Last Updated : 30 Dec, 2018 10:16 AM

 

Published : 30 Dec 2018 10:16 AM
Last Updated : 30 Dec 2018 10:16 AM

வண்ணங்கள் ஏழு 35: சாதிக்கப் பிறந்தவர்கள்!

நான், சுதாகர் எட்டாம் வகுப்பில் அடியெடுத்துவைத்தேன். என் வாழ்வில் இன்பமான காலமாக அது இருந்தது. அதற்குக் காரணம் கார்த்திகேயன்! அப்பாடா, அந்தப் பெயரை நினைத்தால் இன்றும் சுகமாக இருக்கிறது. அந்த நினைப்பு எத்தனை காலங்கள் கடந்தாலும்  அழிக்கமுடியாதது. அப்படியொரு பெயர். வாழ்வில் இன்பம் என்றால் என்ன என்று எனக்குப் புரியவைத்த பெயர்.

என்னடா, ஒரு ஆண் எப்படி இன்னொரு ஆணை விரும்புவான் என்றுதானே நினைக் கிறீர்கள்? உண்மைதான். எனக்கு அவன் மேல் ஈர்ப்பு வர ஆரம்பித்தது. அப்போதுதான் எனக்குள் இருக்கும் ஹார்மோன் வேறுமாதிரி சுரக்கிறது என்பதை உணர ஆரம்பித்தேன். நான் சாதாரண ஆணாக இல்லை; எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் என்று புரிய ஆரம்பித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

நான் ஏன் ஒரு ஆணை விரும்ப வேண்டும் என்ற கேள்வி என்னைக் குடைந்தது. மனம் முழுவதும் அவனது நினைவுகளைச் சுமக்க வேண்டியிருக்கிறதே எனவும் நாம் செய்வது சரியா இல்லை தவறா எனவும் எனக்குள்ளே கேள்வி எழுந்தது. நானும் கார்த்திகேயனும் காதலர்கள்போல் வாழ ஆரம்பித்தோம். அவன் என்னை ஒரு பெண்ணாகவே நினைத்துப் பழக ஆரம்பித்தான். நான் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன். அவனைப் பார்ப்பதற்காகவே தினமும் ஸ்கூலுக்குப் போக வேண்டும் என ஆசைப்பட்டேன்.

- சுதாகராகப் பிறந்து நங்கை சுவேதாவாக வாழ்ந்துகொண்டிருப்பவரின் பள்ளிப் பருவ காதல் இது. ‘சுவேதா’ என்னும் தலைப்பில் அவரின் வாழ்க்கையைத் தொகுத்திருப்பவர் பிரதிபா லெனின்.

தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதற்காக உயிரையும் பொருட் படுத்தாமல் தங்களின் ஆணுறுப்பை அறுத்து, பெண்ணாக மாறும் திருநங்கைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தன்னுடைய தாயின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, தன் உணர்வுகளையும் உருவத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழும் நங்கை சுவேதா.

தாயைக் காக்கும் தனயன்

குடிகாரக் கணவனுக்கு மனைவியாகி இரண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்காமல் தன்னைக் காப்பாற்றிய தாய்க்கு இறுதிவரை அவருடைய மகனாகவே வாழ்ந்துவருகிறார் சுவேதா சுதாகர்.

படிப்பு மட்டுமே எல்லா இழிவுகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்பிய சுவேதா ஒரு சிறிய கடையில் உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டே அஞ்சல் வழியில் இளங்கலைப் பொது நிர்வாகம் படித்தார். அதன்பின் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கவுன்சலிங்கில் பட்டயப் படிப்பையும் படித்தார்.

மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச  அளவிலான எச்.ஐ.வி. எய்ட்ஸ் பிரச்சாரத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அளிக்கும் சமூக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து கலைகளின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் பிரச்சாரம் செய்துவருகிறார். நேகோ, டான்சாக்ஸ் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பிரதானமான எய்ட்ஸ் விழிப்புணர்வு பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாஸ்டர் டிரெயினர் என்னும் சிறப்பும் சுவேதாவுக்கு உண்டு.

