x