Last Updated : 16 Dec, 2018 09:24 AM

 

Published : 16 Dec 2018 09:24 AM
Last Updated : 16 Dec 2018 09:24 AM

பெண் திரை: அவளுக்குள் இருக்கும் அவன்

யாரோ இன்னைக்கு ரொம்ப அழகாக இருக்காங்க போல என்ற குரல் வந்த திசைக்கு எதிரே  கண்ணாடி முன் அமர்ந்து தன்னை அழகுப்படுத்திக்கொண்டிருந்தாள் அவள். கருநிறக் கூந்தலின் வழியே தெரிந்த கம்மல் அவளது காதுக்குப் பொருத்தமாக இருந்தது. நகங்களில் பளிச்சிட்ட நகப்பூச்சு, இளஞ்சிவப்பில் வசீகரித்த உதட்டுச்சாயம் என எல்லாமே கச்சிதம்.

மஞ்சள் நிற குர்தா, ஜீன்ஸ், கைப்பை சகிதம் கிளம்பிய அவள், நகரின் பிரதான வீதியில் நடக்கத் தொடங்கினாள்.  எதிர்ப்பட்ட இளைஞன் அவளை பார்த்து விசில் அடித்தபடி தொப்பியைச் சுழற்றிக்கொண்டு கடந்து செல்கிறான். பழக் கடையைக் கடந்தபோது கையில் ஆப்பிளை வைத்துக்கொண்டு அவள் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் வியாபாரி.

மற்றவர்கள் தன்னை உற்றுப் பார்ப்பதால் குர்தாவைச் சரிசெய்தபடி நடக்கிறாள் அவள். டிப் டாப்பாக  உடையணிந்துகொண்டு வேலைக்கு விறுவிறுப்பாக நடந்துசெல்லும் இளைஞன் ஒருவன் அவளைக்  கடக்கும்போது அவளது பின்புறத்தைத் தடவிச் செல்கிறான். சட்டென அவள் திரும்பிப் பார்ப்பதற்குள் எதுவும் நடக்காததுபோல் அவன் போன் பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிடுகிறான்.

எல்லை மீறும் ஆண்

காலைநேர பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லாத சாலையில் பலர் அந்த இடத்தில் இருக்கிறார்கள். தன்னைச் சீன்டியவனை எதிர்க்க முடியாமல் கையறு நிலையில் இருக்கும் அவள் தன் கோபத்தைத் தனித்துக்கொள்ள அருகில் இருக்கும் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் குடிக்கிறாள். தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது எதிரே நிற்கும் ஆட்டோ ஓட்டுநர் தகாத செயலில் ஈடுபடுகிறார்.

தண்ணீர் பாட்டிலை கசக்கி அவர் மீது எறிந்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடக்கத் தொடங்குகிறாள். அவள் மறைத்து வைத்திருக்கும் கேமராவில் இவை அனைத்தும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டிருக்க அவளை இருமுறை வட்டமடித்துவிட்டு கடந்துச் செல்கிறது ஒரு இருசக்கர வாகனம். அதிலிருந்து  குதித்து  அவள் அருகில் வருகிறான் ஒருவன்.

அவளை எந்தப் பக்கமும் நடக்கவிடாமல் வழிமறித்து நிற்கிறான். இதை வண்டியில் உட்கார்ந்துகொண்டே மற்றொருவன் ரசித்துக்கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் அவளது கையைப் பிடித்து இழுத்து பலவந்தப்படுத்தும்போது அவள் அங்கிருந்து ஓடி அவன் பார்வையிலிருந்து மறைகிறாள்.

வீட்டுக்கு வந்து சேரும் அவளைப் பதற்றத்துடன் விசாரிக்கிறாள் தோழி. மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவந்ததைப் போலிருந்தது அவளது முகம். அப்போதுதான் அவளது முகத்தை நம்மால்  பார்க்கமுடிகிறது. கோபமாகத் தன் தலைமுடியைக் கழற்றி எறியும்போதுதான் அது அவள் அல்ல அவன் என்று தெரிகிறது.

“எப்படித்தான் பெண்கள் இதையெல்லாம் எதிர்கொள்கிறீர்களோ? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் இந்த மாதிரியான அருவருக்கத்தக்கச் செயல்களை என்னால் ஒரு மணிநேரம்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை” என்று அவன் சொல்லும்போது அவனது பார்வையில் உள்ள பயம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

இக்பால் கான் எழுத்தில் ஃபெரோஸ் அபாஸ் கான் இயக்கியுள்ள ‘SHE’  குறும்படத்தில், பெண்களை மட்டுமல்லாது பெண்ணாக வேடம் தரித்த ஆண், பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட பொருள் என எதையும்  இந்த ஆணாதிக்கச் சமூகம்  விட்டுவைக்காது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மூன்று நிமிடம் கொண்ட இந்தக் குறும்படத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்  பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நீடிப்பது சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x