Published : 09 Dec 2018 10:06 AM
Last Updated : 09 Dec 2018 10:06 AM

முகம் நூறு: ஆடைத் தொழிலில் அசத்தும் லீலா!

ஆண்கள் கோலோச்சும் பின்னலாடைத் தொழில்துறையில் சாதனைப் பெண்ணாக ஜொலிக்கிறார் 45 வயது லீலாவதி.  தொழிலில் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஆண்டுக்கு 100 கோடி ஏற்றுமதி வர்த்தகம் செய்து சாதித்துவருகிறார் லீலாவதி.

கோவை சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி. கணவர் திருக்குமரனுக்குச் சொந்த ஊர் ஈரோடு. திருமணத்துக்கு முன்பே பின்னலாடைத் துறையில் ஈடுபட்டுவந்தார் திருக்குமரன். திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி, ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். தொழில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் அந்த நேரம் பார்த்து விலகிச்செல்ல, பெரும் சிரமத்துக்கு ஆளாயினர் லீலாவதி-  திருக்குமரன் தம்பதி.

குழந்தை  ஸ்ரீநிதிக்கு ஆறு மாதமானபோது குடும்பச் சூழலால் பின்னலாடைத் தொழிலுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் லீலாவதிக்கு. தனியொரு பெண்ணாக எவ்வித முன் அனுபவமும் இன்றித் துணிந்து கால்பதித்தார். தொழிலில் கணவருக்குப் பக்கபலமாக இருந்து, தொழில் நிர்வாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியபோது லீலாவதிக்கு 25 வயது! 

திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் 20 பேருடன் நிறுவனத்தை நடத்தத் தொடங்கினார் லீலாவதி. இன்று அவரது நிறுவனத்தில் 1,000 பேர் வேலை செய்கிறார்கள் என்பதே அவர் எட்டியிருக்கும் உயரத்துக்குச் சான்று. 700 ஆண்கள், 300 பெண்கள் எனப் பரந்து விரிந்த பின்னலாடைத் தொழிற்சாலையாக, வடக்கு பூலுவபட்டியில் உள்ளது லீலாவதியின் எஸ்.டி.(ESSTEE)  பின்னலாடை உற்பத்தி  ஏற்றுமதி நிறுவனம்.

mugangal-2jpg

எதிலும் பின்வாங்காத உறுதி

பரபரவென்று பம்பரமாக நிறுவனத்தில் சுழன்றபடி பேசத் தொடங்குகிறார் லீலாவதி. “நான் பி.காம். பட்டதாரி.  1997-ல் திருமணம் நடந்தது. மணம் முடித்த கையோடு, பின்னலாடைத் தொழிலுக்குள் நுழைந்தேன். நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பைப் பெரும் நெருக்கடிக்கு இடையே ஏற்றேன். மிகச் சிறிய அளவில் மிகுந்த சிரமத்தோடு தொழிலைத் தொடங்கினோம். அப்போது வங்கியில் கடனுதவிப் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்தினோம்.

எனக்கு வேலைசெய்யப் பிடிக்கும். நேரம், காலம் பார்க்காமல் வேலைசெய்யத் தொடங்கினேன்” என்று பேசியபடியே அலுவலக வேலையையும் இடையிடையே செய்துவிடுகிறார் லீலாவதி. 

பிறகு பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குப் பின்னலாடையை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருந்த கடன் நெருக்கடியால் தான் மனம் தளரவில்லை என்று சிரித்தபடியே சொல்கிறார் லீலாவதி.

“நம் பிரச்சி னையை நாம்தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதால், அதிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, கடன் பெற்றவர்களிடம், சிறிது சிறிதாகப் பணம் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தினோம். பெண் என்பதைக் காரணமாக வைத்து நான் எதிலும் பின்வாங்க வில்லை. பிரச்சினையை எதிர்கொள்ளத் தொடங்கிய பிறகு,  தொழிலும் மெதுவாக வளரத் தொடங்கியது. இதையடுத்து 50 பேருடன் வடக்கு பூலுவபட்டியில் 2005-ல் பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினோம்” என்கிறார் லீலாவதி.

நேர்மையும் நேரம் தவறாமையும்

நேர்மை, நேரம் தவறாமை ஆகிய இரண்டு இரண்டையும் தொழிலுக்கு மிக முக்கியமானவையாகக்  கருதுவதாகச் சொல்கிறார். தொழிலைத் தொழிலாக மட்டுமன்றி, வாழ்க்கையாகவும் அவர் பார்த்தார்.

“பெண்கள் அலுவலக நெருக்கடியையும் கையாள வேண்டும்; அதே நேரம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் பாவப்பட்டவர்கள்” என்று சொல்லும் லீலாவதி போட்டி நிறைந்த பின்னலாடைத் துறையில் சாதிப்பது பெரும் சவால் நிறைந்ததாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

“லேசாகக் கவனம் திசை திரும்பினால் தொழிலும் தடம்புரளும். கணவர் மார்கெட்டிங் துறையை மட்டும் பார்த்துக்கொண்டதால், அலுவலகத்தில் என்னால் நிர்வாகத்தை நன்கு கவனிக்க முடிந்தது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தும்,   இருபது ஆண்டுகளாக நிர்வாகத்தைச் சிறப்பாகக் கவனித்துவருகிறேன்.

இதை நான்  சாதனையாகக் கருதவில்லை. என் திறமையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.  தொழிலைக் கடந்து சமூகத்தில் பணியாற்றுவதும் தற்போது பிடித்துள்ளது. தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒழியக் கூடாது. அவற்றை எதிர்கொள்ளப் பழகுவதே வெற்றிக்கான வழி” என்று சொல்லும் லீலாவதி, தனது சொல்லுக்கு இலக்கணமாக வாழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x