வீழ்ச்சியும் எழுச்சியும்

ஒரு சமூக அமைப்பின் பல நடவடிக்கை களில் தன்னை இணைத்துக் கொண்டு எய்ட்ஸ் பிரச்சாரத்தில் புதுப்புது பாணிகளை சுவேதா அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் அந்தச் சமூக அமைப்புக்கும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் நன்மைகளை சுவேதா செய்துவந்தார். அப்போது அங்கிருந்த சிலர் சுவேதாவின் வளர்ச்சி பிடிக்காமல் தொடர்ந்து அவரை அவமானப்படுத்திவந்தனர்.

அதுவரை கட்டியெழுப்பிய நம்பிக்கை சரிந்து விட்டதுபோல் உணர்ந்தார் சுவேதா. அவரின் மன உளைச்சலைப் போக்கி அவருக்கு ஆறுதல் சொன்ன திருநங்கை மலாய்க்கா, வழக்கறிஞர் சுஜாதா, எழுத்தாளர்கள் லதா சரவணன், பிரதிபா லெனின் உள்ளிட்ட சிலரின் முயற்சியால் சுவேதா தொடங்கியதுதான்  ‘சாதிக்கப் பிறந்தவர்கள்’ சமூக அமைப்பு (பார்ன் டு வின்).

முன்னுதாரண திருநங்கைகளின் காலண்டர்

 “கடந்த 2013-ல் தொடங்கப்பட்ட ‘பார்ன் டு வின்’ அறக்கட்டளையின் மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் திருநங்கைகளை முன்னுதாரணமாக  அடையாளப்படுத்தி அவர்களைக் கௌரவிக்கும் பணியைச் செய்துவருகிறேன். இதன்மூலம் இதுவரை 60-க்கும் மேற்பட்ட முன்னுதாரணத் திருநங்கைகளை அடையாளப் படுத்தியிருக்கிறோம்.

அதோடு, பெண் தன்மை உணர்வோடு வீட்டைவிட்டுக் குடும்பச் சூழ்நிலையால் வெளியேறும் இளம் திருநங்கைகளின் கல்விக் கனவை நனவாக்குகிறோம். அவர்கள் விரும்பும் படிப்பைப் படிப்பதற்கும், படிப்புக்குப் பின் அதையொட்டி அவர்கள் ஏதேனும் சிறுதொழில்கள் செய்வதற்கு விரும்பினால் அதற்கான கடன் உதவிகளைப் பெறவும் உதவுகிறோம்.

திருநம்பிகளுக்கும் உதவி

திருநம்பிகளையும் ஆதரித்து அவர் களுக்கான ஆலோசனைகளைக் கூறி, பணிப் பாதுகாப்பையும் அளித்து வருகிறோம். அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தையும் அவர்களைப் பற்றிய சமூகத்தின் தவறான பார்வையையும் பொதுமேடையில் அவர்களை நிற்கவைத்து அவர்களின் கருத்துகளைச் சொல்லவைப்பதன் மூலமாகப் போக்கிவருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் பல துறைகளில் சாதனைபுரிந்த திருநங்கை களைக்கொண்ட காலண்டர்களை வெளியிட்டு வருகிறோம்.

மூன்றாம் பாலினத் தவருக் கான கல்வி, பணிகளில் இடஒதுக்கீட்டை உண்டாக்குவதற்கு அரசு சார்ந்த அமைப்பு களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஏனென்றால், அரசின் இந்த இட ஒதுக்கீடு கிடைத்தால்தான் மாற்றுப் பாலினத்தவருக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறோம்” என்றார் சுவேதா.

 “எல்லாம் சரி, உங்களின் முதல் காதல் என்னவானது?” என்றோம் சுவேதாவிடம்.

“சில நாட்களுக்கு முன் எதேச்சையாக சந்தித்தேன். ‘திருமணம் ஆகிவிட்டது. குழந்தை இருக்கிறது. ஆனாலும் உன்னை மறக்கவில்லை.. மறுபடியும் எப்போது சந்திக்கலாம்..’ என்றான். அவனுக்கு என்னுடைய பணிகளைப் புரியவைத்து, பிரியாவிடை கொடுத்து அனுப்பினேன். என்னுடைய தொலைபேசி எண்ணைக்கூடக் கொடுக்கவில்லை.”

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x